இது வெறும் பாலம் அல்ல, அப்பா – மகனின் அரசியல் வரலாறு !
மிக ஆழமாகவே யோசித்துப் பார்க்கிறேன்.
அப்பன் தெக்கே போனா பிள்ளை வடக்கே போவான். அண்ணன் தம்பிகளோ, ‘அவன் அந்தப் பக்கம் போறானா, நான் இந்தப் பக்கம்தான் போவேன்!’ னு எடக்கு மடக்கான வழியிலதான் போவாங்க.
இவங்க பேரப் புள்ளைகளை சொல்லவே வேண்டியதில்லை. ஆளாளுக்கு வெவ்வேறு திக்கு போய் திக்குத் தெரியாத காட்டில் சிக்கி மூச்சு முட்டிப் போவார்கள்.
சாமான்ய மனிதனிலிருந்து பண்பட்ட குடும்பத்து மனிதர்கள் வரை இதுதான் நிலை.
அப்பன் செய்யற செயல் மேல் பிள்ளைகளுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே அவர்கள், ‘தந்தை வழி எவ்வழி எம் வழி அவ்வழி!’ என்று நடப்பர்.
இவ்விருவரின் செயல்பாடுகளின் மீது காதல் கொண்டால் மட்டுமே பேரப் பிள்ளைகளும் அப்படியே பயணிக்கும்.
தனி மனித குடும்ப வாழ்விலேயே இப்படி என்றால் பொதுவாழ்வில் இது எப்படி சாத்தியம்?
எத்தனை இடர்கள், தடைகள், எதிர்ப்புகள், மிரட்டல்கள், பொருளாதார நெருக்கடிகள், மக்கள் பிரச்சனைகள், கண்டன எதிர்கொள்ளல்கள், இழப்புகள், விபத்துகள், தொண்டர்கள், கட்டுக் கோப்புகள், வழிநடத்துதல்கள், அன்பு, பண்பு, கடமை, கண்ணியம், சர்வாதிகாரம்…
இப்படி இப்படி எத்தனை நகர்வுகளை எட்டிப் பிடித்து நகர்ந்தால் மட்டுமே அப்பா – பிள்ளை – பேரன் பயணம் ஒரே பாதையில் செழித்து நிற்க முடியும்.
இதோ … 51 ஆண்டுகள் எப்படித்தான் இவர்களால் இப்படிப் பயணித்திருக்க முடியும்? என பேராச்சர்யம் கொள்கிறேன்.
1974 – ஆம் ஆண்டு. கோயமுத்தூர் திருவிழா கோலம் பூண்டு நிற்கிறது. நாங்கள் எல்லாம் 10 கி.மீ தொலைவு கொண்ட அந்நகர் பகுதிக்கே செல்வது சாத்தியமில்லாத காலம்.
என் அப்பா இரவு நேரம் 12 – 1 மணிக்கு மேல் வருகிறார். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கோவை சிதம்பரம் பிள்ளை மைதானத்தில் மாபெரும் மாநாட்டை நடத்தியதாகவும், சாலை எங்கும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்ததாகவும், நகரமே ரோமாபுரி போல் (அவர் ரோமபுரியை சினிமாவில் செட்டிங்கில் பார்த்திருக்கலாம்) ஜொலிப்பதாகவும் அம்மாவிடம் பிரஸ்தாபித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதை விட முக்கியமாக அங்கே ஒரு பெரிய மேம்பாலத்தைக் கட்டி முதல்வர் திறந்து வைத்திருப்பதாகவும், அதன் மேலே லாரி – பஸ் எல்லாம் ரவுண்ட் அடித்து போவதாகவும், அதற்குக் கீழே ரயில்கள் செல்வதாகவும், அதற்கும் கீழே மாட்டு வண்டிகள், சைக்கிள், மோட்டார் பைக்குகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் செல்வதாகவும், ‘அந்த மாதிரியான அமைப்பு வெள்ளைக்காரன் ஊரில்தான் இருக்கும். அதை இங்கேயே கொண்டு வந்து விட்டார் கலைஞர் கருணாநிதி. அங்கேயும் லைட் லைட்டா போட்டு வெளிச்சம் ஜொலிக்கிறது!’ என அவர் வியந்து வியந்து பேசியது இப்போது போல் உள்ளது.
