மின்வாரியத்தின் பலமுனைத் தாக்குதல்கள் – நசிவடையும் சிறுதொழில்கள் – தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினரின் மனித சங்கிலி போராட்டம் !
மின்வாரியத்தின் பலமுனைத் தாக்குதல்கள் – நசிவடையும் சிறுதொழில்கள் – தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினரின் மனித சங்கிலி போராட்டம் !
தொழில்துறையினருக்கான மின்கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிச-27 எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர்.
திருச்சியில், திருவெறும்பூரில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியுள்ளனர், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர். திருவெறும்பூர் பெல் ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலை நெடுகிலும் நீண்டு தொலைவுக்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மனித சங்கிலியாக கரம் கோர்த்து நின்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தொழில்துறை மின் நுகர்வோரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ள 430 சதவீத நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்; ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்பதாக உத்தேசித்துள்ள திட்டத்தை கைவிட வேண்டும்; தற்சமயம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 15 சதவிகித பீக் ஹவர் கட்டண திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து சங்க முன்னணியாளர்கள் உரையாற்றினர்.
தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகில் பே ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில், பெல்சியா மோகன்; திருமுருகன் கிரில் அசோசியேஷன் ரவீந்திரன்; அலுமினியம் அசோசியேஷன் செயலாளர் இளவேந்தன்; பிடாஸ் இயக்குனர் தொழிலதிபர் குமார்; திருச்சி அனைத்து சிட்கோ தொழிற்பேட்டையின் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார்; அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஏடிபி கார்த்திக்; துவாக்குடி அதிமுக நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே பி செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
-ருத்ரன்