தேர்தல் திருவிழா ! சத்தியமூர்த்தி பவன் செம ஜோர் !!
தேர்தல் காலம் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் எப்போதுமே ‘பூத் பங்களா’ மாதிரி தான் இருக்கும் சத்தியமூர்த்திபவன். ஒரு வாட்ச்மேன், இரண்டு தூய்மைப் பணியாளர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள், இவர்கள் மட்டும் தான் ...
தேர்தல் திருவிழா! சத்தியமூர்த்தி பவன் செம ஜோர்!
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே ஆளும் கட்சியான திமுக, தேர்தல் வேலைகளில் படு சுறுசுறுப்பாக முனைப்புக் காட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டையும் இறுதி செய்துவிட்டது. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் கட்டத்திற்கு வந்துவிட்டது. எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலும் தொகுதிக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணலை நடத்தி முடித்தாலும், அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சிகள் கூட்டணி சேரும் எனத் தெரியாததால், ரொம்பவே புலம்பித்தவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கையில் காசு இருந்தாலும் தனியாக நிற்க தெம்பு இல்லாமல் தவியாய் தவிக்கிறது எடப்பாடி முகாம். இந்த தவிப்பை மேலும் தவிப்பாக்கி, பழனிசாமியை பாடாய்படுத்திவிடுவது என்ற முடிவுடன் இருக்கிறது பெரியகுளம் பன்னீர்செல்வம் முகாம். இந்த முகாமிற்கு எல்லாமுமாக இருந்து எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறது பா.ஜ.க.
இதெல்லாமே நமக்கு தினசரி அப்டேட்கள் தான். ஆனா திமுகவின் பிரதான கூட்டாளியான காங்கிரஸின் தமிழக தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் எப்படி இருக்கிறது? என்பதைக் காண, நேற்று ( மார்ச்.11 திங்கள்) காலை 11 மணிக்கு ஆஜரானோம்.
தேர்தல் காலம் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் எப்போதுமே ‘பூத் பங்களா’ மாதிரி தான் இருக்கும் சத்தியமூர்த்திபவன். ஒரு வாட்ச்மேன், இரண்டு தூய்மைப் பணியாளர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள், இவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். மட்ட மத்தியான நேரத்தில் அங்கு சென்றாலே நமக்கு திக்திக்குன்னு இருக்கும்.
ஆனால் நேத்தைக்கு ஏகப்பட்ட கார்கள், பைக்குகள் இவற்றில் சால்வைகள், மாலைகளுடன் வந்திறங்கினார்கள் காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும். சற்று நேரத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வந்திறங்கினார். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில், தொண்டர்களின் வாழ்க முழக்கமும் சால்வை, மாலை மரியாதைகளும் பெருந்தகையை பெரும் குளிர்ச்சியாக்கியது.
பவனுக்குள் போய் கொஞ்ச நேரம் சீனியர்களுடன் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த செல்வப்பெருந்தகையுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு ஆகியோரும் வெளியே வந்தனர். காங்கிரஸ் கொடி கட்டிய காரின் முன் சீட்டில் செல்வப்பெருந்தகை அமர, பின் சீட்டில் இளங்கோவனும் தங்கபாலுவும். இரண்டு மூன்று கார்கள் பின் தொடர பவனைவிட்டுக் கிளம்பினார் பெருந்தகை.
தனியாக வந்த கார்த்தி சிதம்பரம் தனியாகவே கிளம்பிப் போனார்.
- மதுரை மாறன்