பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…
மக்கள் தரும் நன்கொடைகளை நிதி ஆதாரமாக கொண்டு மட்டுமே அங்குசம் செயல்படுகிறது என்பதை உறுதியாக கூறுகி றோம், இப்படியாக ‘அங்குசம் செய்தி’ இதழ் எப்பொழுதுமே மக்களுக்கான இதழாக இருக்கும்jா
அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் !
நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில் உள்ள அறத்தை மட்டும் கருத்தில் கொண்டு உண்மையை சொல்ல துளியும் அச்சமில்லாது எந்த ஒரு சமரசமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்போம் இணையவழியில் தொடங்கிய எங்கள் பயணம் தற்போது அச்சு ஊடகமாக உங்கள் முன் காட்சியளிக்கிறது.
இணைய வழியில் செய்தி வெளியிடத் தொடங்கியது முதலே பல்வேறு சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, மக்களிடம் உள்ள அறியாமை என்னும் இருளில் இருந்து நீக்க அங்குசம் உழைத்துக் கொண்டிருக்கிறது. அது தன்னுடைய அடுத்த கட்ட பரிணாமத்தை அடைந்து தற்போது அச்சு ஊடகமாக உங்கள் கையில் உள்ளது.
உள்ளதை உள்ளபடியே வெளியிடும் அங்கு சத்தை அறிந்த பலருக்கும் ஒரு விஷயம் இருக்கலாம். யார் இதன் உரிமையாளர்…? இதற்கு பொருளாதார பலம் யார் என்று உங்களில் பலருக்கு கேள்வி எழலாம். மேலும் எந்த ஒரு சமரசமும் இல்லாது உண்மையை சொல்வதில் துளியும் அச்சமில்லாத எளிய மக்களுக்கான ஒரு ஊடகமாக பயணிக்கும் அங்குசத்தை பற்றிய முழு விஷயங்களையும் உங்களிடம் தெரியப்படுத்தவே இந்த பதிவு !
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் :
ஜெ.டி.ஆர், – 9488842025
எனது தந்தை ஜீவராஜ் தாவீது கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக திருச்சி ஜங்சன் பகுதியில் புத்தகக் கடை வைத்திருந்ததால் சிறுவயது முதலே புத்தகங்களோடு உரையாடத் தொடங்கி, கல்லூரி காலத்தில் தமிழ்நாட்டில் முன்னணி புலனாய்வு இதழான நக்கீரனில் மாணவப் பத்திரிகையாளராக சேர்ந்து ( 2000 முதல் 2019 வரை ) மக்களுக்கான பிரச்சினைகளை மக்களோடு இருந்தே எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து 19 ஆண்டுகாலம் பணியாற்றிய பின் தற்போது ‘அங்குசம் செய்தி’ இதழின் வழியாக மக்களில் ஒருவனாக உங்களை சந்திக்கிறேன். கடந்த காலங்களில் அநீதிக்கு எதிரான எழுதுகோலாக எப்படி இருந்தேனோ அதுபோலவே என்றும் மக்களை தெளிவுபடுத்தவும், அரசியல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்னுடைய எழுத்து தொடர்ந்து பயணிக்கும்.
நமது அங்குசம் செய்தி இதழுக்கான முழு பொருளாதாரமே மக்கள் தான், அதனால் தான் ‘அங்குசம் செய்தி’ இதழ், ‘அங்குசம் சமூக நல அறக்கட்டளை‘, வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த அங்குசம் சமூகநல அறக்கட்டளைக்கான அனைத்து நிதிகளும் மக்களிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது. மக்கள் தரும் நன்கொடைகளை நிதி ஆதாரமாக கொண்டு மட்டுமே அங்குசம் செயல்படுகிறது என்பதை உறுதியாக கூறுகிறோம், இப்படியாக ‘அங்குசம் செய்தி’ இதழ் எப்பொழுதுமே மக்களுக்கான இதழாக இருக்கும் என்பதை உறுதியோடும், உரிமையோடும் கூறிக்கொள்கிறோம். இணைந்து பயணிப்போம் !
