அங்குசம் பார்வையில் ‘இ.எம்.ஐ.’ [ மாதத் தவணை ]
தயாரிப்பு : ‘சபரி புரொடக்ஷன்ஸ்’ மல்லையன். டைரக்ஷன் & ஹீரோ : சதாசிவம் சின்னராஜ், சாய் தன்யா, செந்திகுமாரி, பேரரசு, சன் டிவி ஆதவன், பிளாக் பாண்டி, ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஸ். ஒளிப்பதிவு : பிரான்சிஸ், இசை : ஸ்ரீநாத் பிச்சை, எடிட்டிங் : ஆர்.ராமர், நடனம்: தீனா,சுரேஷ் சித், ஸ்டண்ட் ; மிராக்கிள் மைக்கேல். பி.ஆர்.ஓ. : புவன் செல்வராஜ்.
கிருஷ்ணகிரி தான் கதைக்களம். அங்குள்ள மாம்பழ ஜூஸ் ஃபேக்டரி ஒன்றில் வேலை பார்க்கிறார் ஹீரோ சதாசிவம் சின்னராஜ். அதே ஃபேக்டரியில் தன்னுடன் வேலை பார்க்கும் சாய்தன்யா மீது லவ்வாகி, அந்த லல்வை டெவலப் பண்ண, இ.எம்.ஐ.யில் புல்லட் பைக் வாங்குகிறார். அதன் பின் கல்யாணம் முடிந்ததும் மனைவிக்காக இ.எம்.ஐ.யில் கார் வாங்குகிறார். இந்த இரண்டு இ.எம்.ஐக்களும் அவரின் வாழ்க்கையில் எந்தளவுக்கு இம்சை கொடுக்கிறது, இந்த இம்சையிலிருந்து மீண்டாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் சதாசிவம் சின்னராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள இந்த ‘இ.எம்.ஐ.
ஏழை மற்றும் நடுத்தர மக்களை எளிதில் வசப்படுத்தும் வார்த்தை தான் இந்த இ.எம்.ஐ. இந்த மூன்றெழுத்து வசிய வார்த்தைகளில் சிக்கியவர்களின் தலையெழுத்தே மாறி வாழ்கையை நாசமாக்கிக் கொண்டவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்;. ”ஒரே ஒரு ரூபாய் கட்டுங்க, புது பைக்கை ஓட்டிட்டுப் போங்க”ன்னு கவர்ச்சி விளம்பரம் கொடுத்து நடுத்தரவர்க்கத்தின் ஆசையைத் தூண்டி வலையில் வீழ்த்தும் கவர்ச்சி விளம்பரங்கள் இன்று வரை வந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்களும் அந்த வலையில் சிக்கியபடி தான் இருக்கிறார்கள்.
இன்றளவும் இந்த உண்மைக்கு சாட்சியாக இருக்கும் இந்தக் கதையை கொஞ்சம் சிரத்தை எடுத்து நேர்த்தியாக திரைக்கதையை வடிவமைத்திருந்தால் வெகுஜனங்களிடம் இந்தப் படம் ஈஸியாக போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் டைரக்டர் & ஹீரோ சதாசிவம் சின்னராஜ் அதை கோட்டைவிட்டதால், இ.எம்.ஐ. இம்சை போல ஆகிவிட்டது படம்.
இ.எம்.ஐ.ன்னா சுலப மாதத்தவணை என்று அர்த்தம். அது போலத்தான் சதாசிவம் உட்பட படத்தில் நடித்த அனைவருமே நடிப்பையும் சுலபத்தவணையில் தான் வழங்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இ.எம்.ஐ.யைக் கட்ட ரொம்பவே திணறியிருக்கிறார்கள். காட்சிகளெல்லாம் படு செயற்கையாக இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு சின்ன உதாரணம். “ஏம்பா தக்காளி விலை நூறு ரூபாயா?” என செந்திகுமாரி கேட்கும் சீன் தான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஹீரோயின் சாய்தன்யா வருகிறார், போகிறார், சில சீன்களில் கணவனிடம் கடுப்பைக் காட்டுகிறார். சதாசிவத்தின் அம்மாவாக செந்திகுமாரி வருகிறார், போகிறார், சில சீன்களில் கண்ணீர்விட்டு அழுகிறார், க்ளைமாக்ஸில் ஆஸ்பத்திரி ஐசியூ வார்டில் அட்மிட்டாகிறார். சாய்தன்யாவின் அப்பாவாக பேரரசு வருகிறார், போகிறார், மகளுக்கு அட்வைஸ் பண்ணுகிறார், க்ளைமாக்ஸில் மருமகனை பாராட்டுகிறார்.
காமெடி என்ற பெயரில் பிளாக்பாண்டியும் இன்னொருவரும் சேர்ந்து நமது பொறுமையை அதிகபட்சமாக சோதிக்கிறார்கள். இதுக்கு இ.எம்.ஐ.யே தேவல போலங்கிற அளவுக்கு நம்மை ஆளாக்கிவிட்டார்கள். ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை அதுபாட்டுக்கு ஒலிச்சுக்கிட்டே இருக்கு.
— மதுரை மாறன்.