பெளர்ணமிக்கும் மனநோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா?
உலகின் பல்வேறு பண்டைய நாகரீகங்களிலும் மனதுக்கும் நிலவுக்கும் சம்பந்தம் உண்டென்ற நம்பிக்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் கடந்ததாகும்.
தமிழன் நிலவுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருப்பதாய் பல நூற்றாண்டுகளாய் நம்பி வந்திருக்கிறான்.
முழுநிலவு அன்று மனநலம் பாதிக்கப்பட்டோர் அதிக வன்முறையில் ஈடுபடுவதுண்டு என்ற நம்பிக்கை நம் பண்டைய காலந்தொட்டு தொடர்ந்து வரும் நம்பிக்கை.
அதனால் தான் நிலவுக்கும் நம் அறிவுக்கும் ஒரே பெயரிட்டான் மதியென்று…
மேலைநாட்டவரும் இதே நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஆகவே தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ” LUNE” என்று குறிப்பிட்டனர். மனநலக்காப்பகத்தை ” LUNATIC ASYLUM ” என்றும் குறிப்பிட்டனர்.
“LUNA” என்பவள் பண்டைய ரோமானியர்களின் நிலவுக் கடவுள் ஆவாள். அறிவுத்திறனை அளிப்பவள் என்று நம்பப்பட்டது .
இன்றளவும் முழு நிலவு / பெளர்ணமி அன்று மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் வீரியமாக தீவிரமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
ஒரு ஆய்வில் 81% மனநல மருத்துவர்களே நிலவுக்கும் மனதுக்கும் உள்ள சம்பந்தத்தை நம்புவதாகக் கூறியுள்ளனர்.
முழு நிலவு அன்று கடல் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன. நிலவுக்கு பூமியின் நீர் மீது ஆதிக்கம் இருக்கிறது. அதைப் போலவே,
மனித உடலும் 70% நீரால் ஆனது, என்பதாலும் மூளையும் கொழுப்பும் நீரும் சேர்ந்த உறுப்பு என்பதாலும் நிச்சயம் நிலவுக்கு மனிதனின் மூளை மீது ஆதிக்கம் இருக்கும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர் நம் முன்னோர்.
பூமியும் நிலவும் “TIDALLY LOCKED” அதாவது நிலவின் கொஞ்சூண்டு நிலவீர்ப்பு சக்தி கூட முழு நிலவன்று நிலவானது பூமிக்கு அருகில் வரும் போது நமது கடல் மற்றும் சமுத்திரங்கள் மீது ஈர்ப்பு சக்தியைத் தொடுத்து கடல் அலைகளை உயரமாக எழும்பச் செய்கிறது.
நிலவின் ஈர்ப்பு சக்தி (1.8 மீட்டர்/வினாடி) பூமியை ஒப்பிடும் (9.8 மீட்டர்/ வினாடி) போது ஆறு மடங்கு குறைவாக இருக்கும் போதே இந்த எஃபெக்ட்.
ஆனால் இந்த ஈர்ப்பு சக்தியெல்லாம் வெளிப்பரப்பில் இருக்கும் நீர் மீது தானே அன்றி நமது கபாலத்துக்குள் இருக்கும் நீர் மீது இருக்க இயலாது என்பதே அறிவியலாளர்களின் கருத்து. எனினும் , 16ஆம் நூற்றாண்டில் அக்கால மருத்துவர்கள் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது நிலவின் இருப்பையும் அறிந்து கொள்ளும் கணிதத்தையும் சேர்த்தே கற்றனர்.
ரத்தத்தை வெளியேற்றும் (Blood letting) அக்கால சிகிச்சை முறை, நிலவு வளரும் நாட்களில் நன்றாக வேலை செய்யும் என்றும், முழு நிலவு ஏற்கனவே நிலவும் காய்ச்சலை தீவிரப்படுத்தும் என்றும் நம்பிக்கை இருந்தது.
2013 ஆம் வருடம் மனநோய் கொண்டோரிடம் செய்யப்பட்ட ஆய்வில் முழு நிலவன்று அவர்களுக்கு 30% குறைவாகவே ஆழ்ந்த உறக்கம் கிடைத்தது. கூடவே மொத்த உறக்கத்தில் 20 நிமிடங்கள் குறைவாக உறங்கினர் என்றும் ஆய்வு முடிவு தெரிவித்தது.
2018 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வில் பைபோலார் மன நோய் கொண்டோரிடத்தில் அவர்கள் நடத்தையில், நிலவு அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது எனவும், முழு நிலவன்று அதிகமாக தீவிரத்துடனும் அதிக மனப்பிறழ்வுடன் அவர்கள் இருந்ததாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
வாலி பார் தலைமையிலான குழுவின் ஆய்வில் சிசோஃப்ரெனியா எனும் மனச்சிதைவு நோய் கொண்டோர், மன நல மருத்துவமனைகளில் அதிக தீவிரம் காட்டி அட்மிஷன் ஆவது முழு நிலவுகளில் அதிகமாக நடப்பதாகக் கூறியது.
