ஷவர்மா, பர்கர், உணவுகளை மட்டும் குறிவைத்து ஏன் வெறுப்பு விதைக்கப்படுகிறது !
மாமிசம் மற்றும் முட்டை அடங்கிய உணவுகளை மட்டும் குறிவைத்து வெறுப்பு விதைக்கப்படுகிறது ஏன் தெரியுமா ?
மாமிசம் மற்றும் முட்டை போன்ற உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுகளை மட்டும் குறிவைத்து வெறுப்பு விதைக்கப்படுவது தெரிகிறது .
ஷவர்மா, பர்கர், போன்ற உணவுகளுக்கு எதிராக பரப்பி விடப்படும் செய்திகள், சமோசா, வடை, பஜ்ஜி, பானி பூரி, போன்றவற்றிக்கு வருவதில்லை காரணம் ஷவர்மா பர்கரில் மாமிசம் / முட்டை இருக்கிறது என்பதே.
இன்றைய சூழலில் அசைவ உணவு என்றழைக்கப்படும் மாமிசம் முட்டை மீன் சார்ந்த உணவுகளுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் என்பது அனைத்து படிநிலைகளிலும் நடந்து வருவதை அறிய முடிகிறது.
ஷவர்மா என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நாம் அனைவரும் சாப்பிட்டு வரும் உணவு பர்கரும் நகரவாசிகளுக்குப் புதிதன்று பிரியாணியும் புதிதன்று மாமிசம் உண்பதும் மனித சமுதாயத்துக்கு புதிதன்று சொல்லப்போனால் மனிதன் கற்காலத்தில் வேட்டையாடி சமூகமாக இருந்த காலத்தில் தனது ஒரு நாளைய உணவுத் தேவையில் பெரும்பகுதியை மாமிசத்தையும் முட்டையும் மீனையும் உண்டே பிழைத்து வந்தான்.
மனித இனம் இப்புவியில் வாழத் துவங்கி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாகத் தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு தானியங்கள் புழக்கத்துக்கு வந்தன.
மனிதனுக்குத் தேவையான புரதச்சத்து – தரமான புரதம் மற்றும் எளிதாக உடலால் கிரகித்துக் கொள்ளக் கூடிய புரதச்சத்து முட்டையிலும் மாமிசத்திலும் மீனிலும் உள்ளது. மனிதனின் உடலால் உற்பத்தி செய்ய இயலாத அமினோ அமிலங்கள் – முட்டையிலும் மாமிசத்திலும் மீனிலும் மேலதிகமாகக் கிடைக்கின்றன. உணவுப் பொருள் சமைக்கும் போது அது மாமிசமாகட்டும் மரக்கறி உணவாகட்டும் சுத்தமான சூழலில் சமைக்கப்பட வேண்டும். உணவுப்பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
எந்த உணவாகட்டும் அதை சமைத்த பிறகு அறை வெப்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே உணவுப் பொருட்களை வைத்திருக்க வேண்டும். அதையும் மீறி சமைத்த உணவை வைத்திருக்க வேண்டுமெனில் குளிர் சாதனப் பெட்டியில் அதற்குரிய குளிரில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
உணவகங்கள் சிலவற்றின் பேராசை காரணமாக முதல் நாள் சமைத்த உணவுகளை முறையாக பதப்படுத்தாமல் பாதுகாக்காமல் அடுத்த நாள் பரிமாறும் போக்கு இருக்கிறது. இதனாலும் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முறையாக பதப்படுத்தப்படாத உணவுகளில் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டு வளரும் வாய்ப்பு உண்டு.
உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் சமைத்த உணவை நீண்ட நேரம் வைத்திருக்கும் போதும்
என எப்போது வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம். உணவை நல்ல வெப்பத்தில் சமைக்கும் போது அதில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். இதனாலேயே உணவுகளை சமைத்து உண்ண வலியுறுத்தப்படுகிறது.
