18 ஆண்டு உழைப்பு … கோடிகளில் பிசினஸ் … எல்லாமே போச்சு ! தெருக்கோடியில் நிறுத்திய பிரபல வங்கி !
18 ஆண்டு உழைப்பு … கோடிகளில் பிசினஸ் … எல்லாமே போச்சு ! தெருக்கோடியில் நிறுத்திய பிரபல வங்கி !
கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்து கொண்டதற்காக, சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் உள்ளிட்டு உயர் அதிகாரிகள் வரையில் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதே விவகாரத்தில் செக் மோசடி, போர்ஜரி கையெழுத்து போட்டு ஆவணங்களை சமர்ப்பித்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் கோயம்புத்தூர் நகர குற்றப்பிரிவு போலீசில் வங்கிக்கு எதிராக பதிவான எஃப்.ஐ.ஆர். மீதும் உரிய விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, சிட்டி யூனியன் வங்கிக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்திவரும் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலைச் சேர்ந்த மு.கேசவபாண்டியனிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.
”தொழிலதிபர் ஆகவேண்டுமென்ற வேட்கையோடு பதினெட்டு வயதில் களமிறங்கினேன். முப்பது வயதில் மரம் காய்த்து பழம் சுவைக்க காத்திருந்த தருணத்தில் அனைத்தையும் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். அடுத்தடுத்து ஐந்து யூனிட்டுகளை நிறுவி, நேரடியாக ஆயிரத்து ஐநூறு பேர் வரையில் வேலை வாய்ப்பு அளித்து வந்த நிலையில், எனது நிறுவனத்தின் சி.இ.ஓ.வுக்கு 1.75 இலட்சம் சம்பளமாகவே கொடுத்து வந்த நிலையில், தற்போது அனைத்தையும் இழந்து மற்றவர்களிடத்தில் மாத சம்பளத்துக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.” என்பதாக கண்ணீர் வடிக்கிறார்.
![கேசவ பாண்டியன்](https://angusam.com/wp-content/uploads/2025/02/07.02.2025-angusam-1.jpg)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தவர். சிட்டி யூனியன் வங்கியில் வரவு – செலவு வைத்துக் கொண்ட பாவத்துக்கு, உடமைகள் அனைத்தையும் இழந்து இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார், அவர்.
என்னதான் பிரச்சினை?
”கடந்த ஐந்தாண்டு கால கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறேன். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள துணிவில்லாத சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம், அவர்களுக்கு எதிராக பதிவான எஃப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டு தடை பெற்றிருந்தது. இப்போது, அந்த தடையை தகர்ந்திருக்கிறது.” என்றவர், பிரச்சினையின் தொடக்கத்தை விவரிக்கத் தொடங்கினார்…
”வெளிநாடுகளுக்கு டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி தொடர்பான நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தேன். கடந்த 2016-ஆம் ஆண்டு முதலாக, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் இயங்கிவரும் சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளையில் கணக்கு தொடங்கினேன். தொழில் அபிவிருத்திக்காக தொடக்கத்தில் சில கடன்களை பெற்றிருந்தேன். அவற்றை முறையாக திரும்ப செலுத்தியும் வந்திருக்கிறேன். அது வரையில் எனது நிறுவனத்தின் வரவு செலவுகள் அனைத்தும் ஒரே வங்கிக்கிளையின் வழியாகவே நடந்து வந்தது. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு அவசியமான நேரத்தில் எனக்கான உதவிகள் வந்து சேரவில்லை. இதனால் அதிருப்தியுற்று, வேறு ஒரு தனியார் வங்கிக்கு மொத்தக் கணக்குகளை மாற்றிவிடுவதென தீர்மானித்திருந்தேன்.
கடன் வழங்கியதில் மோசடி !
