கர்நாடகாவை கண்டித்து பானைகளை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவை கண்டித்து
பானைகளை உடைத்து
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, பானைகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு தொடர்ந்து தர மறுத்து வருவதைக் கண்டித்தும், காவேரி மேலாண்மை ஆணையர் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுவருவதைக் கண்டித்தும், காய்ந்துவரும் குறுவை சாகுபடியைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக அக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதன் மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாறன் தலைமையில் தண்ணீர்க் காவடி எடுத்துவந்து பானைகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.