(புலவர் க.முருகேசன் அவர்கள் ‘எரிவாய் காவிரி’ உட்பட 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மதிமுக கட்சியின் சங்கொலி வார இதழில் இவர் எழுதிய ‘இலக்கிய நோக்கில் செம்மொழி தகுதிகள்’ என்னும் திறனாய்வு கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மற்றும் நாகை ஏடிஎம் மகளிர் கல்லூரிகளில் உரைநடைத் திரட்டு பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. திராவிட இயக்கத்தில் 70 ஆண்டு கால அரசியல் முதிர்ச்சி கொண்டவர். இவர் அங்குசம் செய்தி இதழுக்குத் திறந்த மடல் எழுதுவது பெருமைக்குரியது – ஆசிரியர்)
அன்புள்ள தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் ‘மானமிகு’ க.பொன்முடி அவர்களுக்கு, வணக்கம். அமைச்சர் பெருமக்களை மாண்புமிகு என்று அடைமொழியிட்டு விளிப்பதுதான் மரபு என்றாலும், நான் உங்களை மாண்புமிகு என்று விளிக்காமல் ‘மானமிகு’ என்று விளித்தமைக்குக் காரணம், திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர். 80களில் ‘உலகளவில் நிறவெறியையும் இந்திய அளவில் சாதி வெறியையும்’ ஒப்பாய்வு செய்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, பின்னர் 1989ம் ஆண்டில் திமுகவில் இணைந்து 2021ஆம் ஆண்டு வரை 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை, உயர்கல்வித் துறை என்று எந்தத் துறையில் அமைச்சராகப் பணியாற்றினாலும் தந்தை பெரியாரின் கருத்தியலை, சமூகநீதியை முன்னிறுத்துவதை முதன்மைப் பணியாகக் கொண்டுள்ள உங்களை வாழ்த்துகிறேன். பெரியாரின் தொண்டன் என்ற வகையில் நான் பெருமை கொள்கிறேன்.
உலக அளவில் போற்றப்படுகின்ற நம் உயர்கல்வித் துறையைக் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி சீரழித்து சிதைத்துவிட்டது. சீரழிவைச் சரி செய்து உயர்கல்வித்துறையை மீண்டும் தாங்கள் வலிவும் பொலிவும் கொண்ட துறையாக மாற்றவேண்டும் என்றும் ஆசிரியர், மாணவர் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் அது தொடர்பான என் சிந்தனைகள் சிலவற்றைத் தங்களின் பார்வைக்கு வைத்து இம்மடலை எழுதுகிறேன்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் உயர்கல்வித்துறை, ‘உயர் இலஞ்சம் வாங்கும் துறை’யாக மாறி அதன் பெருமையை இழந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தேர்வு நடத்தினாலும், அப்போதைய உயர்கல்வி அமைச்சர்கள் ஆசிரியர் பணிநியமனங்களில் ஒரு பணியிடத்திற்கு 30 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரை கையூட்டு பெற்றதாக ஊடகங்களின் செய்தி மூலம் அறிந்து வருந்தியிருக்கிறேன். காரணம், அடுத்த தலைமுறையை அறிவுபெற்ற சமூகமாக உயர்த்தும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் கையூட்டு கொடுத்துத் தகுதியில்லாமல் ஆசிரியர் நிலைக்கு வருபவர்களால் சமூகத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரிகள் என அனைத்துக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களும் விற்பனை பொருளாக மாற்றப்பட்டது. பணம் உள்ளவர்கள்தான் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆகமுடியும் என்றால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த தலைமுறையினருக்கு வாய்ப்புகள் எட்டாக்கனியாகவே இருந்துவிடும். இந்நிலையை மாற்ற ஆசிரியர் பணியிடங்களைக் கையூட்டு கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஒழித்து, வெளிப்படையாக நடத்துங்கள். சமூகநீதியின்படி அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமைகளைத் தாங்கள் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு கல்லூரி /அரசு உதவிபெறும் கல்லூரி / சுயநிதிக் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்வியாண்டின் போதும் நடைபெறும் மாணவர் சேர்க்கை என்பது கல்லூரிக் கல்வி இயக்குநர் ‘மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசு கல்லூரிகள் மட்டுமே முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அரசு உதவிபெறும்/சுயநிதிக் கல்லூரிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. இந்தப் போக்கு குறித்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர்களின் பார்வைக்குப் புகார் சென்றால், உரிய அலுவலர்கள் உடன் முடிவு எடுக்கமுடிவதில்லை.
