ஆன்லைன் டிரேடிங் மோசடி குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து அதிரடி காட்டியிருக்கிறார்கள் திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசார்.

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த கவியரசு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது முகநூல் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான செய்தியை பார்த்து தொடர்பு கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வாட்சப் எண் வழியாக தொடர்பு கொண்ட தான்யா என்பவர் CENTURY MARKET TRADEING (Global Trading) இல் முதலீடு செய்யுமாறும்; முதலீடு செய்தால்இரட்டிப்பு இலாபம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியிருக்கிறார். அதனை நம்பி கவியரசு மொத்தம் 11 தவணைகளில் அடுத்தடுத்து ரூ8,50,000/- அனுப்பி வைத்துள்ளார். தொடக்கத்தில் சொன்னதுபோல, எந்தவிதமான ரிட்டர்ன்ஸ்சும் கிடைக்காத நிலையில்தான், ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறார் கவியரசு. பணத்தையெல்லாம் இழந்துவிட்டு, ஆன்லைனில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இதுவரையில் 10 பேரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசாரின் விசாரணையில் கவியரசு மட்டுமின்றி, இவரைப்போல பொதுமக்கள் பலரை ஏமாற்றி சுமார் ரூ.6.15 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். மேலும், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட திருச்சி தாதனூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சதாம் ஹுசைன் ஆகிய இருவரையும் வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து, 17 மொபைல் போன்கள்; 39 சிம் கார்டுகள்; 8 காசோலைப் புத்தகங்கள்; 30 ஏடிஎம் கார்டுகள்; 4 வங்கிக் கணக்குப் புத்தகங்கள்; 1 பணம் எண்ணும் இயந்திரம்; 1 கார் (மாருதி பலேனோ ஸீட்டா) ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த பின்னணியில், தற்போது இவ்விருவரையும் சைபர் சட்டக் குற்றவாளிகளாக அறிவித்து, குண்டாஸில் (Goondas) சிறைப்படுத்த திருச்சி மாவட்ட எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் ஐ.பி.எஸ். பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து மேற்படி இருவரும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 82 பேர் குண்டாஸில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.