குடும்பத் தகராறு! பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்த அக்பர் அலி (50) என்பவர், குடும்பத் தகராறில் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்பர் அலி, தனது மனைவி செய்யது அலி பாத்திமா (35), மகள் பர்வீன் (18), மகன் பாருக் (13) மற்றும் மாமியார் சிக்கந்தர் பீவி (60) ஆகிய நான்கு பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் நால்வருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. தீ வைத்த போது அக்பர் அலி மீதும் தீ பற்றி எரிந்துள்ளது.
தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில், செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் அவர் அக்பர் அலியை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் அக்பர் அலி, செய்யது அலி பாத்திமாவின் தலையில் சுத்தியலால் தாக்கியதாகவும், இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஜாமினில் வெளியே வந்த நிலையில், அதிகாலை 6 மணியளவில் குடும்பத்தினரிடம் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தீ திடீரென பரவி, அக்பர் அலியும் காயமடைந்தார். தொடர்ந்து ஆடை இல்லாமல் ரோட்டில் ஓடிய அவர், அருகில் உள்ள சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.