திருச்செங்கோட்டில் உள்ள எனது யூனிட்டுகள் மற்றும் பல்வேறு சொத்துக்களை அட்டாட்ச் செய்து 3 கோடி கடன் பெற்றேன். எனது சொத்துக்களை அப்போதைய சந்தை மதிப்பில் 5.85 கோடி என்பதாக மதிப்பிட்டிருந்தார்கள். அதற்கான, மேற்கண்ட சொத்துக்களை எம்.ஓ.யு. செய்வதற்கான நடைமுறைகள் நிலுவையில் இருந்த சமயத்தில், என்னை கேட்காமலேயே 30 இலட்சம் ரூபாய்க்கான கடனை வழங்கியிருந்தார்கள். அதற்காக வட்டியும் பிடித்தம் செய்திருந்தார்கள். அதற்கும் சேர்த்து எம்.ஓ.யு. செய்து தருமாறு நிர்ப்பந்தித்தார்கள். எனது முன் அனுமதியில்லாமல் முப்பது இலட்சம் கடன் வழங்கியதை ஆட்சேபித்து, அவ்வாறு செய்ய மறுத்துவிட்டேன். இதுதான் பிரச்சினையின் தொடக்கம்.
இதன் தொடர்ச்சியாக, எனது அனுமதி இல்லாமலேயே மேலும் 7 இலட்சம் கடனை எனது கணக்கில் வரவு வைத்தார்கள். அப்போதும் அதனை கடுமையாக எதிர்த்தேன். அதுகுறித்து, கிளை மேலாளர், மண்டல மேலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டதற்கு வாய்மொழியாக கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த லோன் வழங்கப்பட்டிருப்பதாகவும்; உடனடியாக அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டு தருமாறும் நிர்ப்பந்தம் செய்தார்கள். அதனையும் மறுத்தேன்.
எந்த வங்கியாவது, வெறுமனே வாய்வழியாக சொல்வதை கேட்டு கடன் வழங்குவார்களா? அதுவும் ஏழு இலட்சம்? ஆனாலும், அவ்வாறுதான் லோன் கொடுத்தோம் என்று மெயில் வழியாகவே பதில் அளித்தார்கள். முக்கியமாக, என்.பி.ஏ. கணக்கை மறைப்பதற்காகத்தான் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
பல்வேறு காரணங்களால், உரிய காலத்தில் தவணை கட்ட தவறும்பட்சத்தில் அந்த கணக்கு வாரக்கடனாகிவிடும். அது வங்கிக்கு நெருக்கடி ஆகிவிடும். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே, அவர்கள் கணக்கில் மேலும் ஒரு தொகையை இவர்களாகவே கடன் வழங்குவதுபோல எந்தவித ஆவணமும் இன்றி வழங்கிவிட்டு, அதிலிருந்து அதுவரையில் உள்ள வட்டியை கழித்துவிடுவார்கள். அதாவது, ஏழு இலட்சம் எனது கணக்கில் கடனாக வரவு வைக்கப்படும். அந்தப் பணம் அப்படியே, அவர்களது நிலுவை, வட்டி பாக்கி என்பதாக திரும்ப எடுத்துக் கொள்வார்கள். நம் தலையில் மொத்தக்கடன் கூடிவிடும். இதைத்தான் என் விசயத்திலும் செய்தார்கள். வங்கியின் இந்த முறைகேட்டை, ஆர்.பி.ஐ.யின் கவனத்திற்கு புகாராக கொண்டு சென்றேன்.
முதலில், அப்போது திருச்செங்கோடு கிளைமேலாளராக இருந்த குஞ்சிதபாதம் மற்றும் மண்டல வளர்ச்சி மேலாளர் சுயம்புலிங்கராஜா ஆகியோர் அழைத்து பேசினார்கள். பின்னர், கும்பகோணம் தலைமையகத்திற்கே அழைத்து எஸ்.ஜி.எம். கே.பி. ஸ்ரீதர், டி.ஜி.எம். கணேசன், கிளை மேலாளர் குஞ்சிதபாதம், மண்டல வளர்ச்சி மேலாளர் சுயம்புலிங்கராஜா ஆகியோர் என்னிடம் பேசினார்கள். பேசினார்கள் என்பதைவிட, மிரட்டினார்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆர்.பி.ஐ.யில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்பதைத்தான் திரும்பத்திரும்ப வலியுறுத்தினார்கள். நான் மறுக்கவே, ”உன்னால முடிஞ்சத பாரு. எங்கள மீறி உன்னால ஒன்னும் பன்னிட முடியாது”னு பகிரங்கமாக கொலை மிரட்டலே விட்டாங்க. நடந்ததையெல்லாம், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடியிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
காசோலை மோசடி !
இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போதே, 12.10.2019 இல் காசோலை எண்: 103 இன்படி 1,40,000.00 மற்றும் 24-12-2019 இல் காசோலை எண்:119 இன்படி 5,45,000.00 நான் பணம் எடுத்ததாக கணக்கில் காட்டியிருக்கிறார்கள். மேற்படி இரண்டு காசோலைகளும் இன்னும் என் கைவசம்தான் இருக்கிறது. அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களாகவே எனது கணக்கிலிருந்து மோசடியான முறையில் பணத்தை திருடியிருக்கிறார்கள்.
கடன் வழங்கியதில் முறைகேடு மற்றும் மோசடியான முறையில் பணத்தைத் திருடியது ஆகிய குற்றச்சாட்டுகளை வங்கி நிர்வாகத்திற்கு எதிராக போதுமான ஆதாரங்களோடு முன்வைத்தும் போலீசார் எளிதில் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாவட்ட எஸ்.பி.யிடம் முறையிட்டு பல மாதங்கள் அலைக்கழித்து பின்னரே, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் எஃப்.ஐ.ஆர். (14/2020 ) பதிவு செய்தார்கள்.
இதற்கு பழிவாங்கும் விதமாக, திருச்செங்கோடு சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் அரவிந்த் என்பவரை வைத்து, திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் எனக்கு எதிராக ஒரு வழக்குப்பதிவு (180/2021) செய்தார்கள். அதாவது, அவர்களிடம் கடன்பெற்று அந்த பணத்தில் வாங்கிய இயந்திரத்தை அவர்களுக்குத் தெரிவிக்காமல் திருடி சென்றுவிட்டதாக புகார் கொடுத்தார்கள்.
எனக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். ஆனதும் நான் முன் ஜாமீன் கேட்டு தலைமறைவாக ஓட வேண்டியதாயிற்று. இதற்கிடையில், கோயம்புத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் எனக்கு எதிராக ஒரு வழக்கை (173/2021) தாக்கல் செய்தார்கள். எதிர்தரப்பில் நான் ஆஜர் ஆக முடியாத நிலையில், அந்த வழக்கில் மிகமிக குறுகிய காலத்தில் அவர்களுக்கு ஆதரவான உத்தரவை பெற்று எனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டார்கள். கடன் வாங்கும்போது, 5.85 கோடியாக இருந்த எனது சொத்துக்களை, பல ஆண்டுகள் கழித்து வெறும் 1.40 கோடிக்கு விற்றதாக கணக்கு காட்டி முடித்துவிட்டார்கள். இன்னும் நான் கடன் திரும்ப கட்ட வேண்டும் என்று வழக்குக்கு நிற்கிறார்கள். இதில் வேடிக்கையே, மேற்படி கோயம்புத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில், எனது கையெழுத்து மற்றும் எனது தாயார், சகோதரர் ஆகியோரது கையெழுத்துக்களை மோசடியாக அவர்களாகவே போட்டுக்கொண்டு அதனை ஆவணமாக சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த கையெழுத்தே போர்ஜரி என்பதை தடயஅறிவியல் சோதனைக்கு உட்படுத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆனாலும், இன்றுவரையில் அதன் அசல் ஆவணத்தை காட்டவே மறுக்கிறார்கள்.
காசோலை
என்.பி.ஏ. கணக்காக மாற்றியதிலும் மோசடி !
கொரோனா ஊரடங்கு காலத்தில் முறையாக கடன் கட்ட தவறும் நபர்கள் மீது வழக்கமாக மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நிதியமைச்சகத்தின் உத்தரவையும் மீறி, எனது கணக்கை வேண்டுமென்றே வாரக்கடனாக அறிவித்திருக்கிறார்கள். மார்ச்17,2020 தேதியிட்டு எனக்கு அனுப்பிய பதிவுத்தபாலில் , மார்ச்-31-க்குள் உங்களது நிலுவைகளை செலுத்த தவறினால் உங்கள் கணக்கு வாராக்கணக்கில் வைக்கப்படும் தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதன்பிறகு உங்களது கணக்கு ஜனவரி-2020 இலேயே, வாராக்கணக்காகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். இதனையும் ஆர்.பி.ஐ.யின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
![RBI -. சிட்டி யூனியன் வங்கிக்கு 66 இலட்சம் ரூபாய் அபராதம்](https://angusam.com/wp-content/uploads/2025/02/PR1940AF41673A011D4518B80228E8AE3DE4C6-1_page-0001.jpg)
இந்த பின்னணியில்தான், என்.பி.ஏ. கணக்குகளில் சில சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரி 26, 2024 ஆம் நாள் அன்று ஆர்.பி.ஐ. சிட்டி யூனியன் வங்கிக்கு 66 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த (14/2020) வழக்கில் இருந்து, சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி உள்ளிட்ட சிலரது பெயரை விடுவித்தார்கள். வங்கி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே, விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்கள். இந்நிலையில், இதனையெல்லாம் சுட்டிக்காட்டி, நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
நீதிமன்ற உத்தரவால் பதிவான வழக்கு !
அந்த வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒன்றாக்கி, சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் அரவிந்த், கும்பகோணம் தலைமையகத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் குஞ்சிதபாதம், கும்பகோணம் கிளையின் சீனியர் மேனேஜர் கணேசன், ஆய்வுப்பிரிவு சீனியர் மேனேஜர் மகாராஜன், மண்டல மேலாளர் சுயம்புலிங்க ராஜா, மற்றும் ராமன் ஆகிய ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்கள். அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 14.11.2024 அன்று (74/2024) வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
![சிட்டி யூனியன் வங்கி, திருச்செங்கோடு](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-07-at-1.27.27-PM.jpeg)
இதற்கிடையில், சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அதில் நான் ஒரு தரப்பாக குறுக்கிட்டு எனது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தேன். அதனடிப்படையில், சிட்டி யூனியன் வங்கி தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். 25 கோடி ரூபாய் மதிப்புக்கு குறையாமல் விற்பணையாகும் எனது சொத்துக்களை, மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து வெறும் 1.40 கோடிக்கு விற்பணை செய்ததற்கு எதிராகவும் கோயம்புத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு வழக்கையும் தொடுத்திருக்கிறேன்.
தடைபட்டுபோன திருமணம் !
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இவர்களோடு சட்டப்போராட்டத்தை நடத்தியதில் எனது நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நின்றுபோனது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில்தான் திருமணம் முடித்திருக்கிறேன். தொழில் அதிபராக இருந்து பலருக்கு வேலை வாய்ப்பளித்த நான் இன்று மாத சம்பளத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தால்கூட, விட்டுச் சென்றிருப்பேன். ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு – மோசடி என்று என்னை ஆத்திரமூட்டி விட்டார்கள். அதனை பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கான நீதி கிடைக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை.” என்கிறார் தீர்க்கமாக, முப்பத்தியேழு வயதேயான மு.கேசவபாண்டியன்.
இந்த விவகாரம் தொடர்பாக சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி , பொது மேலாளர் மோகன், திருச்செங்கோடு வங்கி கிளை மேலாளர் குஞ்சிதபாதம் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். திருச்செங்கோடு கிளையிலிருந்து பேசிய கிளை மேலாளர் பிரகாஷ், ”வங்கிக்கு நான் புதியதாக வந்திருக்கிறேன். இந்த வழக்கை தலைமையத்தில் உள்ள லீகல் டீம்தான் கையாண்டு வருகிறார்கள். அவர்களிடம் பேசுங்கள்” என்றார். பொதுமேலாளர் மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர் காமகோடி நமது அழைப்பை ஏற்கவில்லை.
![மகேஸ்வரன்](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-07-at-2.26.43-PM.jpeg)
சிட்டி யூனியன் வங்கி தரப்பு விளக்கம் !
வங்கியின் மேலிட அறிவுறுத்தலின் பேரில், நம்மை தொடர்பு கொள்வதாக குறிப்பிட்டு பேசிய லீகல் பிரிவின் மேலாளர் மகேஷ்வரன், “கேசவ பாண்டியன் என்பவர், ” Nature’s touch and clothing private limited” என்கின்ற தன்னுடைய நிறுவனத்தின் பெயரில், எங்கள் சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளையில் பல்வேறு கடன் வசதிகளின் கீழ் ரூபாய் 5.08 கோடி வரை கடன் பெற்றிருந்தார். அதற்கு ஈடாக தன்னுடைய பெயரிலும் தன்னுடைய பெற்றோர்களின் பெயரிலும் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் எந்திரங்கள் மற்றும் தளவாடங்களை அடமானம் வைத்திருந்தார்.
மேற்படி கடன் தொகையை உரிய காலத்தில் திருப்பி செலுத்தாத காரணத்தினால் அவரது கடன் கணக்குகள் RBI நெறிமுறைகளின் படி NPA எனப்படும் வாரா கடனாக வகைப்படுத்தப்பட்டது.
எங்கள் வங்கி மேற்படி கடனை வசூலிக்க SARFAESI சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததுடன் கோயம்புத்தூரில் உள்ள மாண்பமை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் OA 173/2021 இன் கீழ் வழக்கும் தொடர்ந்தது.
அவ்வழக்கில் , 25.11.2022 அன்று மேற்படி கேசவ பாண்டியன் ரூபாய் 6,69,91,85.80 யை இதர செலவுகள் மற்றும் எதிர்கால வட்டியுடன் எங்கள் வங்கிக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளது.
ஆனால், இது நாள் வரை தான் வாங்கிய கடனை அவர் திரும்ப செலுத்த முன் வரவில்லை. மாறாக, கேசவ பாண்டியனிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க எங்கள் வங்கி மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஆத்திரம் கொண்ட மேற்படி திரு. கேசவ பாண்டியன், மேற்படி எங்கள் வங்கியின் சட்டபூர்வ நடவடிக்கைகளை திசை திருப்பும் பொருட்டு, சிட்டி யூனியன் வங்கியின் நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்துடன், எங்கள் வங்கி மீதும் வங்கி அதிகாரிகளின் மீதும் பொய்யான தகவலின் கீழ் போலீசாரிடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் கீழ் போலீஸ் விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை. இச்சூழலில் எங்கள் வங்கியையும், வங்கி அதிகாரிகளையும் குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களது புகைப்படங்களுடன் ஊடகங்களில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றார். இதற்கு எதிரான சட்டபூர்வமான தக்க நடவடிக்கைகளை திரு.கேசவ பாண்டியன் மீது எங்கள் சிட்டி யூனியன் வங்கி எடுத்து வருகிறது.” என்பதாக தெரிவிக்கிறார்.
போலீசார் தரப்பு விளக்கம் !
கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம் பேசினோம். “நீதிமன்ற தடை இருந்ததால், நாங்கள் வழக்கை மேற்கொண்டு விசாரிக்கவில்லை. தற்போது இன்னும் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு வந்து சேரவில்லை. நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பித்துவிட்டால், நாங்கள் மேற்கொண்டு விசாரணையை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுவோம்.” என்பதாக முடித்துக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றிய வின்செண்டிடம் பேசினோம். “ஆறு மாதத்திற்கு முன்பாகவே, இடமாறுதலில் வந்துவிட்டேன். ஏற்கெனவே முதற்கட்ட விசாரணையை நடத்தி முடித்திருக்கிறோம். நீதிமன்ற உத்தரவையடுத்து நாங்கள் அதில் தலையிட முடியாத சூழல் நிலவியது. தற்போது, விசாரணையை தொடர்ந்து நடத்துவார்கள்.” என்பதாக தெரிவித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”முறையாக பணம் செலுத்தவில்லை என்றால், சட்டப்படி வட்டியுடன் வசூலித்துக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, அவர்களாகவே லோன் கொடுப்பது போல் கொடுத்து, அதிலிருந்து வட்டி பிடித்தம் செய்வது சரியல்ல என்பதாக கேசவபாண்டியன் சொல்கிறார். தனிநபராக இருந்து கொண்டு பிரபலமான வங்கியையே எதிர்க்கத் துணியலாமா? ஆர்.பி.ஐ. வரைக்கும் புகாருக்கு செல்லலாமா? இதை இப்படியே விட்டால், வங்கியின் பெயருக்கு சிக்கலாகிவிடும் என்று அவர்களும் மல்லுக்கு நிற்கிறார்கள். சொத்தே போனாலும் பரவாயில்லை சும்மா விடக்கூடாது என்று கேசவபாண்டியனும் விடாப்பிடியாக இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில், சிட்டி யூனியன் வங்கி சார்பில் கேசவபாண்டியனுக்கு எதிராக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர். சட்டப்படியே தவறானது. திருமண மண்டபம் ஒன்றில் இருந்த மெஷினரிகளை கேசவபாண்டியன்தான் திருடி சென்றுவிட்டார் என்பதாக குறிப்பிட்டு, சீட்டிங் கேசாக ஃபைல் செய்திருக்கிறார்கள். அது திருட்டு வழக்காக மட்டுமே பதிவு செய்திருக்க வேண்டும். செக் மோசடி, போர்ஜரி கையெழுத்து என்பதான குற்றச்சாட்டு, தவறாக போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். விவகாரம் ஆகியவை வங்கிக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டுகளாக அமைந்திருக்கின்றன.” என்பதாக போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
கேசவபாண்டியன் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகள் !
- வாய்மொழியாக கேட்டுக் கொண்டதற்கிணங்க கடன் வழங்கியதாக சொல்கிறார்கள்;
- என்.பி.ஏ. கணக்கில் சேர்ந்தால் வங்கிக்கு சிக்கல் என்பதால் அவர்களாகவே லோன் கொடுத்து அதிலிருந்து வட்டியை பிடித்தம் செய்து கொள்கிறார்கள்;
- இப்போது வரையில் என் கையில் ஒரிஜினல் செக் இருக்கும்போது, அதே செக்கை பயன்படுத்தி எனது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள்;
- எனது கையெழுத்து மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்துக்களை போலியாக அவர்களே போட்டுக் கொண்டு, கோவை கடன் தீர்ப்பாயத்தில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள்;
- என்னை பழிவாங்கும் நோக்கத்தில் கடன் வழங்கும்போது அவர்களே மதிப்பிட்ட 5.85 கோடி மதிப்பிலான சொத்துக்களை, வெறும் 1.40 கோடிக்கு ஏலம் விட்டு என்னை நட்டப்படுத்திவிட்டார்கள்;
- நிதித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களையும் மீறு மோசடியான முறையில் எனது கணக்கை என்.பி.ஏ. கணக்காக காட்டியிருக்கிறார்கள் …
என்பதாக சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக, கேசவபாண்டியன் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பகீரூட்டுகின்றன. நீதிமன்ற வழிகாட்டலின்படி, கோவை மாநகர மற்றும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் உரிய விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் இறுதி அறிக்கையில்தான் இதற்கான விடை அடங்கியிருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.