அங்குசம் பார்வையில் ‘டீசல்’
தயாரிப்பு: ‘தேர்ட் ஐ எண்டெர்டெய்ன்மெண்ட்’ தேவராஜுலு மார்க்கண்டேயன், டைரக்ஷன் : சண்முகம் முத்துசாமி, ஆர்ட்டிஸ்ட் : ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய்குமார், வினய், கருணாஸ், விவேக் பிரசன்னா, நாசர், போஸ் வெங்கட், அனன்யா, சச்சின் கெடேகர், தங்கதுரை, மாறன், ரமேஷ் திலக், அபூர்வா சிங். ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ்.பிரபு, இசை : திபு நைனன் தாமஸ், எடிட்டிங் : சான் லோகேஷ், ஸ்டண்ட் : ஸ்டண்ட் சில்வா, ராஜசேகர், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பெட்ரோல், டீசல் மாஃபியாக்களைப் பற்றிய கதை. பூர்வீக குடிகளான வடசென்னை மக்களின் போராட்டக் கதை. இந்தக் கதை 1979-ல் நடக்கிறது. வடசென்னை மீனவர்களை விரட்டியடித்துவிட்டு அந்த இடத்தில் துறைமுகம் அமைக்கும் பதான் என்கிற கார்ப்பரேட் காவாலிக்கு உடந்தையாக கடற்கரையையொட்டி பெட்ரோல் கொண்டு போகும் மெகா பைல் லைனை அமைக்கிறது அரசு. இதை எதிர்த்துப் போராடும் மீனவ மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வேறுபகுதிக்கு விரட்டுகிறது அரசு. அந்த இடத்தையும் குறிவைக்கிறான் பதான் [ அதாங்க நம்ம கேடியின் தோஸ்து அதானியைத் தான் பதான் ஆக்கியிருக்கிறார் நம்ம டைரக்டர் சண்முகம் முத்துசாமி]
கார்ப்பரேட் & கவர்மெண்ட் கள்ளக் கூட்டணியை எதிர்க்கும் போராட்டத்தில் மக்களுடன் நிற்கும் டீசல் வாசு [ ஹரிஷ் கல்யாண்] வெற்றி பெற்றாரா? இதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘டீசல்’.
நம்மையெல்லாம் எப்படியெல்லாம், எந்தெந்த வழிகளிலெல்லாம், கார்ப்பரேட் காவாலிப்பயலுகளுடன் கூட்டணி வைத்து டெல்லியின் கேடிகள் சாகடிக்கிறார்கள் என்பதை பொளேரென போட்டுத் தாக்கியிருக்கார் டைரக்டர் சண்முகம் முத்துசாமி.வெகுஜன மக்களுக்கான சினிமாவை சொன்னதற்காக, அந்த மக்கள் பக்கம் நின்று சொன்னதற்காக தோழர் சண்முகம் முத்துசாமிக்கு சபாஷ் போடலாம். ஆனால் மக்களின் மனசுக்குள் பதிய வைப்பதில் சற்றே சறுக்கியிருக்கிறார் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
இதற்கு முக்கியக் காரணம் இந்தக் கதையில் ஹீரோயின் வேண்டும் என்பதற்காகவே அதுல்யா ரவியைக் கொண்டு வந்து, ஹரிஷ் கல்யாணுக்கும் அவருக்குமிடையே லல் எபிசோட் வைத்து, கனவில் கடல்கன்னி என அரை மணி நேரம் ஸ்கிரீன் பிரசெண்டெல்லாம் கலப்பட பெட்ரோல், டீசல் போலாகிவிட்டது. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சண்முகம் முத்துசாமி சொன்னதெல்லாம் பகீர் உண்மைகள்,மக்களை வதைக்கும் கேடிகளின் சதிகள்.
ஆனால் ஹீரோ ஹரிஷ் கல்யாணுக்கு இது முக்கியமான சினிமா. கண்டெண்ட் ரீதியாகவும் ஆக்ஷனில் அதிரடியாகவும் சுத்தமான பெட்ரோல், டீசல் போல இருக்கிறார் ஹரிஷ். குரூடாயிலைக் கடத்தி, பதானுக்கு விற்பது, பிறகு அந்த பதானையே பதறவைக்கும் திட்டம் போடுவது என ஹரிஷ் கல்யாணின் நடிப்பு அடுத்த கட்டப்பாய்ச்சலாக இருக்கிறது.
ஹரிஷின் வளர்ப்பு அப்பாவாக சாய்குமார், அவரின் சிஷ்யர் பொட்டு சேகராக கருணாஸ், வில்லன்களாக விவேக் பிரசன்னா, கெட்ட போலீஸ் ஏசி மாயவேலாக வினய், அமைச்சராக போஸ் வெங்கட், முதலமைச்சராக நாசர் என எல்லோருமே கதைக்குத் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சீனியர் கேமராமேன்களான ரிச்சர்ட் எம்.நாதனும், எம்.எஸ்.பிரபுவும் கூட்டணி அமைத்து டீசல் மாஃபியாக்களின் இருட்டு திருட்டு உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். “பச்சை குத்திக்கிறேன் உன்னோட பேரை” பாட்டிலும் பின்னணி இசையிலும் திறமை காட்டியிருக்கார் மியூசிக் டைரக்டர் திபு நைனன் தாமஸ்.
தற்போது இந்திய வாகன சந்தைகளில் அதிகம் வந்து கொண்டிருக்கும் மின் வாகனங்களுக்கான மூலப் பொருளான லித்தியம் வரை அம்பலப்படுத்திய இந்த ‘டீசல்’ சினிமாவை மக்கள் பார்க்க வேண்டும், கேடிகளின் அதர்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.