எச்சிலை மீது உருளும் சடங்குக்கு தடை ? – திருவண்ணாமலை அர்ச்சகர் அப்பீல் !
எச்சிலை மீது உருளும் சடங்குக்கு தடை ? – திருவண்ணாமலை அர்ச்சகர் அப்பீல் ! எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி மீண்டும் ஒரு அப்பீல் , தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீடு.
கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர மடத்தில் வருடந்தோறும் ஆராதனை விழா என்ற பெயரில் விழாவின் நிறைவுநாளில் , அக்ரகாரத்தில் பிராமணர்கள் சாப்பிட்டு போட்ட இலையில், பிற சாதியினரை உருள வைப்பதே இச்சடங்கு. இறைவனுக்கும் ஆன்மீகத்துக்கும், மனிதத் தன்மைக்கும், சுகாதாரத்துக்கும் எதிரான இச்சடங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் தடை செய்தது.

இதனிடையே, கடந்த மே 18-ல் நடைபெற்ற ஆராதனை விழாவில், பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்டு, கரூரை சேர்ந்த நவீன்குமார் என்பவர், மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த மதுரை ஐகோர்ட் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் என்பவர் உண்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, மே 18-ல் எச்சிலை மீது பக்தர்கள் உருண்ட நிகழ்வும் நடைபெற்றும் முடிந்தது.
இந்த உத்தரவு குறித்து, திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருந்த அறிக்கை “அந்நாளில் பார்ப்பன பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது நேர்த்திக் கடன் என்ற பெயரில் தமிழர்கள் உருளும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. பக்தியின் பெயரால் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் 2015 – இல் தடை செய்யப்பட்டது.
இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்- எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை – அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பிப்பது சட்டப்படி குற்றச்செயல் அல்லவா? உச்சநீதிமன்றத்தைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்று நினைக்கிறாரா அந்த நீதிபதி?” என ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை அர்ச்சகர் அரங்கநாதன் –
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, கரூர் மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் , திருவண்ணாமலை கோயில் அர்ச்சகர் அரங்கநாதன் என்பவரும், உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழாவில் உயர் நீதிமன்ற தடை உத்தரவால் 2015-க்கு பிறகு தற்போதுவரை உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனடிப்படையில் இந்த ஆண்டும் அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் நவீன் குமார் என்பவர் பழைய உத்தரவுகளை மறைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அவருக்கு சாதகமான உத்தரவைப் பெற்றுள்ளார்.
எனவே இந்த உத்தரவை பலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ள நிலையில், உண்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், அந்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவானது, ஜூன் 25 அன்று நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தப்போது , அந்த மனுமீதான தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளார்கள்.

அர்ச்சகர் சங்கம் கண்டனம்
உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தடை செய்த நிகழ்வை, ஒரு நீதிபதி மீண்டும் நடத்தச் சொல்லி உத்தரவிட முடியுமா? இரு நீதிபதியின் உத்தரவு பொதுநல வழக்கில் போடப்பட்டது. பொதுநல வழக்கின் உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும் தானே? நீதித்துறை மீதான தமிழக ஆன்மீகவாதிகளின் நன் மதிப்பை சீர்குலைக்கிறது இத்தீர்ப்பு.
சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, பாலிய திருமணம், அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக மறுப்பு போன்ற வைதீகத்தின் பெயரிலான சமூக கொடுமைகளை தமிழ் ஆன்மீக உலகம் ஒருபோதும் ஏற்றதில்லை. வள்ளுவர், வைகுண்டர் முதல் வள்ளலார் வரை வலியுறுத்திய சமத்துவ ஆன்மீகத்தையே தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளும். அரசியல் சட்ட விரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை தமிழ் ஆன்மீக உலகின் சார்பில் நிராகரிக்கிறோம்.
ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ள பார்ப்பனர்கள்தான், மனித மாண்புக்கு எதிரான இத்தீர்ப்பையும் ஆதரிக்கிறார்கள். எச்சிலை சடங்கையும் அதை ஆதரிக்கும் தீர்ப்பையும் தடுக்காவிட்டால் தமிழகம், உத்தரப்பிரதேசமாக மாறும். என அர்ச்சகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழங்கிய சர்ச்சையான தீர்ப்புகள் !
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய விதி இல்லை என்ற தீர்ப்பும் – சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அதிகாரமிக்க இடத்தில் இருந்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டாம் என என்னிடம் கேட்டுக்கொண்டதாக கூறி தீர்ப்பளித்தவர்.
கா. மணிகண்டன்