கரூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி !
கரூரில் தனியார் பைனான்ஸ் கம்பெனியின் பணத்தை மோசடி செய்த அந்த நிறுவன ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் கரூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார்.
இந்த நிறுவனத்தில் கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிறுவனத்தின் திண்டுக்கல் கிளையில் கடந்த 11 ஆம் தேதி வசூலான பத்து இலட்சத்துடன் மோகன் கரூர் வந்திருக்கிறார்.
அப்போது, தனது இருசக்கர வாகனத்தில் பணப்பையை வைத்துவிட்டு சிறுநீர் கழிக்க சென்றதாகவும்; பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பணப்பையை காணவில்லை என்றும் பத்மநாபனிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, பதறிப்போன பத்மநாபன் கரூர் டவுன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், பைனான்ஸ் நிறுவன ஊழியர் பணம் திருடு போனதாக நாடகமாடியது அம்பலமானது.
போலீசாரின் விசாரணையில், அவரது நண்பர்கள் சூர்யநாராயணன், புகழேந்தி, கார்த்தி, ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பத்து இலட்ச ரூபாய் பணத்தையும் மீட்டிருக்கிறார்கள்.