‘மோடி’ அரசின் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி… வித்தை காட்டும் அதிகாரிகள்… அலைகழிக்கப்படும் மக்கள்…
-காவிய சேகரன்
‘மோடி’ அரசின் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி…
வித்தை காட்டும் அதிகாரிகள்… அலைகழிக்கப்படும் மக்கள்… நடவடிக்கை
எடுப்பாரா கலெக்டர்?
2022ம் ஆண்டுக்குள் அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக, ஜூன் 2015ல் தான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டம். நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு PMAY என்றும் கிராமப்புற மக்களுக்கு PMAY என்ற பெயரிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு PMAY திட்டத்தின் கீழ் வீடுகட்டி தருவதாகக் கூறி திருச்சி நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடற்ற பயனாளர்கள் 184 பேரிடமிருந்து ரூ.2,50,000 பணத்தை வசூலித்து உள்ளது குடிசைமாற்று வாரியம். ஆறு ஆண்டுகளாகியும் வீடும் வரவில்லை. கட்டிய பணமும் திரும்ப கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராடி வருகிறார்கள் பணம் கட்டி காத்திருக்கும் பயனாளிகள்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிசை மாற்று அதிகாரிகளிடம் மட்டும் 10 முறைக்கு மேல் மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் காத்திருந்த போது நாம் அவர்களை சந்தித்து பேசினோம்.
”நாங்கள் முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள். எங்களுக்கு வண்ணாரப்பேட்டை பகுதியில் மோடி அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருகிறோம் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சொன்னாங்க. அதற்காக அவர்கள் எங்களிடம் ரூ.2,50,000 கேட்டாங்க. நாங்களும் கடனை உடனை வாங்கி கட்டினோம். பணம் கட்டி 6 வருடம் ஆச்சு. இதுவரை வீடு கட்டித் தரவில்லை. வாங்கிய கடனுக்கு நாங்கள் வட்டிக் கட்டிக்கிட்டு இருக்கோம். பணம் கட்டியவர்கள் எல்லாம் அன்றாட கூலி வேலை செய்பவர்கள். தினக்கூலியாக இருந்து ஏதோ அரசாங்க வீடு தராங்கன்னு சொல்லி கஷ்டப்பட்டு கட்டியிருக்கோம்.
நாங்கள் பணம் கட்டியது குடிசை மாற்று வாரியத்திடம். அங்கே போய் கேட்டா, “கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்கச்” சொல்றாங்க. கலெக்டர் ஆபீஸில் கொடுத்தா, “குடிசை மாற்று வாரியத்திடம் கொடுங்கனு“ சொல்லுறாங்க, ஆறேழு வருசமா போராடிகிட்டே இருக்கோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கெல்லாம் ஏழைங்க. கஷ்டப்பட்டு உழைச்சி சாப்பிடறோம். வயித்துக்கு சரியா சாப்பிடாம கூட இல்லாத வீட்டுக்காக கடன் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டிட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி தவிக்கிறோம்” என்றனர்.
இந்த திட்டம் எங்களுடையது. நாங்கள் தான் நிதி ஒதுக்கினோம் என மத்திய மாநில அரசுகள் போட்டிப்போட்டு கொள்வதில் தான் முன்வரிசையில் நிற்கின்றன. திட்டம் குறித்த அறிவிப்புகள் எல்லாம் டிஜிட்டலில் வண்ணமாய் மின்னுகிறது. ஆனால் நிஜத்தில், “சர்க்கரை“ என பேப்பரில் எழுதி நக்கத் தான் முடிகிறது, திட்டத்தின் செயல்பாடுகள்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போல், அரசே பொது மக்களிடம் காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றும் தொனியில் செயல்பட்டு வருவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து தீர்வு காண அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.!
-காவிய சேகரன்