மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு  மடல்..

-புலவர் முருகேசன்

0

புலவர் க.முருகேசன் அவர்கள் எழுதி வரும் திறந்த மடல் அங்குசம் செய்தி இதழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அரசியல் களத்தில் 70 ஆண்டு காலம் எழுதியும், பேசியும் வந்துள்ளார். 85 வயதிலும் போராடக் களங்களில் பங்கெடுத்து திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்து வருகிறார்.

மாநிலச் சுயாட்சி என்பது வெறும் மாநில உரிமைகள் மட்டுமல்ல; ஒன்றிய அரசை வலிமைப்படுத்தும் ஒரு கருத்தியல் என்று இந்தத் திறந்த மடலில் குறிப்பிட்டுள்ளார். அங்குசம் செய்தி வாசகர்களின் பார்வைக்கு இம்மடலை முன் வைக்கின்றோம்.

 -ஆசிரியர்

 

மேற்கு வங்க முதல் அமைச்சர் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்களுக்கு, வணக்கம்.

- Advertisement -

- Advertisement -

பெரியாரை ‘தந்தை பெரியார்’ என்றும், அண்ணாவை ‘பேரறிஞர் அண்ணா’ என்றும், மு.கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்றே பெருமையுடன் அழைத்து வருகின்றோம். அதுபோலவே மேற்கு வங்கத்தில் உங்களை அக்கா என்னும் பொருள்பட வங்க மொழியில் ‘திதி என மக்கள் உங்களை அழைத்துவருவது கண்டு பெருமை கொண்டேன்.  தொடர்ந்து 3 முறை மேற்கு வங்க முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மக்கள் மனத்தில் உங்களுக்கென்று ஓர் உயர்வான இடம் உள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். தெற்கில் திராவிட இயக்கங்கள்தான் மாநிலச் சுயாட்சி கேட்டுக் கொண்டிருக்கின்றது என்ற நிலை மாறி, இன்று மேற்குவங்க முதல் அமைச்சராய் உள்ள நீங்களும் மாநிலச் சுயாட்சி குறித்துக் கருத்துகள் பலவற்றை வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.   பல ஆண்டுகாலம் நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாநிலச் சுயாட்சி கோரிக்கை உங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் உங்களுக்கு இந்தத் திறந்த மடலை எழுதுகிறேன்.

அண்ணா, கலைஞர் முழக்கம்

1962-ல் பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட நேரத்தில், மாநில சுயாட்சியை வலியுறுத்தினார். ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்குக் கவர்னரும் ஏன்’என்று மக்களிடத்தில் கேள்விகளை முன்வைத்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை,  ஒன்றிய அரசு நினைத்தால் கலைப்பது என்பது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்று மக்களிடையே அண்ணா பிரச்சாரம் செய்து வந்தார். 1969-ம் ஆண்டிலேயே ஒன்றிய,-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காகத் தமிழக அரசின் சார்பில் நீதியரசர் பி.வி.ராஜமன்னார் தலைமையிலான ஒரு குழுவை அந்நாளைய முதல் அமைச்சர் கலைஞர் நியமித்தார். அக்குழு அறிக்கையை 1971-ல் அளித்தது.

அந்த அறிக்கையில் மாநில அரசுகள் சட்டமியற்றும் அதிகாரம், நிதியுறவுகள், ஆளுநர், வர்த்தகமும் வாணிகமும் உள்ளிட்ட 21 தலைப்புகளில் அறிக்கை அமைந்திருந்தது. ராஜமன்னார் குழுவின் அறிக்கை ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் முன்வைக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் தன்னாட்சிக் குரலைச் சட்டப்பூர்வமான வழியில் தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே அது கருதப்பட்டது.

சட்டமன்றத்திலும் மேலவையிலும் மாநிலச் சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதல்வர் கருணாநிதி, மாநிலத் தன்னாட்சிக்காகச் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன் என்றார். ‘நாளைக்கே தி.மு.கழகத்தைப் பார்த்து, நீ மாநிலச் சுயாட்சி கேட்கிறாய், ஆகவே, உன் அரசாங்கத்தைக் கலைக்கிறேன் என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால், அதைவிட என்னுடைய வாழ்க்கையிலே புனிதமான சரித்திரச் சம்பவம் வேறு எதுவுமே இருக்க முடியாது’ என்று பேசினார் கலைஞர்.

