திமுகவின் அரசியல் மாண்பு
நடிகர் கிங்காங்கால் இன்னும் நடந்தவைகளை நம்பக் கூட முடியவில்லை. முதல்வரை பற்றி பேசும்போதெல்லாம் நெகிழ்ந்து கண்கள் கலங்குகின்றன.
‘நான் விஷயத்தை சொல்லி எதிர்க்கட்சி ஆளாச்சேனு தயங்கினேன். அண்ணன் பூச்சி முருகன் தான் கலைஞனுக்கு ஏதுப்பா அரசியல்னு முதல்வரை சந்திக்க வெச்சார். அவர் வர்றாருன்னு கொஞ்ச நேரம் முன்னாடித் தான் தெரியும். அந்த செய்தி பரவத் தொடங்கின உடனே கூட்டமும் கூடிடுச்சு. முதல்ல பார்க்கிறேன்னு சொன்னவங்க கூட முதல்வரே வந்துட்டாருனு டிவில பார்த்துட்டு வந்துட்டாங்க… நான் ரொம்ப சாதாரண ஆளு… எனக்கு சிஎம் அன்னிக்கு கொடுத்த முக்கியத்துவம் என் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது’ என்று நெகிழ்ந்தார்.
கிங்காங் வீட்டு திருமணம் காலையில். வரவேற்பு மாலையில். அன்றைய தினம் முதல்வர் திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திரும்புகிறார். முதலில் அவரது வாழ்த்துச் செய்தி தான் அனுப்ப ஏற்பாடாகி இருந்தது. ஏர்போர்ட்டில் அண்ணன் பூச்சி முருகனிடம் முதல் கேள்வியாக கிங்காங் வீட்டு திருமணம் பற்றி கேட்கிறார். மாலை தான் வரவேற்பு என்றதும் அப்ப வந்துடறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 2 நாட்களாக தொடர் பயணம், ரோடு ஷோ, வரிசையாக நிகழ்ச்சிகள்,… இருந்தும் கூட அவரை அந்த வரவேற்பில் கலந்துகொள்ள வைத்தது எது? திமுக என்னும் இயக்கத்தின் அரசியல் மாண்பு.
அரசியலில் ஜெயலலிதா மு.க.ஸ்டாலினுக்கு ஜூனியர். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது திமுக சார்பில் நிதி வழங்க வேண்டும் என்றால் ஸ்டாலினைத் தான் கலைஞர் அனுப்புவார். ஸ்டாலினும் நேரில் சந்தித்து நிதிக்கான காசோலையை வழங்கி வருவார். ஆனால் அப்படி ஒரு பண்பை ஜெயலலிதாவிடம் எதிர்பார்க்கக் கூட முடியாது. இறந்தவர்களை விமர்சிக்கக் கூடாது என்பதும் திமுக கலைஞரும் ஸ்டாலினும் கடைப்பிடிக்கும் மாபெரும் பண்பு.
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தந்தை மறைந்ததும் நேரில் சென்று துக்கம் விசாரித்தது, துக்ளக் ரமேஷ் மணி விழாவில் பங்கேற்றது, சீமானின் தந்தை மறைந்தபோது போனில் ஆறுதல் கூறியது, விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமியின் தாயார், ஓபிஎஸ் தாயார் மறைந்த போது நேரில் சென்று ஆறுதல் சொன்னது, மழைநீர் வடிகால் பணிகளின் போது சி.ஆர்.சரஸ்வதியை பார்த்ததும் காரை விட்டு இறங்கி சென்று நலம் விசாரித்தது என அரசியல் நாகரீகத்தின் உச்சமாக நம் முதல்வர் திகழ்கிறார்.
இப்போது சீமானையும் சாட்டையையும் அப்படித் தான் வீட்டுக்கே வரவைத்து உபசரிக்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்வில் அவரை பின்வரிசையில் அமர வைத்து அதில் மகிழ்ச்சி அடைந்த அதிமுகவின் அற்பத்தனம் தான் நினைவுக்கு வருகிறது. அப்போதும் ஸ்டாலின் அவர்கள் சின்ன புன்முறுவலுடன் தான் பங்கேற்றார்.
எடப்பாடி முதல் சீமான் வரை எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் சகிப்புத்தன்மை என்னும் மாபெரும் பண்பை தன் செயல்களால் கற்றுத் தருகிறார் ஸ்டாலின்.
— க.ராஜீவ் காந்தி