மனிதத்தை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ஞாலன் ஜெயராமனின் “பிடிமண்”!
இசை, கூத்து, இயல் மூன்று பரிமாணங்களும் கொண்ட முத்தமிழின் அடுத்த பரிமாணமே இத்திரைப்படம். முத்தமிழ் வித்தகராக இருந்தால் மட்டுமே மக்களின் மனங்களுடன் பேசும் திரைப்படத்தை ஒரு திரைப்பட இயக்குநரால் உருவாக்க முடியும்.
திரு. ஞாலன் ஜெயராமன் அவர்கள் தமிழின் மூன்று பரிமாணங்களையும் நன்கு உணர்ந்த படைப்பாளி என்பதை அவரின் முதல் திரை முயற்சியான “பிடிமண்” வெளிப்படுத்துகிறது.
சென்னையில் நடைபெற்ற 23வது சென்னை பன்னாட்டு திரைப்பட (ICAF – Chennai 23rd CIFF) விழாவில் தமிழ்த் திரைப்படப் போட்டிப் பிரிவிற்கு (Tamil Feature Film Competition Section) தேர்வாகியிருந்த 12 படங்களில் ஒன்றுதான் “பிடிமண்”.
2025 டிசம்பர் 17 அன்று மாலை 6.45 மணிக் காட்சியாக சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்ட “பிடிமண்”, அரங்கில் இருந்த அனைவர் நெஞ்சையும் சுமார் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வருடிக் கொண்டே இருந்தது.
பார்வையாளர்களின் மனங்களுடன் திரைப்படம் பேசுமா என்று பலரும் வியக்கலாம்.
பொழுதுபோக்கு, கேளிக்கை ஆகியவற்றுக்கானதே திரைப்படம் என்று பொதுவாக கருதப்படும் காலக் கட்டத்தில், சமூக உரையாடலுக்காக திரைப்படம் உருவாக்க முற்பட்ட இயக்குநர் திரு. ஞாலன் ஜெயராமன் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். படத்தின் தயாரிப்பாளர் போற்றுதலுக்குரியவர்.
வணிகச் சந்தைக்கு மக்களின் வாழ்க்கைப் போராட்டம் நகைப்பிற்குரியதாகத் தோன்றலாம்.
கண்ணில் பட்டதெல்லாம் அனுபவித்திட வேண்டும் என்று கருதும் நுகர்வோராகிப்போன மனிதர்களின் உளவியலுக்கும், மனிதத் தன்மையுடன் வாழும் மனிதர்களின் உளவியலுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு “பிடிமண்”.
இறுதி வரை மனித்தன்மையுடனே வாழும் தாயும் தந்தையும். மனிதத் தன்மையில் இருந்து நுகர்வுத் தன்மைக்கு மாற நிர்பந்திக்கப்படும் மகனின் மனப் போராட்டத்தையும் தத்ரூபமாக திரையில் வெளிபடுத்த முயன்று வென்றுள்ளார் படத்தின் இயக்குநர்.
பள்ளிக் கல்வியை சிதைக்கும் சந்தையின் சூழ்ச்சியே “நீட் ” நடைமுறை. “நீட்” எனும் வணிகத்தின் சூதாட்டம் மக்களின் வாழ்க்கையுடன் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை எதார்த்தமான வாழ்வியல் மூலம் மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
“நீட்” குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம் தருவதோடு, பெற்றோரின் அனைத்து நிதி ஆதாரத்தையும் ‘பயிற்சி’ என்ற பெயரில் சுரண்டிவிடுகிறது என்பதை ஓரளவு மக்கள் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளனர்.
“நீட்” விளைவாக நடக்கும் மக்கள் போராட்டம், நீதிமன்ற வழக்குகள், பன்னாட்டு நிதி மூலதனத்தின் இலாப வெறிக்கு உள்ளாக்கப்பட்டு சீரழிக்கப்படும் மாணவர்கள் எதிர்காலம் ஆகியவை குறித்து பல திரைப்படங்கள் பேசி உள்ளன.
இவை அனைத்தையும் தாண்டி “நீட்” எனும் நடைமுறை உருவாக்கும் சமூகச் சீரழிவை இந்த படம் பேசுகிறது.
மனிதர்களின் உணர்வுகள் குறித்தோ, சமூக சூழல் குறித்தோ, மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ, இயற்கையைக் காத்து, உணவைத் தரும் விவசாயம் குறித்தோ எந்த கவலையும் இல்லாமல் மக்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதை; படித்தவர்கள் உட்பட ஓரளவு வாய்ப்புள்ள அனைவரும் நியாயப்படுத்திப் பேசும் பரிதாபமும், பன்னிரண்டாண்டு பள்ளிப் படிப்பை செல்லாக் காசாக்கும் “நீட் ” நடைமுறையின் கொடூர முகத்தையும் இதைவிட இயல்பான சூழலில் வெளிப்படுத்தி விட முடியாது என்ற அளவில் “பிடிமண்” சமூக உளவியலை மிக அழகாகப் பேசுகிறது.
“நீட்” நடைமுறையில் 420 பெற்ற மாணவர் தனியார் கல்லூரியில் சேர பணம் இல்லாமல் தவித்து நிற்கும் நிலையில், அவரை விடக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவரின் தந்தை, கல்லூரி நிர்வாகம் கேட்ட பணத்தை அள்ளித் தந்து மகனை கல்லூரியில் சேர்த்துவிட்டு, தனது மகனுக்கு முன் கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டிய மாணவரின் தந்தையிடம் வந்து உபதேசம் செய்யும் காட்சி, நாம் எந்தளவு நுகர்வோர் மனநிலையில் வாழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது.
