திமுக எம்எல்ஏவை மிரட்டிய வைகோ – மருத்துவமனையின் தரம் உயர்த்த மல்லுக்கட்டு !
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியிருக்கிறது. எம்எல்ஏவாக ராஜா செயலாற்றி வருகிறார், இவர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாய மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தரும்படி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரம் உயர்த்தப்பட்டால் அருகில் இருக்கக்கூடிய 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள் என்றும், மக்களுக்கு உயர்தர சிகிச்சை அருகாமையில் கிடைக்க வழியாக இருக்கும் என்றும் கூறி கோரிக்கையை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை மேம்படுத்த உத்தரவிட்டார். இதனடிப்படையில் சாயமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப் பட்டு வருவதாக கூறப் பட்டது.
இந்நிலையில் கலிங்கப்பட்டியை சேர்ந்த மதிமுகவினர், கலிங்கப்பட்டியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரத்தை மேம்படுத்த கோரிக்கை வைத்தனர். இதனால் வைகோ தரப்பினருக்கும் திமுக எம்எல்ஏ ராஜா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக எம்எல்ஏ ராஜாவை தொடர்புகொண்டு ‘என்னை எதிர்த்து அரசியல் செய்கிறாயா….. உன் அரசியல் வாழ்க்கையை தொலைத்து விடுவேன்” என்று கூறி மிரட்டியதாக திமுக தரப்பினர் கூறுகின்றனர்.
இதனால் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கலிங்கப்பட்டியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பணிகளை செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம்.
திமுக எம்எல்ஏவை மதிமுக பொதுசெயலாளர் தொடர்பு கொண்டு மிரட்டயதாக கூறப்படும் செய்தி தென்காசி திமுகவிலும் மதிமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.