மட்டன் சாப்ட்டா கொலஸ்ட்ரால் ஏறுமா? கொலஸ்ட்ரால் வில்லன் இல்லை நண்பன் தான்!
மட்டன் சாப்ட்டா கொலஸ்ட்ரால் ஏறுமா? கொலஸ்ட்ரால் வில்லன் இல்லை நண்பன் தான்!
கிளினிக்கில் நான் சந்தித்த அம்மா ஒருவரிடம் நிகழ்ந்த உரையாடல். அவரது ரத்த சர்க்கரை அளவுகள் தறிகெட்டு இருந்தமையால் அதைக் குறைக்கும் முனைப்பில் என்னை சந்திக்க வந்ததாகக் கூறினார். அவருக்கான உணவுப் பரிந்துரையை எழுதும் போது, அவரை வாரம் ஒரு முறை அவருக்குப் பிடித்தமான கால்நடை இறைச்சி சாப்பிடக் கூறினேன். வாரம் ஒரு முறை மீன்; வாரம் ஓரிரு நாட்கள் கோழி இவற்றை நூறு கிராம் முதல் இருநூறு கிராம் வரை உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் . அதற்குப் பதிலாக உட்கொள்ளப்படும் அரிசி / கோதுமை உள்ளிட்ட தானியங்களின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றேன் .
“சார் எனக்கு சுகர் என்று தெரிந்ததும் மட்டன் சாப்புடறத நிறுத்தட்டேன் சார்” என்றார். “ஏன்மா நிறுத்திட்டீங்க?” “டாக்டர் சொல்லித் தான் நிறுத்துனேன் சார்” “சில வருடங்கள் முன்பு வரைக்கும் கால்நடை மாமிசம் சாப்புடறதுனால தான் இதயத்துல அடைப்பு வருதுனு மருத்துவ உலகம் நம்பிட்ருந்தது மா. இப்போ கிடைத்தி ருக்கும் ஆய்வு முடிவுகள் படி வாரம் ஓரிரு முறை உட்கொள்ளப்படும் கால்நடை இறைச்சியால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூடவே அதன் மூலம் கிடைக்கும் புரதம், இரும்புச் சத்து, கால்சியம் போன்ற முக்கியச் சத்துகள் இருக்கு. அதனால பயப்படாம சாப்டலாம்ங்கறது என் கருத்து”
“மட்டன் சாப்ட்டா கொலஸ்ட்ரால் ஏறுமாமே சார். எனக்கு வேண்டாம் சார். பயமா இருக்கு. நான் இப்டியே இருந்துக்குறேன்” “கொலஸ்ட்ராலை நமக்கு தீங்கு விளைவிக்கும் வில்லனாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனா கொலஸ்ட்ரால் நமக்கு நண்பன் மா. நாம சாப்பிடும் அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை, கூடவே உபயோகப்படுத்தும் ரீபைண்டு எண்ணெய் வகைகள் எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு , சுத்தீகரிக்கப்பட்ட தானியங்கள் , உடல் உழைப்பற்ற வாழ்க்கை, அதீத மன அழுத்தம் , உறக்கமின்மை இந்த காரணங்களால தான் மாரடைப்பு ஏற்படுது. ஆனா பலியைத் தூக்கி மட்டன் மேலயும் கொலஸ்ட்ரால் மேலுயும் போடுறோம்.
இன்னும் சொல்லப்போனால், வாரம் ஓரிரு நாள் சாப்பிடும் மட்டன் /கோழி போன்றவற்றால் கொலஸ்ட்ரால் ஏறுவதில்லை. மாறாக தினமும் மாமிச உணவுகளை கடந்த பல வருடங்களாக உண்ணாத / பிறப்பில் இருந்தே உண்ணாத சகோதர சகோதரிகளுக்கும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். எனவே உண்ணும் உணவிற்கும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்குத் தான் சம்பந்தம் உண்டு.
நாம் உணவு மூலம் சாப்பிடாவிட்டாலும் நமக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உடல் தானே சமைத்துக் கொள்கிறது என்பதையும் நாம் அறிய வேண்டும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளை உடல் ஏன் தயார் செய்கிறதுனு நாம சிந்திச்சா தெரியும். நீங்க நிறுத்த வேண்டியது, இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும், ரீபைண்டு எண்ணெய், ரீபைண்டு தானியங்கள் , ஆகியவற்றைத் தானே தவிர மட்டன் உள்ளிட்ட கால்நடை மாமிசத்தை நிறுத்துவதால் பலன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதன் மூலம் கிடைக்கும் புரதம் , நல்ல கொழுப்பு, இரும்பு சத்து போன்றவற்றை இழக்கிறோம்.
நீங்க பயப்படாம வாரம் ஒருமுறையேனும் கால்நடை மாமிசம் சாப்பிடலாம் என்பது என் கருத்து” என்று நான் கூற …” இல்ல சார்.. நீங்க சொல்றது புரியுது. ஆனா கடந்த பல வருசமா நான் அதை சாப்புடறதில்ல. அதனால அது இல்லாம எனக்கு டயட் கொடுங்க”
“சரிங்கம்மா.. நான் என்னால் இயன்ற அறிவியல் ரீதியான விழிப்புணர்வ கொடுத்த திருப்தி எனக்குப் போதும். உங்கள் உணவு சார்ந்த முடிவை நான் மதிக்கிறேன்.. அடுத்த முறை சந்திப்போம்” இவர் கொண்டிருப்பது “நங்கூரச் சார்பு நிலை” ஆகும்.
Anchoring Bias என்று அழைக்கிறோம். ஒருவருக்கு முதன் முதலில் வழங்கப்பட்ட ஊட்டப்பட்ட செய்திகளை கருத்துகளை வலுவாக நம்புவார். அது மெய்யோ பொய்யோ நம்புவார். சில நாட்கள் கழித்து மெய்யான விசயங்கள் கூறப்பட்டாலும் அதை நம்ப மறுப்பார். இதைப் பயன்படுத்தி வந்த கோட்போடே “கோயபல்ஸ் கோட்பாடாகும்”.
நமது பணி அறிவியலை இயன்ற அளவு எத்தி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். அதை செய்யும் திருப்தியில் எனது உரையாடல்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன்.
நன்றி…
– Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர், சிவகங்கை.