மூளை அருகே புற்றுநோய்க் கட்டி: 4 வயது சிறுவனை அதிநவீன சிகிச்சை மூலம் குணப்படுத்திய தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!
மூளை அருகே புற்றுநோய்க் கட்டி:
4 வயது சிறுவனை அதிநவீன
சிகிச்சை மூலம் குணப்படுத்திய
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!
மூளை அருகே புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை முறையைப் பயன்படுத்தி குணப்படுத்தியுள்ளனர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மகன் தசரதன் (4).
இச் சிறுவனுக்கு மூளை அருகே புற்றுநோய்க் கட்டி இருப்பது கடந்த 4 மாதங்களுக்கு முன் தெரிய வந்தது.
இதையடுத்து அச்சிறுவனை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி யில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால் புற்றுநோய்க் கட்டி மூளைக்கு அருகில் இருந்ததால் அது முழுமையாக அகற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அச்சிறுவனை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவனது பெற்றோர் அழைத்து வந்தனர். அங்கு அவனுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்ததில் புற்றுநோய்க் கட்டி அகற்றப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் உதவி பேராசிரியர்கள் சக்திபிரியா, அனிதாகுமாரி, அருண், செல்வகுமார், ராஜகோபாலன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் ஆலோசனை செய்து அச்சிறுவனுக்கு அதிநவீன கதிர்வீச்சு கருவி மூலம் சரிசெய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி, தினமும் 3 நிமிடம் வீதம் ஐந்து நாட்கள், அதாவது மொத்தம் 15 நிமிடம், கதிர்வீச்சு சிகிச்சை செய்து அக்கட்டியை அகற்றி முற்றிலும் குணப்படுத்தியுள்ளனர்.
இம் மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் பாராட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“இச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை செலவு ஆகும். ஆனால் இச்சிறுவனுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இச்சிகிச்சை அளிக்ப்பட்டுள்ளது,” என்றார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று விதமான அதநவீன கருவிகளைக் கொண்டு இச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடையில் கரோனா தாக்கம் காரணமாக 2 ஆண்டுகள் பரிசோதனைகள் செய்யப்படவில்லை.
தற்போது தினமும் 125க்கு மேற்பட்டோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இக் கதிர்வீச்சு துறை ஏற்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை 2,978 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சை டெல்டா மாவட்டங்களில் தஞ்சையில் மட்டும்தான் உள்ளது என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன்.
ஏற்கெனவே 60 வயது பெண்ணுக்கு அவரது மூளையில் இருந்த புற்று நோய்க் கட்டியை அதநவீன கதிர்வீச்சு கருவி மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளோம்.
தற்போது அதே போன்று நவீன சிகிச்சை மூலம் 2வது முறையாக 4 வயது சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் டாக்டர் பாலாஜி நாதன்.