முடி சூடினார் துரை வைகோ – மதிமுகவில் பொறுப்பு !
மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கட்சியினரிடையே மிகப் பெரியா வாதமாக எழுந்து வந்தது. ஒருபுறம் வைகோவின் மகன் துரை வையாபுரி தனது பெயரை துரை வைகோ என்று மாற்றிக்கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் கட்சிப் பணிகளிலும் பெருமளவில் முகம் காட்டி வந்தார்.
அதேசமயம் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த வைகோ தனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று கூறியிருந்தார். ஆனாலும் மறுமலர்ச்சி திமுகவின் ஒவ்வொரு மாவட்டங்களும் மற்றும் துணை அமைப்புகளும் துரை வைகோவிற்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் துரை வைகோவின் அரசியல் பயணம் குறித்த முடிவு மாவட்ட செயலாளர்கள் எடுப்பார்கள் என்று வைகோ அறிவித்தார். அதனடிப்படையில் அக்டோபர் 20 இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இதில் துரை வைகோ அரசியல் குறித்து நிர்வாகிகளே முடிவு எடுக்கட்டும் என்று கூறி ரகசிய வாக்கெடுப்பு நடத்தினார் வைகோ.
இதனடிப்படையில் துரை வைகோ வருவதை பெருவாரியான நிர்வாகிகள் விரும்புவதை அடுத்து துரை வைகோவிற்கு கட்சியின் தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.