துறையூர் பெருமாள் மலையில் அடிப்படை வசதிகள் வேண்டி பக்தர்கள் கோரிக்கை !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பெருமாள் மலை என அழைக்கப்படும் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதங்களில் உள்ள ஐந்து சனிக்கிழமைகளிலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொண்டு பக்தர்கள் பெருமாள் அருள் பெற வேண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து அடிவாரம் இறங்குவது வழக்கம்.
இந்நிலையில் பெருமாள் மலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக பெருமாள் மலையில் போதுமான குடிநீர் வசதி இல்லை என்கிறார்கள். சாமி தரிசனம் செய்ய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் பல இடங்களில் மின்விசிறிகள் செயல்படாமல் இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக மலை அடிவாரத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்கென்று அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் பூட்டியபடி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தண்ணீர் வசதியுடன் சுகாதார வளாகத்தை திறந்து விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
மேலும், மலைமேல் கோயில் பிரகாரத்தில் உள்ள கழிவறை பகுதியை சீர்படுத்தி தர வேண்டும் என்கிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக பெருமாள் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 1300 படிக்கட்டின் வழியாக அதிகாலை 3 மணி அளவில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ள நிலையில், மலை ஏறும் வழிகளில் மின் விளக்குகள் செயலிழந்து இருள் சூழ்ந்து கிடப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
சாலை மார்க்கமாக மலையேறும் இரு சக்கர வாகனங்கள் கார்கள் மற்றும் வேன்களுக்கு முறையான கட்டுப்பாடுகளை விதித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கும் பக்தர்கள், கடந்த 2 வருடங்களுக்கு முன் துறையூர் – பெரம்பலூர் பைபாஸ்ரோட்டில் பெருமாள்மலை நுழைவுவாயில் வளைவு பைபாஸ் ரோடு விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது. வெளியூர் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு செல்வதற்கு அடையாளமாக இருந்த நுழைவு வாயில் வளைவு அகற்றப்பட்டதில் இருந்து வெளியூர் பக்தர்கள் பெருமாள்மலை செல்லும் பாதை தெரியாமல் மாற்றுப்பாதையில் சென்று மீண்டும் சுற்றி வரும் நிலை தொடர்ந்தது. இது குறித்து கோயில் நிர்வாகம் விரைவில் நுழைவு வாயில் வளைவு அமைக்கப்படும். அதற்கு போதுமான நிதியும் கையிருப்பில் உள்ளது என தெரிவித்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பெருமாள்மலைக்கு செல்லும் நுழைவுவாயில் வளைவு கட்டப்படாததால் பக்தர்கள் எளிதில் பெருமாள் மலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நுழைவுவாயில் கோபம் அருகிலேயே மலைக்கு சென்று வழிபட முடியாத பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வழிபடும் வகையில் பெருமாளின் பாதங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனையும் அகற்றி மலைக்கு அருகில் வைத்துள்ளதால் சாலை மார்க்கமாக செல்லும் பக்தர்கள் பாதத்தை வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல், பக்தர்கள்நலன் கருதி பெருமாள்மலை நுழைவுவாயில் வளைவையும், பெருமாள் பாதத்தையும் முன்பு போல் விரைவில் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோஷ்.