பொறுப்புக்கு ஏங்கும் வாரிசு ; மௌனம் காக்கும் தலைமை – திமுக அரசியல்!
திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்த் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேசமயம் கட்சியில் பொறுப்பு பெருவதற்காக தற்போது தந்தையின் வழியாக தலைமையிடம் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் திமுக தலைமையோ கதிர் ஆனந்தின் கோரிக்கை மீது எந்தவித முடிவையும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறதாம்.
இதுகுறித்து முக்கிய உடன்பிறப்பு ஒருவருடன் கேட்டதற்கு துரைமுருகன் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அமைச்சராகவும் உள்ளார். மேலும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில் கதிர் ஆனந்துக்கு மேலும் பொறுப்பு கொடுப்பது சரியாக இருக்காது. அதுமட்டுமல்லாது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் கதிர் ஆனந்த் செயல்பாடுகள், உள்ளடி வேலைகள், அன்று திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக நடத்திய போராட்டம் இவையெல்லாம் பார்த்த தலைமை கதிர் ஆனந்தை கண்காணிக்க தொடங்கிவிட்டது. மேலும் மாவட்ட செயலாளரே கதிர் ஆனந்த் மீது குற்றம் சாட்டியிருக்கிறாராம். மேலும் கதிர் ஆனந்த், துரைமுருகனை போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட கூடியவராக இருக்கிறார். அதனால் தற்போது கதிர் ஆனந்த் விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க தலைமை தயாராக இல்லையாம்.
இது மட்டுமல்லாது புதுக்கோட்டை மணல் மாபியாக்களோடு இணைந்து கொண்டு அவர்களுக்கே ஒப்பந்தத்தை ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் துரைமுருகனின் பெயர் அடிப்பட கதிர் ஆனந்த் தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதைத் தொடர்ந்து முதல்வர் தலையிட்டு குவாரிகளுக்கான ஒப்பந்தத்தை முறைப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் அவருடைய சொந்த மாவட்டத்திலேயே கதிர் ஆனந்திற்கு எதிர்ப்புகள் இருப்பதால் மாவட்ட ரீதியாக பொறுப்பு வழங்கினாலும் அது கட்சிக்குள் சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்ற நிலை இருப்பதால் தலைமை மவுனமாக இருப்பதாக கூறினார் அந்த முக்கிய உடன்பிறப்பு.