நட்பாக பழகி நகையை ஆட்டையப் போட்ட வக்கீல் ! பெண் வக்கீல் புகாரில் கைது !
நட்பாக பழகி நகையை ஆட்டையப் போட்ட வக்கீல் ! பெண் வக்கீல் புகாரில் கைது ! நட்பின் அடிப்படையில் பழகிய சக பெண் வழக்கறிஞரிடம் தனது தேவைக்கு அவரது நகையைப் பெற்றுக்கொண்டவர், நகையைத் திருப்பிக் கேட்டபோது திருப்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைத்ததோடு, பெண் வழக்கறிஞரை தாக்கி மானப்பங்கம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கறிஞர் ஒருவரே கைதாகியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல், ராமன்செட்டிபட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் (29) மற்றும் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஸ்வரி (28) இருவரும் பயிற்சி வழக்கறிஞர்களாக பணியாற்றியபோது அறிமுகம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
நட்பாக நெருங்கிப் பழகிய வழக்கறிஞர் ராஜேஸ்வரியிடம் தனது தனிப்பட்ட குடும்பத் தேவைகளுக்காக, அவரது நகைகளை வாங்கி அடகு வைத்திருக்கிறார் செந்தில்குமார். கொடுத்த நகையைத் திருப்பிக் கேட்டபோது, வழக்கறிஞர் ராஜேஸ்வரியை அடித்த்து துன்புறுத்தி மானப்பங்கப்படுத்தியிருக்கிறார், செந்தில்குமார்.
இதனால், மனம் வெறுத்த வழக்கறிஞர் ராஜேஸ்வரி, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து, செந்தில்குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதனையறிந்த, செந்தில்குமார் தலைமறைவாகிவிட, அப்போதும் விடாமல் விரட்டிப்பிடித்த ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கறிஞர் செந்தில்குமாரை கைது செய்து சிறையிலடைத்திருக்கின்றனர்.
நட்பாக பழகி ஏமாற்றிய வழக்கறிஞர் ஒருவரை, மற்றொரு பெண் வழக்கறிஞரே புகார் கொடுத்து சிறையிலடைத்த சம்பவம் பார்ப்போர் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.