அங்குசம் பார்வையில் ‘டெக்ஸ்டர்’
அங்குசம் பார்வையில் ‘டெக்ஸ்டர்’ 42/100
தயாரிப்பு : எஸ்.வி.பிரகாஷ். எழுத்து—இயக்கம் : சூரியன் ஜி. கதை : சிவம். நடிகர்-நடிகைகள் : ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரிஷ் பெராடி, ஷோபா ப்ரியா, அஷ்ரப் குருக்கள், ஒளிப்பதிவு : ஆதித்ய கோவிந்தராஜ், இசை : ஸ்ரீநாத் விஜய், எடிட்டிங் : ஸ்ரீனிவாஸ் பாபு, பாடல்கள் : மோகன்ராஜ், ஸ்டண்ட் : அஷ்ரப் குருக்கள் & கே.டி.வெங்கடேஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஷார்வாக்கா. பி.ஆர்.ஓ. : வெங்கட்.
பள்ளியில் படிக்கும் போது சக நண்பன், நண்பிகளால் அவமானத்திற்குள்ளாகிறான் ஒரு சிறுவன். அந்த வயதிலேயே வன்மம் தலைக்கேறி அப்போதே ஒரு நண்பியை கொடூரமாக கல்லால் தாக்கிக் கொல்கிறான். இதைப் பார்த்த நண்பனையும் கொல்கிறான். மீதமிருக்கும் ஒருத்தியைத் தேடுகிறான். அவள் வளர்ந்து யுவதியானதும் அந்த சைக்கோவிடமே சிக்குகிறாள். அப்படிச் சிக்கியவள் கதி என்ன? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘டெக்ஸ்டர்’.
ஹீரோ ராஜீவ் கோவிந்திடமிருந்து தான் படம் ஆரம்பமாகிறது. அதீத போதைக்கு அடிமையாகி, ஒருவித மனப்பிறழ்வுக்குள்ளாகிறார். அவ்வப்போது காதலியின் நினைவு மனசுக்குள் வந்து அவரை பாடாய்படுத்துகிறது. நண்பனின் இந்த நிலையச் சகிக்க முடியாமல், டாக்டர்களின் உதவியுடன் ஓரளவு தேற்றுகிறான் நண்பன் அபிஷேக் ஜார்ஜ். ராஜீவுக்கு இப்போது தங்கச்சி என்ற புது உறவு கிடைக்கிறது. ஓரளவு புத்துணர்ச்சி கிடைக்கும் நேரத்தில் அந்த சைக்கோவிடம் ஹீரோவும் சிக்குகிறார்.
அப்போது தான் அவருக்கு தனது சின்ன வயது நண்பன் தான் இப்போது சைக்கோ கொலையாளி என்ற விபரமும் அவன் தான் தனது காதலியைக் கொன்றவன், ஏன் கொன்றான் என்ற விபரமும் தெரிகிறது.
கதைக்குள் ஹரிஷ் பெராடி எண்ட்ரியானதும் தான் படத்திற்கு க்ரைம் த்ரில்லர் எஃபெக்ட் கிடைக்கிறது. ஹீரோ ராஜீவ் நெடுநெடு உயரமும் கும்மென ஜிம் பாடியுமாக ஜம்முன்னு தான் இருக்கிறார். ஆக்ஷன் சீனும் நம்பும்படியாக இருக்கு. இவரின் காதலியாக வரும் சித்தாரா விஜயனைவிட , தங்கையாக வரும் யுக்தா பெர்வி தான் கவனம் ஈர்க்கிறார்.
பட்ஜெட் கம்மி என்பது மேட்டரே இல்லை. கதையின் அடித்தளமும் குழப்பமில்லாத திரைக்கதையும் இருந்தால், நல்ல விஷுவல் ட்ரீட் கொடுக்க முடியும் என்பதை கதாசிரியர் சிவமும் டைரக்டர் சூரியனும் புரூஃப் பண்ணியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆதித்ய கோவிந்தராஜும் இசையமைப்பாளர் ஸ்ரீநாத் விஜயனும் இந்த ‘டெக்ஸ்டரு’க்கு நன்றாகவே ஹெல்ப் பண்ணியுள்ளார்கள்.
‘டெக்ஸ்டர்’ சின்ன கல் , பெரிய மாங்காய்.
–மதுரை மாறன்