இன்சூரன்சு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – பொறிவைத்து பிடித்த போலீஸ் !
இன்சூரன்சு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – பொறிவைத்து பிடித்த போலீஸ் ! சென்னையில் ஆன்லைன் மோசடி ஆசாமி அதிரடி கைது – 7 மாதங்கள் காத்திருந்து மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னையில் இன்சூரன்சு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் பணம் சுருட்டி வந்த ஆன்லைன் மோசடி ஆசாமியை 7 மாதங்கள் காத்திருந்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.ரிலையன்ஸ் லைப் இன்சூரன்சு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ.இன்சூரன்சு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பண மோசடி சம்பவங்கள் நிகழ்ந்தன.
செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் பேசி இது போன்ற மோசடி லீலைகளை அரங்கேற்றி வந்தார். இன்சூரன்சு அக்கவுண்ட் முடிந்து விட்டதாகவும், புதுப்பிக்க வேண்டும் என்று கூறி பணம் கேட்டு சுருட்டி உள்ளார்.அதுபோல இன்சூரன்சு பணம் முதிர்ச்சி அடைந்து விட்டது என்றும், அந்த பணத்தை பெற சேவை கட்டணம் அனுப்புங்கள், என்று சொல்லியும் மோசடி நடந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட சென்னை எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் ரூ.60 ஆயிரம் ஏமாற்றப்பட்டதாக கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதுபோல் சென்னை வரதராஜபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி செய்ததாக கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி புகார் கொடுத்தார். இந்த புகார்கள் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கை தியாகராயநகர் துணை கமிஷனர் சரகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீசார் கடந்த 7 மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.மோசடி பணம் யூ.பி.ஐ.பணபரிவர்த்தனை மூலம் கைமாறியதும், கைமாறப்பட்ட பணம் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் போலியான முகவரி மூலம் சிம்கார்டு வாங்கி அதன் மூலம் செல்போனில் பேசி, மோசடி நபர் புத்திசாலித்தனமாக செயல்பட்ட சென்னை பெரும்பாக்கம், சேரன்நகரில் வசித்து வந்த மோசடி ஆசாமி முகமது ஜாவித் (வயது 33) என்பவரை சைபர் கிரைம் போலீசார் குறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
கிட்டத்தட்ட கடந்த 7 மாதங்களாக காத்திருந்து பொறி வைத்து போலீசார் இவரை கைது செய்தனர். கைதான முகமது ஜாவித்திடம் இருந்து, லேப்-டாப், 12 வயர்லெஸ் போன்கள், 15 செல்போன் சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாவித்திடம் பணத்தை இழந்த 2 பேர்கள் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். இதுபோல் பணத்தை இழந்தவர்கள் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி முகமது ஜாவித்தை பொறி வைத்து பிடித்த சைபர் கிரைம் போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்ரவர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.