முதலுதவி மட்டுமே இங்கே… மற்றவைக்கு திருச்சிக்கு போங்க…  பெயரில் தான் தரம், செயல்பாட்டில் இல்லை…

-கலைமான், மெய்யறிவன்

0

பொதுவாக இலவசமாகவும், குறைந்த செலவிலும் சிகிச்சை பெற பொது மக்கள் நாடுவது அரசு மருத்துவமனைகளைத் தான். அதையும் தாண்டி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வது அரசு மருத்துவமனைகளின் சேவை குறைபாடுகளால் தான். பல ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறை உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண்ணிற்கு சிறுவன் சிகிச்சை அளித்த விவகாரம் தமிழக அளவில் ஹாட்டாபிக் செய்தியானது. இப்படியான ஒரு அவலம் நேர்ந்த பின்னரும், பல ஆண்டுகளாகியும் இன்று வரை மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகராட்சி, 2 தாலுக்காக்களை கொண்ட பெரிய பரப்பளவு கொண்ட நகராட்சியாகும். தொழில் நிறுவனங்கள் குடியிருப்புகள் என்று நாளுக்கு நாள் மணப்பாறை சுற்றிய மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மணப்பாறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.  மணப்பாறையில் அமைந்துள்ள அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்நோயாளிகள், புறநோயாளிகள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்லும் மணப்பாறை மருத்துவமனையில், வரும் நோயாளிகளின் மருத்துவ தேவையை இம்மருத்துவமனை பூர்த்தி செய்கிறதா என்றால் இல்லை.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

மணப்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது 2006ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மணப்பாறை அரசு மருத்துவமனை, திருச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை, மணப்பாறை வளாகம் என அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. பெயரில் தான் தரம் உயர்ந்ததே தவிர சேவைகளில் பழைய நிலையே நீடிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணமே உள்ளது.  தமிழகத்தின் வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல மணப்பாறையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் மணப்பாறையை ஒட்டிய நான்குவழிச்சாலைகளில் அதிகப்படியான போக்குவரத்தின் காரணமாக விபத்துக்களும் அடிக்கடி நேர்ந்து மணப்பாறை மருத்துவமனையை நாடும் நிலை ஏற்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டோர்க்கு மணப்பாறையில் அமைந்துள்ள திருச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையால்  உரிய சிகிச்சை வழங்க முடிவதில்லை. பெரும்பாலோர்க்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு அவர்கள் திருச்சி மாநகர அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

காரணம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை. சிடி ஸ்கேன் வசதி முழுநேரமும் இயங்குவது கிடையாது. காரணம் ஊழியர் பற்றாக்குறை. தைராய்டு பிரச்சினையா திருச்சிக்கு செல்ல வேண்டும், இப்படி எந்தவித பரிசோதனையாக இருந்தாலும் திருச்சிக்கு செல்லுங்கள், திருச்சிக்கு செல்லுங்கள் என்று சொல்வதற்காக மட்டுமே ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை மணப்பாறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை, நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை, பரிசோதனைக் கருவிகள் இல்லாத நிலை, சுகாதார பணியின் மெத்தனம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மக்களால் முன்வைக்கப்படுகிறது.

- Advertisement -

4 bismi svs

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிக்சை பெற வந்தவர் ஒருவர் கூறுகையில்,  “இதய சிகிச்சைக்காக நான் இங்கு வந்தேன். இதய சிகிச்சை அளிக்கக் கூடிய சிறப்பு மருத்துவர் தற்போது இல்லை. நீங்கள் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். விபத்தில் அடிபட்ட ஒருவரை நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள், “நரம்பியல் மருத்துவர் இல்லை, உடனடியாக திருச்சி மருத்துவனைக்கு செல்லுங்கள்” என்று அனுப்பி வைக்கிறார்கள்.  இங்கு பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் அமர்வதற்கு கூட இடவசதி இல்லை. ஸ்கேன் செய்யப்படும் இடங்களில் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்கு வரும் பொழுது அவர்களுக்கு அமர்வதற்கு இருக்கை வசதி கூட அமைத்து தரப்படவில்லை. தலைமை மருத்துவமனை போல் தெரியவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம் போலவே தெரிகிறது.

இதுகுறித்து ரேணுகா என்பவர் கூறுகையில்,  “சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கான இரத்தப் பரிசோதனை செய்பவர்களுக்கு மறுநாள் தான் ரிப்போர்ட்  கிடைக்கிறது. ரிப்போர்ட் மறுநாள் கிடைத்தால் எப்படி அவர்கள் மருந்துகளை எடுத்துக் கொள்வது” என்றார்.

வி.பி.சங்கர் என்பவர் நம்மிடம் கூறுகை யில்,  “அரசு மருத்துவமனைகள் எளிய மக்களின் மிகப்பெரிய நம்பிக்கை, மணப்பாறை மருத்துவ மனையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவரிடம் நம்பிக்கையான வார்த்தையைக்கூறா விட்டாலும் பரவாயில்லை, திட்டாமல் இருந்தாலே போதும் என்ற நிலை தான் இங்கு நிலவுகிறது. தொகுதி எம்எல்ஏவும்,  மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் தலையிட்டு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் பெருமளவில் அதிகரிக்கும் நிலை உருவாகும். அது ஏழை எளிய மக்களை பெருமளவு பாதிக்கச் செய்யும்” என்றார்.

மருத்துவமனை பணியாளர் ஒருவர் அங்குசம் செய்திக்கு கூறியதாவது, மணப் பாறை அரசு மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்பதற்கு இணைஇயக்குனர் அலுவலகம் கொண்டு வர வேண்டும், மேலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இங்கு வருவதில்லை, மூளை நரம்பு சிகிச்சை பிரிவு, சிறுநீரகப் பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி, குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, குடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, மருத்துவ குடல் இரைப்பை சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, நுரையீரல் சிகிச்சை பிரிவு, தண்டுவட சிகிச்சை பிரிவு நிபுணர்கள் போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களை வாரம் ஒரு முறை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு, திருச்சி மருத்துவ கல்லூரி அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. பொது   மருத்துவர்கள் போதுமான அளவிற்கு இருக்கிறார்கள். எம்ஆர்ஐ ஸ்கேன் தற்போது மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இயங்கி வருகிறது விரைவில் மாவட்ட பொது மருத்துவமனைகளுக்கும் பிறகு அடுத்தகட்ட மருத்துவமனைகளுக்கும்  கொண்டுவரப்பட உள்ளதாக மணப்பாறை எம்எல்ஏவிடம் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இவைகள் கிடைத்துவிட்டாலே மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்” என்று கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.