எல்ஃபின் வழக்கில் சிக்கிய தலைமறைவு குற்றவாளி தென்காசி ஏஜெண்ட் செல்வம் !
தமிழகத்தில் பிரபலமான மோசடி வழக்குகளுள் ஒன்றான எல்ஃபின் மோசடி வழக்கில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ஏஜெண்ட் செல்வம் (எ) திருச்செல்வம் என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். தென்காசி மாவட்டக்குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022 இல் பதிவான புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
வழக்கின் பின்னணி:
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல மாவட்டங்களில் கிளை நிறுவனங்களை தொடங்கி சுமார் 400 கோடிகளுக்கும் மேல் மோசடி புகாரில் சிக்கியது எல்ஃபின் நிறுவனம்.

திருச்சியை சேர்ந்த ராஜா (எ) அழகர்சாமி , ரமேஷ்குமார் ஆகியோரை நிர்வாக இயக்குநர்களாகக் கொண்டும், பாபு, பாதுஷா, அறிவுமணி, பால்ராஜ் உள்ளிட்ட பலரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, எல்பின் இ.காம் பிரைவேட் லிமிடெட் , ஸ்பேரோ குளோபல் டிரேட், ஸ்பேரோ ரியாலிட்டி, எல்பின் ப்ரொமோட்டர்ஸ், ஸ்பேரோ டூரிசம், எல்பின் ரிசல்ட் என்பதாக பல்வேறு கிளை நிறுவனங்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி கைவரிசையை காட்டியிருந்தனர்.

ஒரு இலட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் இரட்டிப்பு என்பது தொடங்கி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை காட்டி பலரை ஏமாற்றியதொடு மட்டுமின்றி, ஒரு மாவட்டத்தில் சிக்கினால், அப்படியே அடுத்த மாவட்டத்தில் புதியதாக இன்னொரு கம்பெனியை தொடங்கி, மோசடியை தொடர்ந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அறம் மக்கள் நல சங்கம் என்ற பெயரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதைப் போல காட்டிக் கொண்டே இதுபோன்ற மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் எல்ஃபின் மோசடியின் சிறப்பம்சமே!

இந்த கும்பலின் தொடர் மோசடிக்கு எதிராக, கடந்த 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில், தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் அடுத்தடுத்து 17 வழக்குகள் பதிவாகின. இவ்வாறு தமிழகம் முழுவதும் பதிவான வழக்குகளை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான வழக்குகளை தனித்தனி வழக்குகளாகவே, விசாரித்து அவற்றுக்கு தனித்தனியே குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்து வருகிறார்கள்.
மேலும், எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாக மனு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குறிப்பாக, இந்த வழக்கில் ஏற்கெனவே புகார் மட்டுமே அளித்தவர்கள், போதுமான ஆதாரங்களுடன் நேரில் வருமாறும் அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்ள போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார், சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவர் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்.
— ஆதிரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.