ஆம், அதுதான் கோயமுத்தூருக்கு முதல் மேம்பாலம். தமிழகத்தின் இரண்டாவது மேம்பாலம்.
அந்த மேம்பாலத்தை 12-வது படித்து முடித்து (1981 ஆம் ஆண்டு) GCT – Govt Arts College – இல் கல்லூரி சேர விண்ணப்பம் வாங்கப் போகும்போதுதான் பார்த்தேன்.
அடேயப்பா! என்ன அழகு. என்னே ஜொலிப்பு. Maths Master ஜெயபால் மாஸ்டர் திருமணத்திற்கு நண்பர்களுடன் சென்றிருந்தபோது அப்பாலம் முழுக்க சோடியம் வேப்பர் விளக்குகளால் தகதகத்தது.
ஆம், கோவையில் சோடியம் வேப்பர் லேம்ப்புகள் முதன்முறையாக போடப்பட்ட அணிவகுத்ததும் இம் மேம்பாலத்தின் ஓரமாகத்தான்.
அந்தக் காலத்தில் பொருளாதார வசதி அறவே இல்லை. முழுத்தேங்காய் காசு கொடுத்து வாங்கும் ஆட்கள் மிகக்குறைவு. அரை மூடி அல்லது தேங்காய் கீற்று போட்டுத்தான் அண்ணாச்சி கடையில் வாங்குவார்கள்.
அப்படியானால் சோடியம் வேப்பரும், மூன்றடுக்கு மேம்பாலமும் கோவை மக்களுக்கு எப்பேற்பட்ட பேரதிசயமாக இருந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.
இதோ …
அதெல்லாம் கடந்து கம்யூட்டர் உலகில் புகுந்து, Al தொழில் நுட்பம் என பயணித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது கோவையில் மட்டும் 20 – க்கும் மேற்பட்ட பெரிய – சிறிய – இரண்டு – மூன்று கி.மீ நீளமுள்ள மேம்பாலங்கள் கூட வந்து விட்டன.
ஆனால் அதை எல்லாம் ஒரே விழுங்காக விழுங்கி விடுகிற மாதிரி ஒரு 10.1 கி.மீ தொலைவு முழுநீள மேம்பாலம் கோல்டுவின்ஸ் தொடங்கி (கோவை விமான நிலையம் அருகே) உப்பிலிபாளையம் பழைய மேம்பாலம் வரை நீண்டு நிமிர்ந்து உருவாகி உள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ.1800 கோடி. 2020-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பணி 2025 செப்டம்பரில் முடிந்துள்ளது.
இது தமிழகத்திலேயே அதி நீளமுள்ள முதல் உயர்மட்ட மேம்பாலம் ஆகும்.
இதை திறந்து வைக்க நாளை (09.10.2025) கோவை வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
எது எப்போ எப்படி செய்தாலும் அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
இப்பாலத்தை கட்ட பூஜை போட்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றாலும், பாலத்தின் 95 சதவீத பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடந்து, அவரே தன் கையால் திறந்து வைக்கும் பாக்கியத்தையும் பெற்றுள்ளார்.
இந்த பாலம் கட்டுமானம், திட்டம், நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் ஆயிரம் அரசியல் பேசலாம். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, கூட்டணி கட்சி என ஆளுக்கொரு பேதங்கள் காட்டலாம்.
ஆனால் நான் இதில் ஆச்சர்ய – அதிசயமாகப் பார்ப்பதெல்லாம் 1974 – இல் இதே இடத்தில் இவர் அப்பா கலைஞர் மு.கருணாநிதி முதல் மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். அதே பகுதியில் ஆரம்பித்து அவர் மகன் முதலமைச்சராக நின்று 51 ஆண்டுகள் கழித்து மிகப் பிரம்மாண்டமான பாலத்தை திறந்து வைக்கிறார்.