மொத்தச் சொத்தையும் விற்று, மகனை மருத்துவப் படிப்பிற்கு அனுப்பும் தாய் தனது மகனிடம் “நல்லா படிச்சு எல்லாருக்கும் உதவி செய்யப்பா” என்று கூறும் காட்சி உழைக்கின்ற மக்கள் மருத்துவப் படிப்பை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
மருத்துவம் படித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்கிற பணக்காரர்களின் மனநிலை நுகர்வுத்தன்மையின் வெளிப்பாடு. மருத்துவம் படித்தால் மக்களுக்கு உதவலாம் என்பது உழைக்கின்ற மக்களிடம் இருக்கும் மனிதத்தின் வெளிப்பாடு. இரண்டு வகை மக்களையும் ஓரே காட்சியில் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர்.
கியூபாவில் எல்லோரும் மருத்துவருக்கு படிக்கலாம். மருத்துவத்தை சேவையாக செய்து கொண்டு, தனது வாழ்வாதாரத்திற்கு ஊதியம் ஈட்ட வாகனம் ஓட்டலாம்.
Profession (கற்ற தொழில்) is different from occupation (ஊதியம் ஈட்ட செய்யும் வேலை / பணி) என்பதை கியூபாவில் நேரில் உணர்ந்தவர் தீக்கதிர் டிஜிட்டல் எடிட்டர் கோயம்புத்தூரில் வசிக்கும் கண்ணன்.
அவரின் கியூபா பயண அனுபவத்தைக் கேட்டால், கியூபாவில் உயர் சிகிச்சைத் தரும் மருத்துவர் ஒருவர் வாடகை வண்டியின் ஓட்டுனராக பணியாற்றிய விவரத்தை இன்னும் விரிவாக சொல்வார்.
வணிகச் சந்தைக்கு இதுவெல்லாம் தெரியாது. ஆனால், உழைக்கும் மக்களுக்கு இது நன்றாக தெரியும் என்பதை ஞாலன் ஜெயராமன் அவர்கள் “பிடிமண்” மூலம் நமக்கு புரியவைக்கிறார்.
இவ்வளவு ஆழமான சமூகச் சிக்கலைப் பேசும் திரைப்படம் 23வது சென்னை பன்னாட்டு திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. “பிடிமண்” தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதன் வெளிப்பாடுதான் போட்டிப் பிரிவிற்கு தேர்வானது.
வியாபாரத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடக்கும் திரைப் போட்டிகளில் மனதை வருடும் உலகத் திரைப்பட வரிசையில் இடம் பெறும் “பிடிமண்” திரைப்படத்திற்கு பரிசு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? போட்டியில் “பிடிமண்” எந்த பிரிவிலும் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இல்லை. தேர்வாகி இருந்தால்தான் “அதிசயம்”.
படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கஞ்சிச் சட்டியை தந்த நபர் முதல் படத்துடன் தொடர்புள்ள அனைவர் பெயரையும் படத்தின் நிறைவில் பதிவிட்டுள்ளதால், படம் தொடங்கியது முதல் நிறைவு வரை பார்வையாளருடன் உரையாடலை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருந்தது “பிடிமண்”.
தீவிர உரையாடலில் இருந்த பார்வையாளர்களால், ரசிகர் மனநிலையில் இருந்து சிறந்த காட்சிகளுக்கு கைத்தட்ட இயலவில்லை.
படம் முடிந்த பின்னர், மிகப் பெரும் குற்ற உணர்ச்சியில் மனம் செய்வதறியாது திகைத்து நின்ற காரணத்தால், படத்தின் நிறைவில் கைதட்டவும் இல்லை, எழுந்து போகவும் இல்ல.
சில நிமிடங்கள் கழித்தே பெரும் பகுதி பார்வையாளர்கள் இருக்கையை விட்டு எழுந்தனர்.
படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் கதாபாத்திரத்தில் வாழ்ந்தனர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், லைட்டிங் உள்ளிட்ட ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் உணர்வுப் பூர்வமாக தங்களின் பங்களிப்பைத் தந்துள்ளது படத்தின் பெரு வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
“பிடிமண்” உலகத் திரைப்பட வரலாற்றில் தடம் பதித்த திரைப்படம் என்பதே எனது கருத்து. பல நாடுகளில் பரிசு வென்ற படம். மேலும் பல சிறந்த பாராட்டுகளைப் பெறும்.

இத்தகையப் படம் தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் திரையரங்குகளில் காட்சியில் இல்லை என்பதே மிகப் பெரும் வேதனை.
மக்கள் அனைவரும் பார்க்க திரையரங்குகளில் இந்த படம் வெளிவர வேண்டும். சமூகமாக மக்கள் கூடிப் பார்க்கும் போது, மிகப் பெரிய சமூக உரையாடலுக்குப் “பிடிமண்” வழிவகுக்கும்.
திரைப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். வெற்றிக்கான அளவுகோல், திரைப்படத்தைத் திரையிட்ட பிறகு இயக்குநர், தயாரிப்பாளர் இருவர் முகத்திலும் வெளிப்படும் மனதின் மகிழ்ச்சி.
அத்தகைய மகிழ்ச்சியை இயக்குநர், தயாரிப்பாளர் இருவருடன், படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவர் முகத்திலும் சென்னை சத்யம் திரையரங்கில் பார்க்க முடிந்தது. படம் வெற்றிப் பெற்றதன் வெளிப்பாடே மனம் மகிழ்ந்து முகம் மலர்ந்தது.
— பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு








Comments are closed, but trackbacks and pingbacks are open.