உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி – சக காவலர்கள் நெகிழ்ச்சி !
உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி – சக காவலர்கள் நெகிழ்ச்சி ! – ஆம்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு சக பெண் காவலர்கள் நிதியுதவி வழங்கி, அவரது நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா இவர் ஆம்பூரில் மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியில் இருந்தபோது கடந்த 17.04.2024 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற காவலர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டு ஆம்பூர் அடுத்த மாதனூரிலிருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை ஒப்பிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் , ஆறுமுகம், புவனேஸ்வரி, அண்ணாமலை, பரிமாளா ஆகிய காவலர்கள் விபத்துகளாலும் தற்கொலையாலும் அடுத்தடுத்து பலியான சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குசம் இணையத்திலும் இதுதொடர்பாக, ”அடுத்தடுத்து தொடர் மரணம்? அச்சத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள்! ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், விபத்தில் இறந்துபோன காவலர் பரிமளாவுடன் 2003 ஆண்டு பேட்சில் காவலர் பணியில் சேர்ந்து பணியாற்றிய பெண் காவலர்கள் ஒன்றிணைந்து, பரிமாளா குடும்பத்தினருக்கு நிதி வழங்க முடிவெடுத்தனர். அதற்காக, ”தோழிகள் -2003 பேட்ச்” என்னும் WhatsApp குழு மூலம் ”நமக்குள் ஒன்றிணைவோம், நமக்காய் ஒன்றிணைவோம்” என்ற நோக்கத்துடன் , நிதியை திரட்ட தொடங்கினர்.
சுமார் 11 இலட்சத்து, 96 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி , அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான KVP அஞ்சலக வைப்பு தொகை பத்திரங்கள் , அசல் ரசீதுகள் மற்றும் மீதமுள்ள தொகையான 1 இலட்சத்து 96 ஆயிரம் ரொக்க பணத்தை பரிமளாவின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து அவரின் திருவுருப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவருடன் பணியாற்றிய நிகழ்வுகளை சக காவலர்கள், ஒன்றுகூடி கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கா . மணிகண்டன்