ஜெயலலிதாவின் முழக்கம்

4 bismi svs

2001-இல் புதுடெல்லியில் கூட்டப்பட்ட மாநிலங்களிடை மன்றக் கூட்டத்தில் மாநில உரிமைகள் குறித்துப் பேசிய அந்நாளைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘ஆளுநர் பதவியின் தேவை குறித்துப் பரிசீலனை செய்யவேண்டும். தொடரவேண்டும் என்று மத்திய அரசு கருதினால் மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்தே ஆளுநரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும், மாநிலச் சட்டமன்றம் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே குடியரசுத் தலைவர் ஆளுநரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று ஜெயலலிதாவின் உரை  கூர்மை கொண்டவையாக இருந்தன.

ஜெயலலிதா குறிப்பிட்டுப் பேசிய விஷயங்களில் மற்றொன்று, பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநரின் அதிகாரம் பற்றியது. ‘ஆளுநர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும்போது, அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும், ஆளுநருக்கு இப்பிரச்சினையில் எந்தத் தனி அதிகாரத்தையும் அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை’ என்றார் ஜெயலலிதா.

அண்ணா, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் மாநிலச் சுயாட்சிக் குறித்த கருத்துகளை மக்களிடம் வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாநிலச் சுயாட்சிக் கொள்கையில் உறுதியாகவே இருக்கிறார்.

மேற்கு வங்கத்தின் முழக்கம்

பாஜக, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் பல்வேறு வியூகங்களை வகுத்துத் தங்களின் ஆட்சியைத் தோற்கடிக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பல தலைவர்களைத் தங்களது பக்கம் பா.ஜ.க இழுத்துவிட்டது. தொடர்ச்சியாகத் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.கவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மோடிக்கும் உங்களுக்கும் அரசியல் களத்தில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இந்நிலையில், மேற்குவங்க ஆளுநராக ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஜக்தீப் தன்கருக்கும் உங்களுக்கும் தொடக்கத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை.

பல விவகாரங்களில் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுவந்தன.  `பல்கலைக்கழகங்களின் வேந்தர்’என்ற அடிப்படையில், கடந்த 2021 ஜூலை மாதம் துணைவேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் தன்கர் நடத்தினார். ஆனால், துணைவேந்தர்கள் யாரும் அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. அதற்காக உங்கள் மீது ஆளுநர் குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் கல்வித்துறை, அரசியல் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் விமர்சித்தார். அதற்கு, `அரசியல் கட்சித் தலைவர் போல ஆளுநர் செயல்படுகிறார்’என்று பதிலடி கொடுத்து அரசியல் அரங்கில் ஆளுநர்கள் மத்திய அரசின் கங்காணியாகச் செயல்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினீர்கள்.

நாட்டின்74-வது சுதந்திரத் தினத்தன்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் தேநீர் விருந்து கொடுத்தார். சுதந்திரத் தினத்தன்று ஆளுநர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கவர்னரின் தேநீர் நிகழ்வை நீங்கள் புறக்கணித்தது ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட நல்ல பதிலடியாக அமைந்திருந்தது.  உங்களின் புறக்கணிப்பு, ஆளுநருக்கு அவமானத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது என்பதை ஊடகங்களின் வழியாக அறிந்தேன்.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட வேண்டிய மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் ஆளுநர் உரையில்லாமல் தொடங்கியது. உங்களைத் தொடர்ந்து தெலுங்கனா மாநிலத்திலும் ஆளுநர் உரையில்லாமல் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது என்பது நல்லதோர் ஆரம்பம்தான். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் இணைந்து செயல்பட்டு பாஜகவை தோற்கடிப்போம் என்று கூறியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தரும் வார்த்தையாக அமைந்திருந்தது.  தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநிலச் சுயாட்சிக் கொள்கையை முன்னிறுத்துகிறார்.

சமூகநீதி என்னும் கருத்தாக்கம் இந்தியா முழுமையும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அளவில் சமூகநீதிக்கான மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். மாநிலங்கள் வலிமையாக இருந்தால்தான் வலுவான ஒன்றிய அரசு அமையும். மாநிலங்கள் வலிமையடைய மாநிலச் சுயாட்சித் தேவை என்பதை இந்திய ஒன்றியத்தின் தென்பகுதியில் நாங்கள் உரத்துச் சொல்லுகிறோம்.  வடபுலத்தில் நீங்களும் உரத்துச் சொல்லி மாநிலச் சுயாட்சி என்னும் கருத்தாக்கத்தில் தாங்களும் இணைந்து, பல்வேறு மாநிலங்களையும் இணைத்து வலிமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

(அடுத்த மடலில் சந்திப்போம்)

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.