கலைமகள் சபா உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் அவர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகள் குறித்தும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
கலைமகள் சபா உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் என்ன எதிர்பார்க்கிறார்கள்? முதலில் கலைமகள் சபாவின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் முறையாக சரிபார்த்து கணினிமயமாக்கப்பட்ட உறுப்பினர் பதிவேடுகளை உருவாக்க வேண்டும்; உறுப்பினர்களின் முழுமையான பட்டியல் கலைமகள் சபா இணையத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் இப்போதைய முதன்மையான கோரிக்கையாக அமைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக, உறுப்பினர் எண்ணிக்கை விவகாரத்தில் எழுந்துள்ள குழப்பத்தை போக்கும் வகையில், அந்த வேறுபாடு தொடர்பான சரியான விளக்கத்தையும் தற்போதைய நிர்வாகம் சார்பில் வெளியிட வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள்.
அதுபோலவே, கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களின் முழுமையான பட்டியல் மாவட்ட வாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கலைமகள் சபா சொத்துக்களின் விற்பணை மற்றும் மின்னணு ஏல நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுகளின்படி சட்டப்படியும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்சம், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் நிதி மற்றும் நிர்வாக விவரங்களை இணையத்தில் புதுப்பிக்க வேண்டும்.
உறுப்பினர்களின் புகார்களை பெறுவதற்கும் தீர்வு காண்பதற்கும் இணையவழி குறைதீர்ப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று தகுதியான உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதித்துவ கண்காணிப்புக்குழுவை அமைப்பது குறித்து உயர்நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
கலைமகள் சபாவின் இணையதளம் வெறும் பெயரளவிலான இணையதளமாக இல்லாமல் உறுப்பினர்களுக்கான முழுமையான தகவல் மையமாக இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், “நிதிநிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். என்ன நடக்கிறது என்ற தகவல் அனைத்து உறுப்பினர்களும் அறிந்துகொள்வதை தற்போதைய நிர்வாகம் உத்தரவாதப்படுத்த வேண்டும். சபாவின் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். வெளிப்படையான நிர்வாகம் உறுப்பினர்களின் உரிமை. மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, நீதிமன்ற வழக்கில் நாங்களும் ஒரு தரப்பாக இணைந்து எங்களது கோரிக்கைகளையும் நீதிமன்றத்தின் முன் வைக்க இருக்கிறோம்” என்கிறார், கலைமகள் சபா உறுப்பினரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த அறிவழகன்.
தற்போது, கலைமகள் சபா-வுக்கு என்று தனி இணையதளம் இயங்கி வரும் நிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்படைத்தன்மையுடன் இணையதளம் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்பதும்; நாட்டின் எந்த மூலையிலிருந்தும் கலைமகள் சபா உறுப்பினர்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையிலும்; அவர்களின் கேள்விகள் சந்தேகங்களுக்கு பொறுப்பான முறையில் பதிலளிக்கத்தக்க வகையிலான ஏற்பாட்டை தற்போதைய நிர்வாகம் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக அமைந்திருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.