சாகும்போதாவது திமுககாரனாக சாக வாய்ப்பு கொடுங்கள் – திமுக ஆதரவாளர்கள் உருக்கமான கடிதம் !
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை வழங்கி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு கட்சிப்பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருப்பது உடன்பிறப்புக்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
திமுகவில் மதுரை தென்மண்டல அமைப்பு செயலாளர் மற்றும் மத்திய அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் திமுகவிற்கு எதிராக கருத்துக்களையும் பல வேலைகளையும் செய்து வந்ததால், அப்போது திமுக தலைவர் கலைஞர் உத்தரவின் பேரில் 2014-ல்கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முக அழகிரியை திமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், அவரோடு ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். அதன் காரணமாக அழகிரி திமுக விற்கு எதிராக பல்வேறு அரசியல் வியூகங்களை கையாண்டு ஸ்டாலினை பொது நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தல் 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து தனது ஆதரவாளர்களை வைத்து எதிரணிக்கு ஆதரவாக தேர்தல் பணியிலும் ஈடுபடுத்தினார். இது தலைமைக்கு அழகிரி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அழகிரியை மீண்டும் கட்சியில் தலைமை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக, செய்திகள் பரவின. தனது மகன் உடல் நிலை காரணமாக சற்று தள்ளி இருப்பதாக கட்சியினர் கூறி வருகின்றனர்.
கடந்த 12 வருடங்களாக தங்களை தலைமை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது என தற்போது மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள்மீண்டும் திமுகவில் சேர்ந்து கட்சிப் பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதாக கடிதம் ஒன்றை தயார் செய்து அதில் அவர்கள் கையொப்பமும் இட்டு மதுரை மாவட்ட செயலாளர் தளபதியிடம்கடிதம் கொடுத்துள்ளனர். அதை தலைமைக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அழகிரி ஆதரவாளர் இசக்கி முத்துவை நேரில் சந்தித்தோம். ”நான் மதுரை திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது துணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் பல்வேறு கட்சி பொறுப்புகளிலும் இருந்து வந்துள்ளேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றதும் அண்ணன் அழகிரியை நேரில் சந்திக்க வருவதாக கூறியதும், உடனடியாக அழகிரி அண்ணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அழைத்து உதயநிதியிடம் ”என்னைத்தான் கட்சியிலிருந்து நீக்கி விட்டீர்கள்.
இசக்கிமுத்து சிறுவயதிலிருந்து திமுக காரராக தற்போது வரை பணியாற்றி வருகிறார். அவரை தலைவரிடம் கூறி கட்சியில் சேர்த்துக் கொள்ள சொல்” என்றார். பதிலுக்கு உதயநிதி தலைவரிடம் கூறுகிறேன் என்று சொன்னதும் உடனடியாக அக்கா காந்தி அழகிரி அவர்கள் நாங்கள் மதுரைக்கு வந்து 40 ஆண்டு காலம் ஆகிறது எங்களை ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எங்களுடன் பயணித்துக் கொண்டிருப்பவர் இசக்கிமுத்து என்று அக்காவும் கூறினார்கள்.
அப்போது என்னுடன் மன்னன், உதயகுமார், எம்எல் ராஜு கோபி நாதன் ஆகியோர் இருந்தார்கள். நான் இன்று வரை தலைவர் கலைஞருக்காகவும் அண்ணன் அழகிரி ஸ்டாலினுக்காகவும் எனது பகுதியில் கட்சி வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் சாகும்போது திமுக காரனாகத்தான் சாவேன்” என்று உணர்ச்சிப் பெருக்கில் பேசினார் இசக்கிமுத்து.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதியை தொடர்பு கொண்டோம், “என்னிடம் முன்னாள் துணை மேயர் மன்னன் நேரடியாக வந்து மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்து அழகிரியின் ஆதரவாளர்களாகிய எங்களை கட்சியில் இணைக்க வேண்டும். இதை மாவட்டச் செயலாளராகிய நீங்கள் தலைமையிடம் சேர்த்து இக்கடிதத்தை பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார்.
நானும் அவர் கொடுத்த மன்னிப்பு கடிதத்தை பெற்றுக் கொண்டு சென்னையில் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் கொடுத்துள்ளேன். இதை கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்” என்றார். தென் மாவட்டம் மற்றும் மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களை கட்சியில் இணைத்துக் கொண்டால் திமுக வலுப்பெறும் என்பதே, தென் மாவட்ட உடன்பிறப்புக்களின் நீண்டநாள் ஏக்கமாகவே இருந்து வருகிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.