மேயரை அலறவிட்ட மாஜி மேயர் எமிலி – தரைக்கடை வியாபாரிகளிடம் லஞ்சம், மாமுல்
-இப்ராகிம்
திருச்சி மாநகராட்சி பகுதியில் பல்வேறு தரைக்கடைகள், சிறுகடைகள், சாலையோர கடைகள் இயங்கி வருகின்றன. பொருளாதார வசதியற்ற சிறு வியாபாரிகள் தினமும் கடன் வாங்கி தங்கள் தொழிலைத் தொடங்கி, நடத்தி, அன்றைய தினமே கடனை முடித்து தங்களுடைய பிழைப்பை நடத்தி வருகின்றனர். இப்படி வியாபாரம் நடத்தும் வியாபாரி கள் மாமூலாகவும், லஞ்சமாகவும் கரப்ஷன் அதிகாரிகளுக்கு காசை அழுவது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் தற்போதைய மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு ஒன்றை அளித்தார். அம்மனு குறித்து எமிலி ரிச்சர்ட் கூறியது, “திருச்சி மாநகரில் தரைக்கடைகள், சிறுகடைகளை வியாபாரிகள் சாலை ஓரங்களிலும், நடைபாதைகளிலும் கடை அமைத்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் பலர் முதலீடு செய்யக் கூட பணம் இல்லாததால் அன்றன்று கடன் வாங்கி தொழிலை நடத்தி வருகின்றனர். காந்தி மார்க்கெட் பகுதியைச் சுற்றியுள்ள தரைக்கடை வியாபாரிகள் பலர் காலை வரும் பொழுது 2000 ரூபாய் கடன் வாங்குவார்கள், பிறகு மாலை அதை 2200 ஆக வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டு 100, 200 வருவாயை வீட்டுக்கு எடுத்து செல்வர்கள். ஆனால் அப்படி கிடைக்கும் 100, 200 ரூபாயையும் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என பலர் வந்து 20 ரூபாய், 30 ரூபாய், 50, 100 என்று மாமுலாகவும், லஞ்சமாகவும் பெற்று செல்கின்றனர்.
இதனால் காய்கறி விற்கும் ஒரு கடைக்காரர் தன்னுடைய வீட்டிற்கு எந்தவித லாபத்தையும் எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப் படுகிறார். பிறகு எப்படி அவர் குடும்பத்தை நடத்துவது, தனது பிள்ளை குட்டிகளை கவனித்துக் கொள்வது. இதனால் அவர்கள் வாழ்க்கை நடத்துவதே சிரமம் ஏற்படுவதாகவும், தற்கொலை செய்துகொள்ள கூட மனம் செல்வதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் என்னை சந்தித்த சில வியாபாரிகள் கூறினர்.
இதையடுத்து நான் அவர்களுக்கு எவ்வளவு கடன் வாங்குகிறீர்கள் என்று கேட்டேன் 2000 ரூபாய் ஒரு நாளைக்கு வாங்குவார்கள் என்றார்கள். அவர்களுக்கு நான் 2000 ரூபாய் கொடுத்து 2002 ரூபாயாய் திரும்பி வாங்கிக் கொள்கிறேன். இதனால் அவர்களுக்கு 198 ரூபாய் மிச்சமாகிறது. நான் வாங்கிக் கொள்ளும் 2 ரூபாயையும் நல்ல காரியங்களுக்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறேன். அதேநேரம் அனைவருக்கும் என்னால் உதவி செய்வது என்பதும் சிரமம். அதனால் இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினேன்,
சில தினங்களுக்கு முன் பேப்பர் படிக்கும் பொழுது திருச்சி மாநகராட்சி கமிஷனர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சென்று மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் தரைக்கடை, சிறுகடை வியாபாரிகளிடம் மாமூல், லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறேன்” என்றார்.