1970 களில் வடநாட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. காரணம் குடிபோதையில் லாரி ஓட்டி சென்ற டிரைவர் ஏற்படுத்திய விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் இறந்துவிடுகிறார். குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பத்திற்காக நீதிபதி ஒரு புதுமையான தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு என்னவெனில், குற்றவாளி லாரி டிரைவருக்குச் சிறைத்தண்டனை அல்லது தூக்குத் தண்டனை கொடுப்பதால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பதால், லாரி டிரைவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு தங்கி 14 ஆண்டு காலம் அவர்களுக்கு உழைத்துப் போட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. (இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘நீதி’ என்னும் திரைப்படத்தில் லாரி டிரைவராகச் சிவாஜிகணேசன் நடித்துள்ளார்.)
திருச்சியில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்த சுவாமிகள் என்பவர் தன் ஆசிரமத்தில் தங்கிப் படித்த மாணவியர் பலரைப் பாலியல் வல்லுறவு கொண்டார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை கீரனூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் பிரேமானந்தவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு முடியும் வரை பிரேமானந்தாவினால் பிணையில் வரமுடியவில்லை என்பதும் அவரின் பிணைக்கு இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் இராம்ஜெத்மலானி கீரனூர் நீதிமன்றம் வந்து வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் கடந்த 2019ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் –வாங்கல் பிரச்சினையில் பஞ்சவர்ணம் என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான காளிமுத்துவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து 2020ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார் நீதிபதி.
திருவாரூர் மாவட்டம் கீழமருதூரில், தலித் வகுப்பைச் சேர்ந்த அமிர்தவல்லி– ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பழனியப்பன் ஆகியோர் வெளியூர் ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் சொந்த ஊர் திரும்பிய போது அவர்களை வழிமறித்த பழனியப்பனின் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் பழனியப்பன் தம்பதியையும் குழந்தையையும் வயல்வெளி சேற்றில் அழுத்திக் கொலை செய்தனர். இந்தக் கொலை குற்றவியல் சட்டம் தவிர, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்பட்டது. தஞ்சாவூரில் நடந்து வந்த இந்த வழக்கில் 2020 ஜனவரி 29ஆம் தேதியன்று தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திகேயன், முதன்மைக் குற்றவாளிகளான சிவசுப்ரமணியன், ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோருக்குத் தலா மூன்று ஆயுள் தண்டனையும் குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபரான மகேந்திரனுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இவர்களுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் எவ்விதச் சலுகையும் காட்டப்படக்கூடாது என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.