கழகங்களின் கலாட்டாவால் கைமாறிய அவலம்..!
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திமுக வசப்படுத்தி வைத்திருந்த பேரூராட்சி தான் நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சி. ஜெயலலிதா ஆட்சியின் போதே இந்தப் பேரூராட்சியின் சேர்மனாக வெற்றிக்கொடி நாட்டியவர் களக்காடு திமுக ஒன்றிய செயலாளரான பி.சி.ராஜன்.
திமுகவின் கோட்டையாகவே இருந்துவரும் இந்தப் பேரூராட்சி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிக்குள் வந்தாலும் இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்களாக கூட்டணிக் கட்சியினரே, அதுவும் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பது உ.பி.க்களிடையே பெரிதும் கவலையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
எம்.எல்.ஏ.க் களாக இருந்த எர்ணாவூர் நாராயணன், வசந்தகுமார் இப்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரூபி மனோகரன் என அனைவருமே சென்னையில் செட்டிலாகிவிட்டவர்கள். எடப்பாடி ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் மட்டும் தான் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றார்.
களக்காடு பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தலைவர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் 90% நகராட்சிகளை மெஜாரிட்டி கவுன்சிலர்களுடன் கைப்பற்றிய ஆளும்கட்சியான திமுக, சில நகராட்சிகளை இழந்தது. சில நகராட்சிகளில் மெஜாரிட்டி இல்லாமல் ஊசலாடியது. 27 வார்டுகளைக் கொண்ட இந்த களக்காடு நகராட்சியில் திமுக 10 வார்டுகளையும் அதிமுக 6 வார்டுகளையும் கைப்பற்றியது.
மீதியுள்ள வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இரண்டு கழகங்களுக்குமே மெஜாரிட்டி இல்லாததால் சுயேட்சைகளை இழுப்பதில் ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டது. தங்களது கட்சியின் பலம் 6 தான் என்றாலும் 27-ஆவது வார்டில் வெற்றி பெற்ற தனது மனைவி ஆயிஷாவை தலைவராக்கிவிடலாம் என்ற ஆசையில், களக்காடு அதிமுக நகரச் செயலாளரான செல்வராஜை அணுகியுள்ளார் ஆயிஷாவின் கணவரான லக்கிராஜா. ஆனால் செல்வராஜோ, 16-ஆவது வார்டில் போட்டியிட்டு தோற்ற கடுப்பில் “அட போய்யா நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டு” என எரிச்சலாகிவிட்டாராம். இதை யெல்லாம் கேள்விப்பட்டு செம டென்ஷனாகிவிட்டார்களாம் ர.ர.க்கள்.
காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய அதிமுக ஆட்சியில் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டாராம் செல்வராஜ். அதிலும் நாங்குனேரி இடைத்தேர்தல் நடந்த போது செல்வராஜ் காட்டில் கரன்சி மழை தானாம். அப்படிப்பட்ட ஆளு கொஞ்சம் செலவழிச்சிருந்தா அதிமுக தான் நகராட்சியைக் கைப்பற்றியிருக்கும். களக்காட்டில் நடந்த இந்த கூத்தை யெல்லாம் எடப்பாடியிடமே கூறி குமுறியிருக்கிறார்கள் ஆயிஷாவும் லக்கி ராஜாவும். இந்த இஞ்சிக் கேப்பில் பஞ்ச் அடித்து அதிமுகவின் மூன்று கவுன்சிலர்களையும் சுயேட்சைகளையும் தூக்கிவிட்டது திமுக.
இருந்தாலும் தலைவர் பதவிக்கு வெயிட்டாக கவனிக்கும் அளவுக்கு திமுக பெண் கவுன்சிலர்கள் இல்லை என்பதால், 10-ஆவது வார்டில் வெற்றி பெற்ற ‘வெயிட் பார்ட்டி’யான சுயேட்சை சாந்தி சுபாஷ் தான் இப்போது களக்காடு நகராட்சித் தலைவர். முன்னாள் பேரூராட்சி சேர்மனும் களக்காடு தெற்கு திமுக ஒ.செ.வுமான பி.சி.ராஜன் தான் நகராட்சியின் துணைத்தலைவர்.