அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 54 லட்ச ரூபாய் மோசடி ! 2 பேர் கைது !
தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 54 லட்ச ரூபாய் மோசடி! 2 பேர் கைது ! தேனி சமதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், மனைவி ஆர்த்தி. இவர் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
“நான் எனது கணவருடன் சேர்ந்து தேனி பகுதியில் மினரல் வாட்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகின்றேன். கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கு மினரல் வாட்டர் விநியோகம் செய்ய சென்ற போது அந்த அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த பொன் ஆண்டவர் என்ற செல்லம் அறிமுகமானார்.
“எனக்கு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை நன்றாக தெரியும். எனவே, உங்களது கணவருக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன்” என உறுதியாக கூறினார். இதனை நம்பிய நான் ரூபாய் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பல தவணைகளாக கொடுத்தேன்.
பின்னர் பொன் ஆண்டவர் என்ற செல்லம் அவருடைய சகோதரர் பொன் சண்முகநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு நியமன கடிதத்தை எங்களிடம் கொடுத்தார்கள்.பின்னர் இது போலியான நியமன கடிதம் என்பதனை தெரிந்து கொண்டேன்.
இதற்கிடையில் எங்களது உறவினர்கள் சிலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இவர்கள் இருவரும் 36 லட்சத்து 80 ஆயிரம் உட்பட மொத்தம் 54 லட்சத்து 40 ஆயிரம் பெற்றுக் கொண்டு எங்களை ஏமாற்றி விட்டனர் .
இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தினை திருப்பி பெற்று தர வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்த தேனி போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், உத்தரவின் பெயரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அய்யனாரின் மனைவி ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பொன் ஆண்டவர் என்ற செல்லம், பொன் சண்முகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ஜெய்ஸ்ரீராம்.