கல்வி : –
முனைவர் நெடுஞ்செழியன்
கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் 1960 மார்ச் 9ஆம் தேதி பிறந்தவர் நெடுஞ்செழியன். இளமையிலேயே திறம்படக் கற்று எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. ஜர்னலிசம், எம்.பில், பிஜி டிப்ளமோ ஜர்னலிசம், மற்றும் அறிவியல் தமிழில் பிஎச்டி என்று தன்னுடைய கல்வியறிவை பெற்றிருக்கிறார். சிறுவயது முதலே எழுத்து மீதும் வாசிப்பின் மீது தீரா பற்று கொண்டிருந்ததால் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு கல்வி பயின்ற காலத்திலேயே பல்வேறு வகையான தலைப்புகளில் கட்டுரை எழுதியிருக்கிறார். மேலும் இவற்றுக்காக பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொழிபெயர்ப்புக் கட்டுரை, தமிழ் இலக்கியம் சார்ந்த, இலக்கணம் சார்ந்த கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவது, வாசகர் கடிதம் எழுதுவது இப்படி தன்னுடைய எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்தார். அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் முதல் முதலில் ஆராய்ச்சி மாணவராக களமிறங்கி முனைவர் பட்டம் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தமிழ்நாடு பேப்பர் மில்லில் பணியைத் தொடங்கி, 1989ம் ஆண்டில் தமிழ் பல்கலைகழகத்தில் உதவியாளராக செயல்பட்டார்.
பிறகு மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உதவி பேராசிரியராக இருந்த சமயத்தில் பணியிட மாறுதல் பெற்று திருச்சி உள்ள தூய வளனார் கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். தமிழ் பேராசிரியராகவும், தமிழ் மீது பற்று கொண்டு இருந்தாலும் அறிவியல் துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்தவர். இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று அங்குசம் இதழில் உதவி ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
மேலும் நெடுஞ்செழியன் மாணவர் சேர்க்கை பற்றி எழுதியக் கட்டுரை தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அரசாணை 93 பற்றி அவர் எழுதிய கட்டுரை அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றது. மேலும் தமிழ் திணை என்ற முதல் தமிழ் இணைய ஆய்வு பக்கத்தை தொடங்கி நடத்தி வந்தவர்.
சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி தமிழை அறிவியல் பூர்வமாக எடுத்துச் செல்லும் பணியில் முக்கியப் பங்காற்றி வருகிறார். இதழியல் துறையில் அதிக ஆர்வமும் திறனும் கொண்ட இவர் பல்வேறு சமூக அக்கறை உள்ள கட்டுரைகளை படைத்து மக்களுக்கான ஊடகமாக அங்குசத்தை எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
சினிமா : –
ஜாகிர்உசேன், உதவி ஆசிரியர்
சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த ஜாகிர் பிகாம் படிக்கும் பொழுது தன்னுடைய சினிமா சார்ந்த ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். இப்படி கல்லூரி காலம்தொட்டு கதை, கவிதை, நாவல் போன்றவற்றை வாசித்து அவற்றை காட்சிப்படுத்த ஆரம்பித்தார். இந்த ஆர்வம் இயக்குனர் பாரதியோடு அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக மறுமலர்ச்சி, கள்ளழகர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
மேலும் மாற்று மொழி படங்கள் சிலவற்றுக்கு வசனம் எழுதியுள்ளார். பிறகு இயக்குநர் பார்த்திபன் அவர்களுடன் தன்னுடைய திரைப் பயணத்தை நகர்த்திக்கொண்டு உதவி இயக்குனராக செயல்பட்ட ஜாகிர் உசேன், தற்போது படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறார். திரைத்துறை சம்பந்தமான முழு அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஜாகிர் உசேன் அங்குசம் செய்தி இதழில் சினிமா பிரிவு மற்றும் இலக்கிய பிரிவுகளை வழிநடத்தி வருகிறார்.
ஆரோக்கியம், ஆன்மீகம்:
விஜயகுமார் , யோகா ஆசிரியர்
விஜயகுமார் யோகா வை கற்றுத் தேர்ந்து, யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். சிறுவயது முதலே சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தன்னை சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு வருபவர். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்க கூடியவர். ஆன்மீகம், ஆரோக்கியம், அரசியல், சமூகம் என்று பல்வேறு தலைப்புகளில் தன்னுடைய புத்தகங்களை படைத்து சமூகத்திற்கு தன்னுடைய எழுத்துப் பணியை ஆற்றி வருபவர்.
