சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! தலை சிதறி ஒருவர் பலி 6 பேர் படுகாயம் !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தானி பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று 50க்கும் மேற்பட்ட அறைகளுடன் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் வெம்பக்கோட்டை கீழ தாயில்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
சம்பவத்தின் போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் குறைந்த அளவு பணியாளர்கள் காலை 9 மணி அளவில் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்துள்ளனர்.
தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மணி மருந்து கலவை மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது, இந்த சத்தமானது சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு உணரப்பட்டது,
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தாயில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (50), ராஜசேகர் (29), படந்தாலைச் சேர்ந்த ராஜபாண்டி (37), காளிமுத்து (38), ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ்ராம் (28), ராகேஷ் (20) ஆகிய 6 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி பார்த்தபோது உயிரிழந்த நிலையில் பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுருசாமி (47) என்பவர் தலை மற்றும் கை கால்கள் சிதறிய நிலையில் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான வெம்பக்கோட்டை காவல் துறையினர், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கணேசன், காமராஜ், வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை போர் மேன் லோகநாதனை கைது செய்தனர்.

மேலும் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் அருகில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டும் மேற்கூரை இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்த பாலகுருசாமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும், ஆலை தரப்பிலிருந்து 5,50,000 வழங்கப்பட்டுள்ளது, அதே போல் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் அருகே சின்ன காமன்பட்டி கிராமத்தில் கமல் குமார் பட்டாசு ஆலயில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு முடிவதற்குள் மீண்டும் பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது அனைவரையும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
— மாரீஸ்வரன்