எப்படி இது சாத்தியமானது?
நான் இப்பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் அப்பன் ஒரு பக்கம் மகன் ஒரு பக்கம் சென்றிருந்தால் நடந்திருக்குமா? குடும்பத்தில் நடந்த பங்காளி சண்டையில் விட்டு ஓடியிருந்தால் நிகழ்ந்திருக்குமா?
எத்தனை, எத்தனை கட்சிகள். எத்தனை எத்தனை தலைவர்கள். மாநிலங்கள், மண்டலங்கள், மாவட்டங்கள், இவை ஒன்றிணைத்த தேசியம், தேசியக் கட்சிகள், இயக்கங்கள், போராட்டங்கள், துதி பாடல்கள், சிறைவாசங்கள், பதவி நாற்காலி சண்டைகள், போர் வியூகங்களை மிஞ்சும் தேர்தல் தந்திரங்கள்…
இதை எல்லாம் கடந்து ஒரு அப்பனும், மகனும் ஒரே நேர்கோட்டில் வந்து பூமிப்பந்தில் – அதிலும் அரசியல் தளத்தில் நிற்பது சாத்தியமா?
கனவில்லை. நிஜம்தான். இதோ முதல்வர் ஸ்டாலின் அந்நிகழ்த்துக் கலையை சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
தோராயமாக ஒரு கணக்குப் போடுங்கள்.
தமிழ்நாட்டில் அ. தி. மு.க, பா.ம.க, தே.மு.தி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தை, சீமான் நாம் தமிழர், கொங்கு நாடு மக்கள், அம்மா மு.க, தினகரன் மு.க இப்படி எத்தனை கட்சிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மூப்பனார், ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி.எஸ். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், பண்ருட்டி, விஜயகாந்த், சீமான் …
போதாக் குறைக்கு ரஜினி, கமல், பாக்கியராஜ், T.ராஜேந்தர், வடிவேலு, ராதிகா, சரத்குமார் என எத்தனை நட்சத்திர பட்டாளங்கள்…?
தேசியத்தில் இந்திரா காந்தி, மொரார்ஜி , சஞ்சய் காந்தி, சந்திரசேகர்,ராஜிவ் காந்தி, வி.பி.சிங், நரசிம்மராவ், லல்லு தேவேகவுடா, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சுர்ஜித், பிரகாஷ் காரத், பரதன், வாஜ்பாய், அத்வானி, மோடி, அமித்ஷா, இப்படி எத்தனை தலைவர்கள்…
இதை விட்டால் எத்தனை தீவிரவாத, பயங்கரவாத, மிதவாத அமைப்புகள்… கச்சத்தீவு, இலங்கைத் தமிழர், இஷ்யூக்கள்?
இதை எல்லாம் எதிர்கொண்டு 51 ஆண்டு காலம் அப்பாவும் பிள்ளையும் ஒரே நேர்கோட்டில் அரசியல் புள்ளியில் நிற்பது என்பது சிலர் சொல்லுவது போல் குடும்ப வாரிசு அரசியலால் மட்டும் சாத்தியப்படுத்த முடியாது.
அதையும் தாண்டி வலுவான ஒன்று இவர்களின் ரத்த நாளங்களிலும், எண்ணப் போக்கிலும், சிந்தனா வழியிலும் இருந்தே இருந்திருக்க வேண்டும்.
ஆம். அதற்கு சமீபத்திய கரூர் சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நடிகர் அசுர வேகத்தில் கட்சி ஆரம்பிக்கிறார். அவர் அப்படி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரின் அப்பா – அம்மாவின் நீண்ட கால ஆசை.
ஆனால் அந்த ஆசையைப் புறந்தள்ளிய அவர் தன் பெற்றோரையே ஏதோ ஒரு காரணத்திற்கு பிரிந்து விடுகிறார். அதன் பிறகே கட்சி துவங்குகிறார். கட்சி உண்டு. கட்சிக்கான கட்டமைப்பு உண்டு. ரசிகர்கள் உண்டு, தொண்டர்கள் இல்லை. நிர்வாகிகள், கமிட்டிகள் வருகிறார்களோ இல்லையே கூட்டம் – பெருங்கூட்டம் மம்மானியாக திரள்கிறது. ஆயிரம் – இலட்சங்களில் அப்பாவி மக்கள்.
