கருணாநிதி சிலையில் கருப்பு சாயம் ! திமுகவினர் ஆர்ப்பாட்டம் !
சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பெரியார் மேம்பாலம் துவங்குவதற்கு அருகில் அண்ணா பூங்கா உள்ளது. இதன் அருகில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகள் அமைந்துள்ளது.
பிறந்தநாள் மற்றும் முக்கிய கட்சி நிகழ்ச்சியில் தலைவர்கள் கலந்து கொள்ளும் முன்பாக சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்வர். இந்த நிலையில் இங்கு அமைந்துள்ள கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் திமுகவினர் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.