எல்ஃபின் ( ELFIN ) நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வெளியான முக்கிய அறிவிப்பு !
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல மாவட்டங்களில் கிளை நிறுவனங்களை தொடங்கி சுமார் 400 கோடிகளுக்கும் மேல் மோசடி புகாரில் சிக்கிய
E.Com Pvt Ltd நிறுவனம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு போலீசார்.
திருச்சியை சேர்ந்த ராஜா (எ) அழகர்சாமி , ரமேஷ்குமார் ஆகியோரை நிர்வாக இயக்குநர்களாகக் கொண்டும், பாபு, பாதுஷா, அறிவுமணி, பால்ராஜ் உள்ளிட்ட பலரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு எல்பின் இ.காம் பிரைவேட் லிமிடெட் என்றொரு நிறுவனத்தை சட்டப்படி பதிவு செய்தனர். பின்னர், ஸ்பேரோ குளோபல் டிரேட், ஸ்பேரோ ரியாலிட்டி, எல்பின் ப்ரொமோட்டர்ஸ், ஸ்பேரோ டூரிசம், எல்பின் ரிசல்ட் என்பதாக பல்வேறு கிளை நிறுவனங்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கினர்.

ஒரு இலட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் இரட்டிப்பு என்பது தொடங்கி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை காட்டி பலரை ஏமாற்றியிருக்கின்றனர். ஒரு மாவட்டத்தில் சிக்கினால், அப்படியே அடுத்த மாவட்டத்தில் புதியதாக இன்னொரு கம்பெனியை தொடங்கி, மோசடியை தொடர்ந்திருக்கிறார்கள். இதுபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு பெயர்களில் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியை நடத்தியிருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சகோதரர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ்குமார். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2013 – 2015 ஆம் ஆண்டுகளில் சாத்தூரில் RMWC என்ற நிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டு மோசடியில் சிக்கினர். முதன் முதலாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவில் 08/2015 வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான், திருச்சி மன்னார்புரத்தில் ELFIN E.Com Pvt Ltd என்றொரு நிறுவனத்தை நடத்தி சுமார் 500 கோடி அளவில் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள். நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீரக்குமார் கொடுத்த புகாரில், திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் (01/2019) வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில், ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பிணையத்தொகை கட்டி ஜாமீனில் வெளியே வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 2019 இல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் செலவுக்காக காரில் வைத்து மறைத்து எடுத்துச் சென்றதாக 2 கோடி பணத்தை பெரம்பலூரில் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் எல்ஃபின் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட பணம்தான் என்பதாக பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் போலீஸ் நிலையத்தில் (69/2019) வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, அறம் மக்கள் நல சங்கம் என்ற பெயரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதைப் போல காட்டி வந்திருக்கிறார்கள் எல்ஃபின் ராஜா சகோதர்கள். கடந்த 3.11.2019 அன்று திருப்பூரில் ELFIN அறம் மக்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ELFIN ராஜாவின் மோசடி அமைச்சர்களுக்கு தெரிய வந்ததால் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் அந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், விருதுநகரைச்சேர்ந்த பட்டாசு மொத்த வியாபாரி கோவிந்தராஜ் என்பவரிடம் வழக்கம் போல, புரூடா கதைகளை அள்ளிவிட்டு சுமார் 5 கோடி அளவுக்கு மோசடி செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில் மதுரை குற்றப்பிரிவு போலீசார் (49/2019) வழக்குப்பதிவு செய்கிறார்கள். அதே நாளில், மேற்படி கோவிந்தராஜை ஏமாற்றி பறித்த பணம் 5 கோடியை உடனே திருப்பித் தந்துவிட்டதால், கைது ஆகாமல் தப்பித்து விடுகிறார்கள்.
அடுத்து, 2020 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சென்கோ ஹாலில் ELFIN மோசடி நபர்கள் சார்பில் பண வசூல் MEETING நடத்த இருந்த நிலையில் குலோபாலன் என்பவர் கொடுத்த புகாரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு (01/2020) செய்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்குப்பிறகும், அதே ஆண்டில் மதுரை மாநகரில், வேலம்மாள் மருத்துவகல்லூரி ஐடா ஸ்கட்டர் ஹாலில் 3 ஆயிரம் நபர்களை அழைத்து பரிசு குலுக்கல் நடத்தியதையடுத்து, அமீர் சையது என்பவர் கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் (218/2020) வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
அப்படியே, புதுக்கோட்டையில் களமிறங்கிய ராஜா சகோதரர்கள் அந்த மாவட்டத்தில் ராஜ்குமார் என்பவரிடம் சுமார் 90 இலட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து, திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் (554/2020) வழக்குப் பதிவானது.
இந்த கும்பலின் தொடர் மோசடிக்கு எதிராக, கடந்த 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில், தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் அடுத்தடுத்து 17 வழக்குகள் பதிவாகின.
இவ்வாறு தமிழகம் முழுவதும் பதிவான வழக்குகளை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள். தங்களுக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே வழக்காக நடத்த வேண்டும் என்று எல்ஃபின் ராஜா தரப்பில், முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான வழக்குகளை தனித்தனி வழக்குகளாகவே, விசாரித்து அவற்றுக்கு தனித்தனியே குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்து வருகிறார்கள்.

கடந்த 2024 தொடங்கி, தற்போது வரையில் எல்ஃபின் ராஜா சகோதரர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார்கள். வழக்கின் விசாரணையும் வேகமெடுத்தது. 17 வழக்குகளில், இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில்தான், திருச்சியை சேர்ந்த மிதுன் என்பவர், சுமார் ரூ 4,68,55,500/- ஏமாற்றிவிட்டதாகவும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் கொலைமிரட்டல் விடுவதாகவும் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் (17/2021) பதிவாகியிருந்து வழக்கில், வழக்கில் புலன்விசாரணை முடித்து எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறார், இந்த வழக்கின் சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவர் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்.
மேலும், எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாக மனு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குறிப்பாக, இந்த வழக்கில் ஏற்கெனவே புகார் மட்டுமே அளித்தவர்கள், போதுமான ஆதாரங்களுடன் நேரில் வருமாறும் அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்ள போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார், சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவர் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்.
— ஆதிரன்.