திட்டமிடாத கூட்டத்தில் நெரிசலில் சிக்கி அப்பாவிகள் குழந்தை குட்டிகளுடன் 41 பேர் பலியாகிறார்கள். 100 – க்கும் மேற்பட்டோர் காயமடைகிறார்கள்.
கட்சித் தலைவர் திட்டமிடல் இல்லை என்பது ஒரு பக்கம், போலீஸ் பாதுகாப்பு தரவில்லை, ஆளுங்கட்சி சதி என்றெல்லாம் புகார்கள், குற்றச்சாட்டுகள். கூக்குரல்கள். எது எப்படியாகினும் போன உயிர்கள் திரும்பி வரப் போவதில்லை.
அரசு ரூ.10 இலட்சம் நிவாரணம் அறிவித்தால், பாதிப்பேற்படுத்தின கட்சி தலைவர் ரூ.20 இலட்சம் அறிவிக்கிறார். இதில் உள்ள நுண் அரசியல் பாதிக்கப்பட்டவர்கள் யார் மீதும் குற்றம் சாட்டாது தம் விதியை தாமே நொந்து கொள்கின்றனர்.
இது ஓர் அரசியல் தாத்பர்யம்.
இது ஓர் மகா மகா தெளிந்த ஓர் அரசியல் வியூகம்.
நேற்று உதித்து, இன்று பிரச்சாரத்திற்குப் புறப்பட்டு மாஸ் காட்ட முனைந்த ஒரு புதிய கட்சி எடுத்த எடுப்பிலேயே இப்படி உயிர்ப்பலிகளை பழிகளாக சமாந்து புறப்படுகின்றதென்றால் அப்பாவும், மகனும் ஒரே நேர்கோட்டில் 51 ஆண்டு காலம் பயணித்த அரசியல் பயணமாசை எத்தகைய எத்தனை எத்தனை இடர்பாடுகளை சந்தித்து இந்தப் புள்ளிக்கு வந்திருக்கும்.
மகாமக குளம் சுவர் சரிவில் மாண்ட உயிர்கள்…
கும்பகோணம் பள்ளி விபத்தில் மாண்ட குழந்தைகள்.
திருச்சியில் தீக்கிரையான மண்டப பலிகள்.
டான்சி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைவிக்கு ஆதரவாய் எரிக்கப்பட்ட விவசாய பல்கலை மாணவிகள்.
கோவை போலீஸ்காரர் கொலை, தொடர்ந்த மதவாத கலவரம், கொலைகள், தொடர் குண்டு வெடிப்பில் சிதைந்த உடல்கள்…
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அநியாய உயிர்பலிகள் இப்படி எத்தனை துன்ப துயரங்களை கடந்த வந்திருக்கும்? அரசியல் என்பது சாதாரணம் அல்ல. மாபெரும் ரணங்களின் வடுக்களை சுமந்து பயணிக்கும் பயங்கரம். நெருப்பாற்றில் நீந்திக் கடக்கும் லாவா…
இதோ நாளை மு.க.ஸ்டாலின் முதல்வராக நின்று திறந்து வைக்கும் மேம்பாலம் என்பது வெறும் கல்லும், மண்ணும், சிமெண்ட்டும் போட்டுக் கட்டப்பட்ட வெறும் வெறும் கற்சுவர் அல்ல..
கலைஞர் என்ற அப்பாவும், ஸ்டாலின் என்ற மகனும் 51 ஆண்டு காலம் பயணித்து வந்த அரசியல் பெருவழியின் மாபெரும் புள்ளி…
கட்சி மாச்சர்யங்கள் கலைந்து அவரை வாழ்த்துவோமாக…
— கா.சு. வேலாயுதன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.