சர்க்கரை நோயிலிருந்து விடுதலை – முகநூலில் மெகா மோசடி !
தமிழர்களின் உணவு முறையிலும், உணவு உண்ணும் நேரங்களிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 25 வயது தொடங்கி நீரழிவு என்னும் சர்க்கரை நோய் எல்லாரையும் ஆட்கொள்கிறது. அதற்கு முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உடல் பருமன்; நீண்ட நாள் ஆறாத புண்கள்; சீழ்பிடித்து கால் விரல்கள், கால்களை வெட்டியெடுக்க வேண்டிய நிலை ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ”சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல. இன்சுலின் சுரப்பது என்பதன் குறைபாடுதான். அதற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டாம். 30 நாளில் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெறலாம்” என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் முகநூலில் புற்றீசல் போல முளைத்திருக்கின்றன. இந்த விளம்பரங்களில் எல்லோரையும் சுண்டியிழுக்கும் செய்தி, சர்க்கரை நோய் ஏற்பட்டால் முதலில் தாம்பத்ய ஈடுபாடு குறையும் என்பதுதான்.
இணையவழியாகவே, கால் சென்டர் போல கஸ்டமர்களை தொடர்புகொண்டு இணையவழி கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகளை வழங்குவதோடு, அதற்கென தனி கட்டணங்களையும் வசூலித்துவருகிறார்கள். இவர்களுக்கென்று மருத்துவமனை கிடையாது. நேரில் சந்திக்க முடியாது. உண்மையில் அவர்கள் முறையாக மருத்துவம் படித்திருக்கிறார்களா, என்பதைக்கூட உறுதிபடுத்த முடியாது. ஆனாலும், சகட்டு மேனிக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறார்கள்.
இணைய வழியில் படம் போட்டு, பாகங்கள் குறித்து ஏதோ புதிய மந்திரத்தைச் சொல்லி சர்க்கரை நோயை நீக்குகிறோம் என்பதுபோல் சொல்லி தொகை கேட்பது ஒருவகையில் மோசடியே.
— ஆதவன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.