இரவில் முகமூடியுடன் உலா வரும் மர்ம நபர்கள் – அச்சத்தில் துறையூர் மக்கள் !
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள 23 மற்றும் 24 வார்டுகளுக்கு அருகில் உள்ளது செல்வம் நகர்,பொதிகை நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் முகத்தை மூடிக் கொண்டு மர்ம நபர்கள் உலா வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
துறையூர் நகராட்சிக்குட்பட்ட 23, 24 இந்த இரண்டு வார்டுகளுமே துறையூர் புறவழிச் சாலையில் மிக அருகாமையில் அமைந்துள்ள வார்டுகள் ஆகும் இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் இரவில் தெருவிளக்குகள் கூட இல்லாமல் வசித்து வருகிறார்கள்.
இந்த இரண்டு வார்டுகளிலுமே குறுக்கு சந்துகள் அதிகமாக உள்ளது இந்த குறுக்குச் சந்துகளில் அதிக அளவில் மர்ம நபர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துவது வழக்கம் இந்நிலையில் நேற்று முன்தினம் 22.02.2023 நள்ளிரவு துறையூர் புறவழிச்சாலையில் அருகாமையில் உள்ள செல்வம் நகரில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது.
இந்த வீடுகள் ஒவ்வொன்றும் எதிரெதிரே அமைந்துள்ளது இந்த வீடுகளில் திடீரென்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கதவைத் தட்டி உள்ளார்கள்.
அப்போது மாடியில் படுத்திருந்த ஒரு வீட்டின் உரிமையாளர் லைட்டை போட்டு கூச்சலிட்டுள்ளார் . இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வெளியே வருவதற்குள் தப்பி ஓடி விட்டார்கள்.இந்த சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே துறையூர் புறவழிச் சாலை மற்றும் முசிறி பிரிவு ரோடு பகுதி, திருச்சி ரோடு பகுதிகளில் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவு திருட்டு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் , “இரவு நேரத்தில் இங்கு பெண்கள் கடைக்கு கூட செல்ல முடியாத அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது , பகல் நேரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளை மர்ம நபர்கள் நோட்டமிடுவது , ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் உள்ள வயதான பெண்களிடம் நூதன முறையில் திருட்டு சம்பவங்களை நடத்துவது மேலும் மது அருந்திவிட்டு வீடுகளில் வந்து கதவைத் தட்டி ரகளையில் மர்ம நபர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும் இந்த பகுதி முழுவதும் நள்ளிரவுக்கு மேல் சமூக விரோத குற்றங்கள் அதிகளவில் நடக்கும் இடமாக அமைந்துள்ளது.
இந்த இடத்தில் போலீசார் இரவு நேரங்களில் சம்பிரதாயத்திற்கு கூட ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. போலீசாரிடம் பொதுமக்கள்பலமுறை இது பற்றி கூறியும் இதுவரை எந்தவித ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபடாமல் இருந்து வருகிறார்கள் .இந்த பகுதியில் அதிக அளவு சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் ஆனால் துறையூர் போலீசார் தங்கள் ரோந்துப் பணிகளை புறவழிச்சாலை இணைக்கும் பகுதி, முசிறி பிரிவு ரோடு, பாலக்கரை உள்ளிட்ட மெயின் பகுதிகளிலேயே முடித்து விடுகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் இதுவரை எவ்வித ரோந்து பணியும் ஈடுபடாமலும் அதே நிலையில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.போலீசார் கண்டுகொள்ளாத பட்சத்தில் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளிலும், இரவு நேரங்களில் ஆண்களே பாதுகாப்புபணியில் ஈடுபட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
-ஜோஸ்