திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் எல்ஃபின் என்ற தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என்றும் நிலமும் தருவதாகவும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்ததாக குற்றச்சாட்டில் சிக்கியது.
குறிப்பாக, மாவட்டத்துக்கு ஒரு பெயரில் ஒரு கம்பெனியை தொடங்கி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டனர். Elfin E.Com Private Ltd., Elfin Result, Sparrow Global Trading, Sparrow Reality உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானது.
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் 2019 ஆம் ஆண்டில் பதிவான 01/2019 என்ற வழக்கோடு, தமிழகத்தின் மற்ற வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு, எல்ஃபின் குழும மோசடிகளை விசாரிப்பதற்கென்றே சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவினர், தொடர்ந்து இம்மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து சிறையிலடைத்தனர். டான்பிட் சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்குகளின் இறுதி அறிக்கை தயார் செய்து டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதால், மேற்படி எல்ஃபின் குழும மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக தங்களை அணுகுமாறும் நேரில் வந்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, எல்ஃபின் வழக்கை முடிப்பதற்கு வேகம் காட்டி வரும் நிலையில், இதுபோன்று அவ்வப்போது அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இத்தகைய வாய்ப்புகளை தவறவிட்டவர்கள், கடைசி வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
புகாருக்கு அணுக வேண்டிய முகவரி :
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகம்,
எண்: 10, அப்துல்சலாம் தெரு, மன்னார்புரம், திருச்சி – 620020.
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.