திருச்சி வளவந்தான் கோட்டையில் இலவச சட்ட ஆலோசனை மையம் !
திருச்சி வளவந்தான் கோட்டையில் இலவச சட்ட ஆலோசனை மையம் – தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டை பெரியார் நகரில் உள்ள காக்கும் கரங்கள் அறக்கட்டளை, மனித வள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைப்புகள் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையத்தின் தொடக்க விழா 24.09.2023 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இவ் விழாவிற்கு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். திருச்சி மூத்த வழக்கறிஞர் காமரூதின் மற்றும் வளவந்தான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சின்னம்மாள் தேவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இலவச சட்ட ஆலோசனை மையத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் புனிதா, வனிதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த சட்ட ஆலோசனை மையத்தை நிறுவிய, குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைமை செயலர் அலுவலர் மகேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும்,“இந்த இலவச சட்ட ஆலோசனை மையம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், ஊராட்சி சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், தேசிய ஊரகை வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம், பட்டியல் சாதி மற்றும் பட்டியலின பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூல் செய்யப்படமாட்டது. வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல், நீதிமன்றங்களில் வழக்கையும் நடத்திக் கொடுப்பார்கள்” என்று இலவச சட்ட ஆலோசனை மையத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.
விழாவில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு திருவெறும்பூர் கைலாஷ் நகர் அரிமா சங்கம் சார்ந்த உமா இராமசாமி அவர்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தக்குமார் வரவேற்புரையாற்றினார். செயலாளர் திலகா நன்றியுரை கூறினார்.