பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா..!
பொதுச் செயலாளராகிறார் பிரேமலதா..!
2005 செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று மதுரையில் நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியானது அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே தேர்தலை சந்தித்து 8 முதல் 10 சதவீதம் வரை வாக்குகளை பெற்று வந்தது. தொடர்ந்து தனித்து நின்றால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் கடந்த 2011ம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெ. தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக.
விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனை மட்டுமே கொண்டு 7 ஆண்டுகளில் எதிர்கட்சி தலைவர் இடத்தை கைப்பற்றும் வளர்ச்சியை பெற்றது. ஆனால் அதையடுத்து ஜெ.வுடன் நடைபெற்ற மோதலால் அதிமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு மீண்டும் தனித்து களம் காண தொடங்கியது. இது தேமுதிகவிற்கு அடுத்தடுத்து இறங்குமுகத்தை தந்தது.
2016ல் திராவிட கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் வைகோ, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இணைந்து ‘மக்கள் நலக்கூட்டணி’ என்ற பெயரில், ‘விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்’ என்ற அறிவிப்புடன் களம் இறங்கி முழுமையான தோல்வியை தழுவியது.
இதையடுத்தே தலைவர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு, கட்சியை பலவீனப்படுத்தியது. அவரது குளறலான பேச்சு அவரை கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கியது.
விஜயகாந்தின் தலையீடின்றி அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டிற்கு கட்சி சென்றதும் மேலும் பலவீனம் அடையத் தொடங்கியது. கூட்டணி பேரங்களில் அவர்களின் நிலை அறியாமல் பேசிய அகங்காரமான பேச்சு கட்சிகள் மத்தியிலும் அவர்களை ஒதுக்கும் நிலைக்கு ஆளானது. தேமுதிகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பி அக்கட்சியில் தங்கள் சொந்த காசை செலவழித்து கட்சி பொறுப்பில் வலம் வந்தவர்கள் எல்லோரும் பிரேமலதா, சுதீஷின் அணுகுமுறையால் பலரும் கட்சியிலிருந்து வெளியேறினர். நாளொரு தளர்ச்சியும் பொழுதொரு வீழ்ச்சியுமாக கட்சி அந்திம காலத்தை நோக்கி செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் தேமுதிகவை கணித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நீரழிவு பாதிப்பினால் அவரது கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட செய்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை தந்தது. என்றாலும் முன்பு போல் இல்லாமல் கட்சியினரை கண்டதும் அவர்கள் பெயர் சொல்லி அழைத்து பேசுவது, விஜயகாந்தின் உடல் நலம் முன்னேற்றம் கண்டு வருவதன் அறிகுறியாக அவரது நலம்விரும்பிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், விரைவில் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை நடத்துவது என்றும் அதற்கு முன்பு உட்கட்சித் தேர்தலை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் பொருளாளர் பதவி வகித்து வரும் பிரேமலதா விரைவில் கட்சியின் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று ஒருசாரார் கூறிய நிலையில், ‘தலைவர்’ என்றால் அது விஜயகாந்த் மட்டுமே… எனவே கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா அறிவிக்கப்படுவார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக தற்போது தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு தலைமை அறிவித்திருப்பதாக தேமுதிகவினர் கூறுகின்றனர். பொறுப்பாளர்கள் நியமனத்தை அடுத்து பொதுக்குழு கூடி பிரேமலதா பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவார் என்கின்றனர்.
கட்சி தேய்ந்து வருவதாக கூறிய நிலையில் அறிவிக்கப்பட்ட உட்கட்சி தேர்தலில் பொறுப்புகளை பெற அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியிட களமிறங்கியுள்ளது இன்னும் கட்சி உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை காண்பிப்பதாக உள்ளது.
கட்சியினரின் இந்த உற்சாகத்தை தக்க வைத்து கட்சியின் எதிர்காலம் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பு இனி பொதுச் செயலாளராகப் போகும் பிரேமலதாவின் நடவடிக்கையில் தான் இருக்கிறது.!