க்ரில்டு சிக்கன் , சவர்மா போன்றவற்றிற்கு சேர்க்கப்படும் மயோனேஸ் – முட்டையின் வெள்ளைக்கரு உபயோகப்படுத்தப்படுகிறது.
அதில் கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க அமிலத்தன்மை உள்ள வினிகர் / எலுமிச்சை சாறு போன்றவை சேர்க்கப்படுகின்றன. எனினும் மயோனேஸ் தயாரித்த சில மணிநேரங்களில் உட்கொள்ளப்பட வேண்டும். அதுவரை அதை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
முறையான குளிர்நிலையில் பாதுகாக்கும் போது சில நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும். எனினும் அன்றைய நாள் உண்டாக்கிய உணவை அன்றே உட்கொள்வது சிறந்தது. கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கும்.
இது போன்றே காய்கறிகளையும் கீரையையும் பச்சையாக உண்ணும் போதும் அவை கிருமித் தொற்று இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காய்கறிகளையும் மாமிசத்தையும் முட்டைகளையும் தானியங்களை அரைத்துக் கிடைக்கும் மாவு , பழங்கள் போன்றவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.
அடிக்கடி கரண்ட் கட் நடக்கும் இடங்களில் குளிர்சாதனப் பெட்டியின் உள் குளிர்நிலையை வெப்பமான கொண்டு சோதித்து வருவது நல்லது. தேவையான குளிர்நிலை பராமரிக்க இயலாத சூழ்நிலை ஏற்படின் கிருமித் தொற்று குளிர் சாதனப் பெட்டிக்குள்ளும் நடக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் உணவுகளைப் பாதுகாப்பாக வைப்பது ஒன்றும் தவறான காரியமன்று. உணவுகளை சமைக்கும் முன் கைகளை சோப் போட்டுக் கழுவிட வேண்டும். பரிமாறும் போதும் கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். உணவகங்களில் கையுறை அணிந்து பரிமாறும் சேவை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறை பல விதமான உணவுகள் அடுத்தடுத்து செய்யும் போது ஒவ்வொரு முறைக்கும் கை கழுவி விட்டு செய்யத் துவங்க வேண்டும். ஒரு உணவுப் பொருளின் கிருமித் தொற்று அடுத்த உணவுக்கு சென்று விடாமல் இந்த யுக்தி தடுக்கும்.
என்னைப் பொருத்தவரை எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகமான மாவுச்சத்தையும் அதிகமான கொழுப்புச் சத்தையும்
ஒரு சேர வழங்கும் உணவுகள் தீங்கு செய்பவை. மற்றபடி அந்த ஸ்நாக்ஸ் வகைகளில் சைவ அசைவ பாகுபாடு இல்லை
தேவையற்ற ஸ்நாக்ஸ்களை தேவையற்ற நேரத்தில் உண்பது நன்மையன்று மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ இவற்றை சாப்பிட்டால் அவை ஸ்நாக்ஸ் கணக்கில் வரும் . தீங்கு குறைவு மாறாக அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் பிரச்சனை அதிகம்.
இத்தகைய உணவுகளை சுத்தமான தரமான உணவகங்களில் வாங்கி உண்ண வேண்டியது வாடிக்கையாளர்களாகிய நமது பொறுப்பு தரமான பாதுகாப்பான சுத்தமான உணவை வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டியது உணவக உரிமையாளர்களின் பொறுப்பு
மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு தரமான சுத்தமான பாதுகாப்பான உணவை உணவகங்கள் வழங்குவதை உறுதி செய்வது உணவுப் பாதுகாப்புத் துறையின் கடமை மேற்கூறியவற்றை நாம் சரிசெய்வதை விடுத்து வெறுமனே ஷவர்மா பிரியாணி
பர்கர் மீது மட்டும் ஒருதலைபட்சமாக அவதூறு பரப்புவதால் எந்த நன்மையும் இல்லை.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை