பி.ஆர் பாண்டியன் கைது! அதிகாரத்துக்கு ஆதரவான நீதி !
சமூக ஊடகங்களில் செயல்படுகிற மந்தை மனநிலை குறித்து அடிக்கடி எழுதி வந்திருக்கிறேன். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை விடுத்து, மிகச்சாதரண விசயங்கள் குறித்த மயிர் பிளக்கும் விவாதங்கள் நடைபெறுவது இங்கு புதிதல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு , தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இது குறித்து எந்த ஊடகங்களிலும் விவாதம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்தேசிய அரசியல் பேசுபவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியவில்லை.
சமூக ஊடகங்களிலும் இத்தீர்ப்பு குறித்து விவாதங்கள் இல்லை.
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பை விவாதிப்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவு பி.ஆர். பாண்டியன் குறித்த தீர்ப்பும் முக்கியம் வாய்ந்தது.
பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தட்டனை ஏன்? அவர் செய்த தவறு என்ன?
திருவாரூர், நாகை போன்ற டெல்டா பகுதிகளை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மாற்றத் துடிக்கிறது மோடி அரசு. மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக வளமான இந்த டெல்டா பிரதேசங்களின் நிலங்களை, வேளாண்மையை அழித்துவருகிறது ONGC நிறுவனம்.
விவசாய நிலங்களையும், உழுகுடிகளின் வாழ்வாதாரத்தையும் பாழாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நாகை, திர்வாரூர், நன்னிலம், சீர்காழி, காரியமங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிரமாகப் போராடிவருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராகக் காரியமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகக் கூறி, பி.ஆர். பாண்டியன் உட்படப் பல விவசாயிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில்தான் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விவாசாயிகளுக்காக போராட்டம் நடத்திய ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை எனும் தீர்ப்பு அறத்தின்பாற் பட்டதாக இருக்க முடியாது. அதிகாரம், கார்ப்ரேட்மயம் இவற்றுக்கு ஆதரவான தீர்ப்பாகவே இதைக் கருத முடியும். விவசாயிகளின் போராட்டத்தை அச்சுறுத்தி அடக்க நினைக்கும் அதிகாரத்தின் வேட்கையை நிறைவுசெய்கிற தீர்ப்பிது. மீத்தேன் போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்ப்பது ஒவ்வொரு விவசாயியின் கடமையாகும். ஆனால், ஒன்றிய மாநில அரசுகளோ விவசாயிகளைப் பழிவாங்க நினைக்கின்றன.
இவ்வழக்கு தொடர்பாக விவசாய சங்கங்கள், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தன. பசுமை தீர்ப்பாயம் ‘இது பொய் வழக்கு’ என்பதை உறுதிப்படுத்தியதோடு ஓஎன்ஜிசியின் பணிகளுக்குத் தடை விதித்தது . விவசாயிகளுடைய தொடர் போராட்டங்களின் விளைவாக, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. மீத்தேன் போன்ற புதிய திட்டங்களுக்கு ஒன்றிய , மாநில அரசுகள் அனுமதி வழங்காமலும் இருந்தன. இந்த நிலையில் நீதிமன்றத்தின் தற்போதைய இந்தத் தீர்ப்பு, உழுகுடிகளின் உணர்வுகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளின் மீதான வழக்கை தமிழக அரசு மீளப் பெறவேண்டும். கைது, சிறைத் தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்களை பாதுகாப்பது தமிழ்நாடு அரசின் கடமை. விரைவில் தேர்தல் வர இருக்கிற நிலைதில், திமுக அரசு டெல்டா பகுதி உழவர்களின் கோபத்துக்கு ஆளாவது அவ்வளவு நல்லது அல்ல.
— கரிகாலன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.