வாங் தலைமையில் சீனாவில் 2012-2017 வரை நடைபெற்ற ஆய்வில் , 13067 சிசோஃப்ரெனியா நோயாளிகளை , 73 நிலவு சுழற்சிகள் கண்காணித்ததில் முழு நிலவன்று அவர்களிடம் நோய் தாக்கம் அதிகமாக இருந்தது தெரிந்ததாக பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறாக, பல சிறிய சிறிய ஆய்வுகள், முழு நிலவன்று, ஏற்கனவே மன நோய் குறிப்பாக சிசோஃப்ரெனியா மற்றும் பைபோலார் இருப்பவர்களுக்கு தீவிரம் கூடுகிறது என்று கூறியதே அன்றிஎந்த ஆய்வுகளினாலும் நிலவினால் அதன் ஒளியால் முழு நிலவால் , புதிதாக மனநோய் உண்டாக்க முடியும் என்று நிரூபிக்க முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பண்டைய சீன மருத்துவ முறைகளில், நிலவின் சுழற்சியுடன் மகளிரின் மாதவிடாய் சுழற்சியை ஒன்றுபடுத்தி நம்பும் நம்பிக்கை இருந்தது.
இரண்டுமே 27-28 நாட்கள் தான் என்பதாலும் இருக்கலாம். ஆனாலும் பின்னாளில் செய்யப்பட்ட ஆய்வுகளில், நிலவின் சுழற்சிக்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தம் இல்லை என்றும், நிலவின் எந்த நிலைக்கும் குழந்தைகள் பிறப்பதற்கும் சம்பந்தமில்லை என்பதும் நிரூபணமானது.
நிலவுக்கும் மனநோய்க்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்த ஆய்வொன்று 2019 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றது.
பத்து வருடங்கள் நடைபெற்ற ஆய்வில் 15 மனநோய் சிகிச்சை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்ற 17,966 பேரை 10 வருடங்கள் கண்காணித்தனர்.
அதில் முழு நிலவுக்கோ அமாவாசைக்கோ மனநோய் அதிகமாவதற்கும் குறைவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை உலகுக்கு எடுத்துரைத்தனர். அதற்கு முன்னர் ரஷ்ய நாட்டில் 2018 ஆம் ஆண்டு , பென்சா மற்றும் பென்சா ஒப்லாஸ்ட் நகரங்களின் மனநோய் மருத்துவமனைகளில் செய்யப்பட்ட ஆய்விலும் முழு நிலவன்று எந்த பெரிய மனநல பிரச்சனையும் அட்மிஷன்களும் அதிகரிக்கவில்லை என்று புரிந்தது.
தற்கால அறிவியல் ஆய்வுகளின் முடிவுப்படி, நிலவு மற்றும் அதன் தாக்கத்தால் புதிதாக மன நோய் உருவானதாக சான்றுகள் இல்லை. ஏற்கனவே மனச்சிதைவு மற்றும் பை போலார் மனநோய் கொண்டோரிடத்தில் சில ஆய்வுகளில் முழு நிலவன்று நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது தெரியவந்தது
எனினும் நீண்ட காலம் அதிகமான நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளில் நிலவுக்கும் குறிப்பாக முழு நிலவுக்கும் மனநோய்க்கும் சம்பந்தமில்லை என்ற முடிவு வெளிவந்திருக்கிறது.
நிலவுக்கும் மனநோயையும் சம்பந்தப்படுத்தும் அறிவியல் ஆய்வுகளில் போதாமை நிலையே நிலவினாலும் காலங்காலமாக நாம் நம்பி வருவதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதன்று.

இவ்வாறு முழு நிலவன்று, மனநோய் அதிகமாகிறது, அதிகமாக குற்றங்கள் நடக்கிறது என்றெல்லாம் நம்புவதற்கு பெயர்
“ட்ரான்சில்வேனியன் விளைவு” (TRANSYLVANIAN EFFECT) அதாவது ட்ரான்சில்வேனியாவில் தான் முழு நிலவன்று மனிதன் ஓநாயாக மாறுவான் என்றெல்லாம் கட்டுக்கதைகள் பரப்பி விடப்பட்டு இப்போதும் கூட பல ஹாலிவுட் படங்கள் வந்திருக்கின்றன. மற்றும் பல விளைவுகளும் உள்ளன
அவற்றுள் இரண்டு “COGNITIVE BIAS” பல விஷயங்கள் நம்மை சுற்றி நடந்தாலும், நமக்கு ஏற்கனவே முழு நிலவு குறித்தும் அமாவாசை குறித்தும் பல கருத்துகள் முன்னே மண்டையில் ஓடிக்கொண்டிருப்பதால், பெளர்ணமி/ அமாவாசை அன்று நடக்கும் நிகழ்வுகளை அதிகமாக அழுத்தி மனதில் ஏற்றிக் கொள்வது இந்த விளைவு.
மற்றொன்று “RECALL BIAS” எவ்வளவோ தற்கொலைகள், தீய சம்பவங்கள் நடந்திருந்தாலும் பெளர்ணமி / அமாவாசை அப்போது நடந்ததை மற்றும் நியாபகம் வைத்துக் கொண்டு பேசுவது…
இப்படியாக நிலவுக்கும் மனநோய்க்கும் தீர்க்கமான சம்பந்தம் இல்லை என்பது அறிவியல் இல்லை.. இல்லை பெளர்ணமிக்கும்/ அமாவாசைக்கும் மனநோய்க்கும் சம்பந்தம் உண்டு என்று நம்புவது ட்ரான்சில்வேனியன் விளைவாகும்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.