பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் … சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !
பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் … சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !
சாத்தூரில் இன்று நடைபெற்ற வெடி விபத்துக்கு காரணமே காவல்துறை தான் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரே குற்றஞ்சாட்டியிருப்பது சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் தொண்டர்களுடன் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கிறார்.
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் மதிமுகவை சேர்ந்தவர். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நலத்திட்ட உதவிகளுக்காக அடிக்கல் நாட்ட வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனை அதிமுக கவுன்சிலர் அடைக்கலம் என்பவர் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் புகார் அளித்த நிலையில் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவருடைய ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் மீது சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாகவும்; ஏற்கனவே , இவர் வெம்பக்கோட்டை பகுதியில் பணிபுரிந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பலரது சிபாரிசில் வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியில் அமர்ந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகிறார்.
சட்டமன்ற உறுப்பினரே, தனக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்வதாக இன்ஸ்பெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பதும்; சாத்தூர் பட்டாசு ஆலை விபத்துக்கு போலீசார்தான் காரணம் என்பதாக குற்றஞ்சாட்டியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— மாரீஸ்வரன்.