பொதுப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களப் பணியாற்றுபவர், தனது வீட்டிலேயே இலவச நூலகம் நடத்தி வருபவர். பழைய பொருட்களை சேமித்து அதை மக்களிடம் காட்சிப்படுத்த தனது வீட்டிலேயே அருங்காட்சியகம் நடத்தி வருபவர். மேலும் தினமும் அன்னதானம், கால்நடைகளுக்கான உணவு அளிப்பது என்ற பணிகளோடு ஆதரவற்ற உடல்களை அரசு அனுமதியோடு நல்லடக்கம் செய்து வருகிறார். இவர் அங்குசம் இதழில் ஆரோக்கியம், ஆன்மீகம் சார்ந்த செய்திகளோடு உங்களை சந்திக்க வருகிறார்.
சமூகம் :
RTI சீனிவாசன், சமூக ஆர்வலர்
தற்போது திருச்சி மாவட்டத்தின் எல்லை பகுதியான பெரகம்பி கிராமத்தில் 1978ஆம் ஆண்டு பிறந்தவர் சீனிவாசன். இவர் பகுதி கிராமப்புற பகுதியாக இருந்ததால் அந்தக் காலகட்டத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிக அளவில் காணப்பட்டது. அதற்கு எதிராக அவரது தந்தை செயல்பட்டார். தந்தையைப் பார்த்து வளர்ந்த மகன் சிறுவயது முதலே சாதி ஏற்றத் தாழ்வுக்கு எதிராக செயல்பட தொடங்கினார்.
இவ்வாறு சாதிய பிரச்சனைகளுக்கு எதிராகவும், சாதி ஏற்றத்தாழ்வுகள் எதிராகவும் பேசத்தொடங்கிய சீனிவாசன் பிறகு புத்தகங்கள் நாளிதழ்கள் வாசிப்பின் மூலம் தன்னுடைய அறிவை விரிவுபடுத்திக் கொண்டார். இப்படியாக 2002ஆம் ஆண்டு பெராகம்பி பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை தருவதற்கு 200 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதை மாணவர்கள் சீனிவாசனிடம் கூற சீனிவாசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து இன்ஸ்பெக்டர் அம்பிகாபதி தலைமையிலான போலீசார் விஏஓ மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும் நீதிமன்றத்திற்குச் சென்று தண்டனை பெற்றுத் தந்தார். அப்போது வந்த நெருக்கடிகள் அனைத்தையும் சமாளித்து எந்தவித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், தொடர்ந்து செயல்பட்டு தண்டனை பெற்றுத் தந்தார்.
அந்த வழக்கில் அஞ்சாமல் செயல்பட்ட சீனிவாசனுக்கு அம்பிகாபதி அவர்கள் சட்ட புத்தகங்களை பரிசாக அளித்தார். இவ்வாறு சட்டம் புத்தகங்களைப் படித்து, சட்டஅறிவைப் பெற்றார் சீனிவாசன். பிறகு பொதுநல பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் தனது கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும் என்று தனது சொந்த செலவில் புத்தகங்களையும், நாளிதழ்களையும் தினமும் மாணவர்கள் படிப்பதற்காக பொது வெளியில் வாங்கி வைத்து மாணவர்கள் கல்வி அறிவை ஏற்படுத்தினார்.
மேலும் பொது பிரச்சினைகளில் எந்தவித சமரசங்களுக்கும் ஆட்படாமல் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பல்வேறு பொதுநல வழக்குகளை பதிவு செய்து பல்வேறு தவறுகளை தடுத்து நிறுத்தி இருக்கிறார். மேலும் 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழ்நாட்டில் முதல் முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவலைப் பெற்று போராடத் தொடங்கினர். பிறகு பல்வேறு பொது தகவலைப் பெற்று அதன் மீது வழக்குப் பதிந்து பல்வேறு குற்றங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
இப்படியாக சீனிவாசன் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டு மத்திய தகவல் ஆணையம் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் திருச்சியில் முதல் முதலில் கள ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.
இதனால் திருச்சியில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் நடைபெற்ற மிகப்பெரிய தவறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இப்படி தொடர்ந்து செயல்பட்டவர் சீனிவாசன், இதன் காரணமாக ஏற்பட்ட பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் அஞ்சாமல் இன்றுவரை களப்போராளியாக செயல்பட்டு வருகிறார். இப்படி மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கும் சீனிவாசன் தற்போது அங்குசம் அறக்கட்டளை உறுப்பினராகவும் உங்களை சந்திக்க வருகிறார்.