என்.ஐ.டியில் முதல் முதலில் சேர்ந்த பழங்குடி இன மாணவிகள் இவர்கள் இல்லையா ?
என்.ஐ.டியில் முதல் முதலில் சேர்ந்த பழங்குடி இன மாணவிகள் இவர்கள் இல்லையா ? திருச்சி என்.ஐ.டியில் முதல் முதலாக பழங்குடி இன மாணவிகள் சுகன்யா, ரோகிணி ஆகியோருக்கு இடம் கிடைத்திருப்பதாகவும் 60 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றில் இடம்பிடித்த பழங்குடி மாணவிகள் என்றெல்லாம் பிரபல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், பழங்குடியின மக்களின் செயற்பாட்டாளர் லட்சுமணன் ஒடியன் லக்ஷமண சாமி இதை மறுத்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டி யில் முதன்முதலாக பழங்குடி இன மாணவிகளான சுகன்யா மற்றும் ரோஹிணிக்கு இடம் கிடைத்திருக்கிறது
என்ற செய்திகளை பிரபல ஊடகங்களில் அடிக்கடி பார்க்கிறேன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆனால், திருச்சி என். ஐ. டியில் இடம் கிடைத்து படித்த முதல் பழங்குடியின மாணவியின் பெயர் சபிதா.
இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சபிதா கோவை மாவட்டம் வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள காளியூர் என்னும் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர். வெள்ளியங்காடு அரசு மேல்நிலைபள்ளியில் பயின்ற அவர் பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.
பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தார். ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் JEE தேர்வை முடித்து திருச்சி என்.ஐ. டியில் வேதிப் பொறியியல் பிரிவில் 2017 ஆம் ஆண்டில் சேர்ந்தார். என் ஐ டிக்களுக்கிடையேயான தேசிய அளவிலான கபடிப் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி என். ஐ.டிக்கு தன் வாழ்நாளில் அப்படியொரு பரிசை முதன்முதலாக சபிதாதான் வாங்கித்தந்தார்.
வேதிப் பொறியியல் படிப்பி சிறந்த நிலையில் தேர்ச்சியடைந்த சபீதா. தற்போது மங்களூரில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்” என்ற தகவலை வெளியுட்டுள்ளார்.
பழங்குடி இன மாணவிகள் சுகன்யா, ரோகிணி ஆகியோருக்கு முன்பே வரலாற்றை நிகழ்த்திய மாணவி சபிதாவை பாராட்டலாமே!
-எம்.எஸ்.ரஞ்சித்