காரணம் +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த அதே நாளில் அரசு கல்லூரி தவிர்த்த மற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிடுகின்றது. அரசாணை 92இன்படி குடும்ப வருமானம் 2.50 இலட்சம் உள்ள தாழ்த்தப்பட்ட/மதம் மாறிய கிறித்தவர்கள் உயர்கல்வியை இலவசமாகப் பெறமுடியும். ஆனால் அரசு உதவிபெறும்/சுயநிதிக் கல்லூரிகள் அரசாணை 92இன்படி தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்ற நிலை இன்றும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. சமூகநீதியின் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளும் மறுக்கப்படுகின்றன. இந்நிலையை மாற்ற, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளரமுறை (Single Window System) பயன்படுத்தப்படுவது போல வரும் கல்வியாண்டில்(2022-23) கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளரமுறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரமுறை வேண்டும் என்பதை வலியுறுத்திக் கடந்த 5 ஆண்டு காலமாகச் சமூகம் மற்றும் கல்வி நல ஆர்வலர் கோவை ஈஸ்வரன் அவர்கள் போராடி வருகிறார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT), அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் (TNGCTA), காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (MUTA) போன்ற ஆசிரியர் சங்கங்களும் மாணவர் நலன் கருதி ஒற்றைச் சாளரமுறையை வலியுறுத்தி வருகின்றனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஒற்றைச் சாளரமுறையின் மூலம் மாணவர்கள் விரும்புகிற பாடத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். எங்குப் படிக்க விரும்புகிறார்களோ அங்கே படித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கான சமூகநீதியான இட ஒதுக்கீடு, குறிப்பாக மாணவியர்களுக்கான இடஒதுக்கீடு போன்ற அனைத்தும் காக்கப்படும் வாய்ப்புகள் மிகுதியாக இருக்கும் என்பதால் ஒற்றைச் சாளரமுறையை நடைமுறைப்படுத்த கல்வியாளர்கள் குழுவை நியமிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னை ’திராவிடத்தின் இருப்பு’ என்று அறிவித்துக் கொண்டு, பெரியார் ஆட்சியை நடத்தி வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இந்த வேளையில், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் ‘திராவிடவியல் பள்ளி’ (School of Drivalogy) என்பதை அமைத்துத் திராவிடவியல் கருத்துகளை மாணவர்கள் படிக்கவும், அதில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. பட்டங்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை உங்கள் காலத்தில் உருவாக்கித் தந்திட வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு அரசுக் கல்லூரியில் முதுநிலையில் திராவிடவியல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். திராவிடவியல் சிந்தனையைக் கல்வி சார்ந்து அமைத்துவிட்டால், திராவிடக் கருத்தியல்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் வகையில் தாங்கள் செயலாற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள தேசியக் கல்விக்கொள்கையால் நம் தமிழ்நாட்டின் கல்வி வளமும் மாணவர் நலனும் எப்படிச் சீரழிந்துபோகும் என்பதைத் தெளிவாக விளக்கி அண்மையில் தாங்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை சிறப்பு. அதில், விரைவில் மாநிலக் கல்விக் கொள்கைக்கு விரைவில் ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தபடி, 9.3.2022ஆம் நாள் நாளிதழ்களில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சிக்குரியது. தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராகத் தாங்கள் தொடர்ந்து களமாடி, அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவேண்டும். கல்லூரி ஆசிரியர் நிலையில் இருந்த உங்களுக்கு மாநிலக் கல்வியைக் காப்பாற்றும் உரிமையும் முழுத்தகுதியும் உள்ளது.
தமிழ்நாடு மக்களின் ‘கல்விக்கண்’ திறந்தவர் என்னும் புகழ் வரலாற்றில் காமராஜர் பெயர் நிலைத்து நிற்கிறது. வரும் கல்வியாண்டில் 10 அரசு கல்லூரிகள் அமையும் என்று தாங்கள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் உயர்கல்வியைக் காப்பாற்றி, தமிழ்நாடு ‘கல்வி தரத்தைத் தரணிக்குத் தெரிவித்தவர்’ பொன்முடி என்ற புகழைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். திராவிடத்தின் அடிப்படையான சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் இவற்றின் அடிப்படை, ‘கல்வியே’ என்பதை மனதில் கொண்டு உயர்கல்வி அமைச்சர் பொறுப்பில் உழைத்திட வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழன்புடன் : புலவர் க. முருகேசன்
(மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம்)