கடைகளில் ஆங்கிலப் பெயர்களா? அழிக்கும் முயற்சியில் ராமதாஸ்
“ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார். பாராட்ட வேண்டிய முயற்சி!
இதற்கு எதிர்வினையாக வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா, தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும், இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது எனவும் கூறியுள்ளார். மேலும், தங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கும் தமிழ் மொழியில் பெயர்ப் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. ஏதோ இப்போதுதான் முதன்முறையாக ஆங்கிலப் பெயர்ப்பலகை குறித்த அறிவிப்பு வந்துள்ளது போல் கூறுகிறார். பல முறை அல்ல, மிகப்பலமுறை தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று அரசு, அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தொழிலாளர் துறை ஆணையர், தமிழ் வளர்ச்சிச் செயலர், அமைச்சர், முதல்வர் எனப் பல தரப்பினரும் இது குறித்து அறிக்கை அளித்துள்ளனர்; பேசியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் இப்போது போல் அவகாசம் கேட்பதும், வழக்கமான ஒன்றே. பின்னர் அறிவித்தவர்களும் மறந்து விடுவார்கள்; கால வாய்ப்பு கேட்டவர்களும் மறந்து விடுவார்கள். கடைகள் நிறுவனங்கள், உணவகங்கள், ஆகியவற்றில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கவும் வைக்கப்படாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தொழிலாளர் துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அதாவது கடைகள், நிறுவனங்கள் வைக்கும் பெயர்ப் பலகையில் எழுத்துக்கள் முதலில் தமிழில் இருக்க வேண்டும் என்றும், அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதற்குரிய அரசாணையும் இன்னும் செயற்பாட்டில்தான் உள்ளது. அதே நேரம் பெயர்ப்பலகைகளில் ஆங்கிலம் இருக்கத்தான் செய்கின்றது. இதுதான் நாட்டின்நிலை.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதாக அறிவிப்பு வந்ததும் தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ் இல்லை என்ற அவல நிலையைப் போக்க வேண்டும் எனத் தமிழ் அமைப்புகளும் தமிழன்பர்களும் வேண்டினர். அப்போது சென்னை மாநகரத் தலைவராக இருந்த மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தார். சென்னையில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம் பெறுவது மிகவும் அவசியம் என்றார்.
அந்த நாளும் கடந்து சென்றது. கோவையில் செம்மொழி மாநாடும் நடந்து முடிந்தது. 14 ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த வெட்க உணர்வுமின்றிக் கால வாய்ப்பு கேட்கிறார் ஒரு பிரிவு வணிகர் சங்கததின் தலைவர்.
வணிகர் சங்கத்தினர் தங்கள் நிலைப் பாட்டிற்கு வெட்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழர்களுக்கான கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கும் ஒவ்வோர் முறையும் கால வாய்ப்பு கேட்பது இழிவு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
டாக்டர் ராமதாஸ், முதலில் தம் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள், பொறுப்புகளில் இல்லாத தொண்டர்கள் அனைவரையும் தங்கள் நிறுவனக் கடை பெயர்களை தமிழில் அல்லது விதிக்கிணங்க உரிய விகிதத்தில் தமிழ், ஆங்கிலம் பிற மொழிகளில் எழுத அறிவுறுத்தி வெற்றி காண வேண்டும். இதற்கு எந்த அழிப்புப் போராட்டமும் தேவையில்லை.
நல்ல தமிழில் முதலில் 5 பங்கு எழுத வேண்டும். இரண்டாவதாக 3 பங்கு ஆங்கிலத்தில் அடுத்து மூன்றாவதாக கடைக்காரர்கள் நிறுவனத்தினர் இப்போது பெயர் வைத்துள்ளவாறு பிற மொழிப்பெயர்களைத் தமிழ் வரி வடிவில் குறிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் தமிழ்த்தெருவில் தமிழ்மணம் கமழும்.
“வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங்கிலமா வேண்டும்? ‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்! ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும் நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலங்காக்கும் செய்கையாமோ?“ என 1945லேயே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கேட்டார். இன்னும் நமக்கு உணர்வு வரவில்லையே! இதன் பின்னரும் கூட இவ்வாறு இதனை வலியுறுத்தி பல சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் வந்துள்ளன. ஆம்! அவ்வப்பொழுது வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்தும் கட்சித் தலைவர்களிடம் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன.
-இலக்குவனார் திருவள்ளுவன்