டி.ஜே. பார்ட்டிகளுக்குத் தடை இல்லை – போலீசாரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!
கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் டி.ஜே.பார்ட்டி என்ற போர்வையில் போதை பொருள் பயன்பாடும் கடத்தலும் மாநிலத்தில் பெருமளவில் நடப்பதாக போலீசார் கருதினர். மேலும், இது சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழியை வகுப்பதாகவும் கூறிய அவர்கள் இரவு 11 மணிக்கு மேல் இதுபோன்ற விருந்துகளுக்கு தடை விதித்தனர்.
போலீசாரின் இந்த முடிவுக்கு கேரளத்தில் உள்ள பெரிய ஓட்டல்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் கேரளா உயர்நீதி மன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி முரளி புருஷோத்தமன் விசாரித்து போலீசாரின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
கேரளாவில் உள்ள 5 நட்சத்திர பார் ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் டி.ஜே. பார்ட்டிகள் மற்றும் பிற கொண்டாட்டங்கள் நடத்த எந்த தடையும் இல்லை.
கலால் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற இந்த ஓட்டல்களின் செயல்பாடுகளை போலீசார் தடுக்கக்கூடாது. அதற்கு போலீசாருக்கு அதிகாரம் கிடையாது. செயல்பாட்டு நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அரசு ஒரு புதிய சட்டத்தையோ விதியையோ வகுக்க வேண்டும். அந்த வீதி அமலுக்கு வந்த பின்னரே போலீசார் இதில் தலையிட முடியும்.
குற்றங்கள் அதிகரித்து வந்தால் நிறுவனங்களின் செயல்பாடுகளை மூடுவதற்கு பதிலாக அந்த குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.